பல பேர் பித்தப்பை கல்லும், சிறுநீரகக் கல்லும் ஒன்றே என்று நினைப்பார்கள். இரண்டும் வேறு என்று சொன்னால் குழம்புவார்கள். உடல் பரிசோதனையில் கல் இருக்கிறது என்று சொன்னாலே இரண்டையும் குழப்பும் மனோநிலை நம்மில் பலருக்கு உண்டு. சிறுநீரகத்தில் கல் இருப்பது நம்மில் பலருக்கு தெரிந்த அளவு பித்தப்பையிலும் கல் இருக்கும் என்பது பலருக்கு தெரியாது. சரியாகச் சொல்லவேண்டும் என்றால் பித்தப்பையில் உள்ள கற்களை பற்றி சரியான விழிப்புணர்வோ, புரிதலோ நம் மக்களுக்கு இல்லை என்றே கூற வேண்டும்.
பித்தப்பை கல்லுக்கும், சிறுநீரக கல்லுக்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள்
- சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை உண்மையான கற்கள் என்றே கூறலாம். ஏனென்றால் அவை கால்ஷியம், போன்ற மற்ற தாதுக்களில் இருந்து உருவாகின்றன. ஆனால் பித்தப்பையில் உருவாகும் கற்கள் பெரும்பாலும் கொழுப்பில் (கொலேஸ்டிரால்) இருந்தும், நிறமிகளில் (pigments) இருந்தும் உருவாகின்றன. பித்தப்பை கற்கள் பெரும்பாலும் உறுதியான கற்களாய் இருக்காமல் கெட்டியான மாவு போல இருக்கும்.
- சிறுநீரகக் கற்கள் ஆண்களுக்கு அதிகமாகவும், பித்தப்பை கற்கள் பெண்களுக்கு அதிகமாகவும் ஏற்படுகிறது.
- சிறுநீரகக் கற்கள் சிறுநீரகத்தை விட்டு வெளியே தள்ளப்பட்டால், அவை பொடியாகியோ, அப்படியேவோ சிறுநீர் குழாய் வழியாக சிறுநீரில் வெளியே வந்துவிடும். இது நல்ல விஷயம் தான். ஆனால் பித்தப்பை கற்கள் பித்தப்பையை விட்டு வெளியே வந்தால், அவை பித்தநீர் குழாயில் அடைப்பை ஏற்படுத்த எல்லா வாய்ப்பும் உண்டு. இது ஆபத்தான கட்டத்திற்கும் நம்மை இட்டுச்செல்லலாம். ஆக இது நல்ல விஷயம் இல்லை.
- சிறுநீரகக் கற்கள் இருப்பதால், சிறுநீரில் ரத்தம் கலந்து வரலாம். ஆனால் பித்தப்பையில் கற்கள் இருந்தால் மஞ்சள் காமாலை வருவதற்கு வாய்ப்பு உண்டு.
- சிறுநீரகத்தில் உள்ள கற்கள் பொடியாக இருக்கும் பட்சத்தில் அவைகளை மருந்துகள் கொண்டு கரைத்து வெளியேற்றிவிட முடியும். ஆனால் பரிசோதனையில் பித்தப்பை கற்கள் இருப்பது தெரியவந்தால், பித்தப்பையை அகற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை.
- நிறைய நீர் அருந்தினால் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஆனால் பித்தப்பையில் கற்கள் வருவதை தடுக்க வேண்டும் என்றால், அதிக மாவு சத்தும் , சர்க்கரை மட்டுமே உள்ள குப்பை உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் அல்லது கடுமையாக குறைக்க வேண்டும்.