பெரும்பாலான மக்கள் தங்கள் வாந்தியில் இரத்தத்தைக் காணும்போது பயந்து பீதியடைவார்கள். சில நேரங்களில் இரத்த வாந்தி எடுக்கும்போது அது உணவோடு கலந்து வெளிப்படுகிறது. மற்ற நேரங்களில் அது வெறும் இரத்தமாக மட்டுமே வெளிப்படுகிறது. இரத்த வாந்தி ஹீமாடெமஸிஸ் (hematemesis) என்று அழைக்கப்படுகிறது. இரத்த வாந்தி சிறிய அல்லது பெரிய பிரச்சினைகளின் காரணமாக இருக்கலாம். இதுபோன்ற மருத்துவ சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பார்க்கலாம்.
சிறிய காரணங்களுக்காக இரத்த வாந்தி எடுத்தல்
சில நேரங்களில் நாசி பாதையில் ஏற்படும் பிரச்சனைகள், சைனஸ், உணவுக் குழாயில் எரிச்சல், நாள்பட்ட இருமல் மற்றும் வாந்தியால் உணவுக் குழாயில் ஏற்படும் புண், தவறுதலாக சில பொருளை விழுங்குவது போன்றவற்றால் இரத்த வாந்தி ஏற்படலாம். தற்செயலாக நாசியிலோ, வாயிலோ இருக்கும் காயத்தினால் ஏற்படும் இரத்தப்போக்கை விழுங்கும்போது அதுவே இரத்த வாந்தியாக வெளிப்படலாம். சுவாசப்பாதையில் (ஏரோடிஜெஸ்டிவ் பாதை) இரத்தப்போக்கு ஏற்படும் காரணங்கள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வேறுபடுகின்றன. குழந்தைகளில், மிகவும் பொதுவான காரணம் பிறப்பு குறைபாடு ஆகும். காற்றழுத்த பாதை அல்லது மேல் செரிமான மண்டலத்தில் உள்ள நரம்புகள் அல்லது தமனிகள் அசாதாரணமாக இருந்தால் அவை கூட இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம். வாந்தியெடுத்தலே இரத்த வாந்தி ஏற்படுத்தலாம். ஏனெனில் நாள்பட்ட வாந்தியெடுத்தல் என்பது மேல் ஏரோடிஜெஸ்டிவ் பாதையில் ஒரு புண்ணை ஏற்படுத்தலாம். இதெல்லாம் பயம்கொள்ள வேண்டிய காரணங்கள் இல்லை.
பிற பொதுவான காரணங்களால் இரத்த வாந்தி எடுத்தல்
சில நேரங்களில் பொதுவான சில நிலைமைகள் இரத்த வாந்தியை ஏற்படுத்தலாம். அவற்றில் வயிற்றுப் புண், இரைப்பை அழற்சி, இரத்த சோகை, ஆஸ்பிரின் மற்றும் என்எஸ்ஏஐடி மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவை அடங்கும்.
முக்கிய காரணங்களால் இரத்த வாந்தி எடுத்தல்
சில கடுமையான நிலைமைகள் இரத்த வாந்தியை ஏற்படுத்தலாம். அவற்றில் சில கல்லீரலில் சிரோசிஸ், வயிற்றில் புற்றுநோய், உணவுக்குழாய், கணையம் மற்றும் உள்வயிற்றுச் சுவற்றில் ஏற்பாடும் புண் அல்லது கீறல் ஆகியவை. பெரியவர்களில் குறிப்பாக ஆண்களில், அதிகமாக மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், கல்லீரலில் சிரோசிஸ் உருவாகியிருந்தால், அவர்களுக்கு இரத்த வாந்தி ஏற்படுவதை பொதுவாக அவதானிக்க முடியும். மிகவும் வயதானவர்களில், இது பெரும்பாலும் மருந்தினால் தூண்டப்பட்டதாலோ, புற்றுநோயாலோ, அல்லது நீண்டகாலமாக மருத்துவமனையில் தங்கி இருப்பதாலோ கூட இரத்த வாந்தி நிகழலாம்.
நீங்கள் இரத்தத்தை வாந்தியெடுத்தால் என்ன செய்யவேண்டும்?
இரத்த வாந்திக்கு என்ன காரணம் என்று உடனடியாக தெரியாது என்பதால், உங்கள் மருத்துவரிடம் உடனே தெரிவிக்கப்பட வேண்டும். இரத்தத்தின் தன்மை, அதன் நிறம், உணவுடன் அது கலந்திருந்ததா என்று மருத்துவர் முதலில் கேட்பார். காபி-பழுப்பு அல்லது கருப்பு நிறமாக இரத்த வாந்தி இருந்தால், எதனால் இரத்த வாந்தி ஏற்படுகிறது என்பதைக் காண எண்டோஸ்கோபியை மருத்துவர் பரிந்துரைக்கலாம். எண்டோஸ்கோபி வாயிலிருந்து சிறுகுடலின் முன்பாகம் வரை சென்று எந்தவொரு உடல் பிரச்னையையும் காட்டிக் கொடுக்கும். சில பிரச்சனைகளை அங்கேயே எண்டோஸ்கோபி கொண்டு குணப்படுத்த முடிந்தால் இந்த எண்டோஸ்கோபி செயல்முறையானது சிகிச்சை அளிக்கக் கூடிய செயல்முறையாகவும் இருக்க முடியும். சரியான காரணத்தை அறிந்த பிறகு, சிகிச்சை நெறிமுறைகள் அல்லது அறுவை சிகிச்சை முறைகள் அதற்கேற்ப மருத்துவரால் வகுக்கப்படுகின்றன.
தலைசுற்றல், கண் பார்வை மங்குதல், விரைவான இதயத் துடிப்பு, சுவாசத்தில் ஏற்படும் மாற்றங்கள், குளிர்ந்த தோல், குழப்பமான உணர்வு, மயக்கம், கடுமையான வயிற்று வலி, காயம் ஏற்பட்டபின் வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், நீங்கள் அவசர மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டால் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து போகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எதுவாக இருந்தாலும், இரத்தத்தில் வாந்தி வரும்போது ஒருபோதும் பீதி அடைய வேண்டாம்! நிலைமையை அமைதியுடன் கையாண்டு உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.