பித்தப்பையில் கற்கள் எப்படி உருவாகின்றன என்று நமக்கெல்லாம் தெரியும். ஆனால் பித்தப்பையில் கற்கள் மட்டுமன்றி அதனை வேறு பல நோய்களும் தாக்கலாம். இதில் சில நோய்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஆனவை. சில நோய்களை குணப்படுத்த இயலும் ஆனால் சில நோய்களை குணப்படுத்த இயலாது. அப்படி பித்தப்பையை தாக்கும் சில நோய்களை இங்கே பார்ப்போம்.
பித்த நீர் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கற்கள் (Common Bile Duct Stones)
பித்த நீர் குழாய்கள் பித்த நீரை எடுத்துச் செல்லும் மெல்லிய குழாய்கள் ஆகும். கல்லீரலில் இருந்து வரும் பித்தநீரை எடுத்துச் செல்லும் இந்த மெல்லிய குழாய்களில் பித்தப்பை கற்கள் சிக்கிக்கொண்டால் ஏற்படும் நோயே Choledocholithiasis என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது. கல்லீரலில் இருந்து இறங்கும் சிறிய சிறிய கற்களே இந்த பிரச்சனையை ஏற்படுத்து கின்றன.
இப்படி இறங்கும் பித்தநீர்க் கற்கள் அடைத்துக்கொண்டால் பித்தநீர் அடைபட்டு அதனால் மஞ்சள் காமாலை ஏற்படலாம். இந்த நிலை தொடர்ந்தால் தொற்று (Colingitis) ஏற்படும். இவ்வாறு வெளிப்படும் பித்தநீர்க் கற்கள் மேலும் இறங்கி கணைய குழாய்களை அடைத்துக் கொண்டால் pancreatitis என்று சொல்லப்படும் கணைய அழற்சி ஏற்படுகிறது. இந்த நிலை ஏற்படும் போது நோயாளி அபாய கட்டத்தை எட்டி உயிர் இழக்கவும் நேரிடலாம்.
அபாய கட்டத்தை எட்டிய நோயாளிக்கு உடனுக்குடன் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். அதற்கு முன்னர் ERCP என்று கூறப்படும் ஒரு முறையில் குழாயில் மாட்டிக்கொண்ட பித்தநீர்க் கற்கள் அகற்றப்படுகின்றன. அதன் பிறகு கற்கள் அகற்றப்பட்ட குழாய் பகுதியில் ஸ்டென்ட் வைக்கப்படுகிறது. இதனால் பித்தநீர் சீராக ஓடும் நிலை ஏற்படுத்தப்படுகிறது. மஞ்சள் காமாலையும் குறைகிறது. பிறகு பித்தப்பையையும் அகற்றி விடுவார்கள்.
பித்தப்பை அழுகல் (Gangrene)
பித்தப்பைக்கு உள்ள ரத்த ஓட்டம் தடைபடும் போது பித்தப்பை அழுகத் தொடங்குகிறது. பித்தப்பையில் உள்ள கற்கள் தொற்றினை தோற்றுவிக்கும் போது இந்த நிலை ஏற்படலாம். பொதுவாக கற்கள் பித்தநீரை அடைத்து விட்டால் பித்தப்பையில் பித்தநீர் தேங்கி, பல்கிப்பெருகி வீக்கம் ஏற்பட்டு தொற்றினை ஏற்படுத்துகிறது. அதனால் தொற்று மோசமடையும் போது, உடல் பருமனால் அவதிப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தவிதமான பித்தப்பை அழுகல் அதிகமாக ஏற்படுகிறது.
பித்தப்பையில் ஏற்படும் புற்றுநோய்
பித்தப் பையில் புற்றுநோய் மிக அரிதாகவே ஏற்படுகிறது. அப்படி ஏற்பட்டால் கல்லீரலுக்கு மிக அருகாமையில் இருப்பதால், புற்றுநோய் செல்கள் மிக வேகமாக கல்லீரலுக்கும் பரவுகிறது. அதனால் பித்தப் பையில் புற்றுநோய் ஏற்பட்டால் உடனுக்குடன் பித்தப்பையை அகற்றுவதே சிறந்த மருத்துவ முறை ஆகும்.
பித்தப்பையில் ஏற்படும் மருக்கள்
பித்தப்பையின் உள்சுவற்றில் சில சமயம் சிறிது சிறிதாக மருக்கள் போன்று ஏற்படலாம். அவை பெரும்பாலும் புற்றுநோய் கட்டிகள் ஆகாது. ஆனால் அந்த மருக்கள் பெரிதாகும் பட்சத்தில், அவை புற்று நோயாக மாறும் வாய்ப்புகள் அதிகம். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை முறைகளில் பித்தப்பையில் ஏற்படும் மருக்களை கண்டுபிடிக்க முடியும். இப்படி மருக்கள் பித்தப்பையில் இருப்பது தெரிந்தால் பித்தப்பையை அகற்றுவதே சிறந்த வழிமுறை ஆகும்.
ஏகால்குலஸ் கோலிசிஸ்டிடிஸ் (Acalculous Cholecystitis)
பித்தப்பைக் கற்கள் இல்லாமலே சிலசமயம் பித்தப்பை அழற்சி ஏற்படுவதுண்டு அப்படி ஏற்படும் நிலையை Acalculous Cholecystitis (ஏகால்குலஸ் கோலிசிஸ்டிடிஸ்) என்கிறோம். ICUல் இருக்கும் நோயாளிகளுக்கு, hepatitis A, இதய நோய்கள், சர்க்கரை நோய், போன்ற நோய்கள் இருந்தால் இந்த நிலை ஏற்படலாம். பித்தநீர் கெட்டியாகி பித்தப்பை உள்ளேயே தேங்கி இருந்தாலும் கூட இந்த நிலை ஏற்படலாம் என்று மருத்துவ வல்லுனர்கள் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
டைபாய்ட் பாக்டீரியாக்களின் உறைவிடமாக மாறும் பித்தப்பை
ஒரு நோயாளி டைபாய்ட் பாக்டீரியாவால் பாதிக்கப்படுகிறார் என்றால் அவருக்கு டைபாய்டு ஜுரம் ஏற்பட்டு பின் மருத்துவம் பார்க்கப்படுகிறது. அனேகமாக அவர் அதிலிருந்து மீண்டு வந்த பிறகு சில டைபாய்டு பாக்டீரியா கிருமிகள் பித்தப் பையில் தங்கிவிடும். இப்படி தங்கிய டைபாய்டு பாக்டீரியா கிருமிகள் அங்கேயே வளர்ந்து பெருகி அனேகமாக மற்றவர்களை கூட பாதிப்படைய வைக்கும் தொற்றுக் கூடாரமாக அவர்களின் பித்தப்பை மாறிவிடுகிறது. இப்படி ஒரு நிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கும் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.