ஃபோலேட், வைட்டமின் பி9 என்றும் அழைக்கப்படுகிறது. இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இது டிஎன்ஏ தொகுப்பு, செல்லுலார் வளர்ச்சி, நரம்பு மண்டல வளர்ச்சி (nerve system development), இரத்த சிவப்பணு உருவாக்கம் ஆகியவற்றுக்கு மிகவும் தேவைப்படுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இது முக்கியமானதாக இருந்தாலும், இளம் பருவத்தில் ஃபோலேட் மிகவும் முக்கியமானதாகிறது. இந்த இளம் பருவ காலம் விரைவான உடல், அறிவாற்றல் வளர்ச்சியால் வகைப்படுத்தப்படுகிறது.
இளம் பருவத்தினருக்கு ஏன் அதிக ஃபோலேட் தேவைப்படுகிறது?
இளமைப் பருவத்தில், உடலானது, குறிப்பிடத்தக்க வளர்ச்சி வேகம், ஹார்மோன் மாற்றங்கள், அதிகரித்த வளர்சிதை மாற்ற தேவைகள், இவற்றுக்கு உட்படுகிறது. ஃபோலேட் பின்வரும் செயல்பாடுகளைச் செய்ய உதவுவதன் மூலம் இந்த மாற்றங்களை ஆதரிக்கிறது:
- ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது
- மூளை வளர்ச்சி, மன தெளிவு ஆகியவற்றை ஆதரிக்கிறது
- திசு வளர்ச்சிக்கும், செல்லுலார் பழுதுபார்ப்புக்கும் உதவுகிறது
- ஊட்டச்சத்து குறைபாடுகளும், அது தொடர்புடைய சிக்கல்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
ஃபோலேட் ஊட்டச்சத்தானது, மெகாலோபிளாஸ்டிக் அனீமியா எனப்படும் ஒரு வகை இரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது. இந்த வகை இரத்த சோகை இளம்பருவத்தினரிடையே சோர்வு, பலவீனம் மற்றும் வளர்ச்சி தாமதங்களுக்கு வழிவகுக்கும்.
ஃபோலேட் & இரத்த சோகை ஆபத்து
நமது உடல் போதுமான ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்யாதபோது இரத்த சோகை ஏற்படுகிறது. இளம் பருவத்தினரில், ஃபோலேட் குறைபாடு மெகாலோபிளாஸ்டிக் இரத்த சோகைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இந்த நிலையில் திசுக்களுக்கான ஆக்ஸிஜன் விநியோகம் பாதிக்கிறது. இது பின்வரும் அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது:
- நாள்பட்ட சோர்வு
- மூச்சுத் திணறல்
- வெளிரிய தோல்
- கவனம் செய்வதில் ஏற்படும் சிரமங்கள்
போதுமான ஃபோலேட் இல்லாமல், இரத்த சிவப்பணுக்கள் பெரிதாகி முதிர்ச்சியடையாமல் போகின்றன. இது RBC களின் செயல்பாட்டினையும், அதன் ஆக்ஸிஜன் சுமக்கும் திறனையும் குறைக்க வழிவகுக்கிறது.
ஃபோலேட் கிடைக்கும் உணவு ஆதாரங்கள்
இளம் பருவத்தினர் ஃபோலேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும். இரத்த சோகை மற்றும் பிற குறைபாடுகளைத் தடுக்க இது அவசியம் ஆகும். ஃபோலேட்டின் நல்ல உணவு ஆதாரங்கள் இதோ:
- பச்சை காய்கறிகளும், கீரைகளும்
- பருப்பு வகைகள் (துவரை, கொண்டைக்கடலை, கருப்பு பீன்ஸ் போன்றவை)
- சிட்ரஸ் பழங்கள் (ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி)
- செறிவூட்டப்பட்ட தானியங்கள்
- வெண்ணெய் பழம் என்று சொல்லப்படும் அவகேடோ
அதிக ஃபோலேட் குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் ஃபோலேட் சப்ளிமெண்ட்களை பரிந்துரைக்கலாம். இது கட்டுப்படுத்தப்பட்ட உணவுமுறைகள் அல்லது நாள்பட்ட சுகாதார நிலைமைகளைக் கொண்ட இளம்பருவத்தினருக்கும் பொருந்தும்.
ஃபோலேட்டும் மன ஆரோக்கியமும்
பல ஆராய்ச்சிகள், உடலுக்கு தேவைப்படும் ஃபோலேட் அளவை மன நலனுடன் தொடர்பு படுத்துகின்றன. ஃபோலேட் குறைபாடு உள்ள இளம் பருவத்தினர் பெரும்பாலும் சில தீவிர நிகழ்வுகளில் அதிக மனநிலை ஊசலாட்டங்கள், எரிச்சல், மனச்சோர்வு ஆகியவற்றை அனுபவிக்கின்றனர். ஏனெனில் ஃபோலேட்டானது செரோடோனின், டோபமைன் போன்ற நரம்பியக்கடத்திகளின் (neurotransmitters) உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன்கள் மனநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு நன்கு அறியப்பட்டவை ஆகும். எனவே இளம் வயதினரின் ஆளுமை வளர்ச்சியில் ஃபோலேட் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மிகவும் வெளிப்படையானது. இது இளம் பருவத்தினரை அவர்களின் வாழ்க்கைப் பாதையிலும், பிற வெற்றிகளை வடிவமைப்பதிலும் அளப்பரிய பங்கு வகிக்கிறது.
இதன் நீண்டகால தாக்கம்
இளம் பருவத்தில் போதுமான ஃபோலேட் உட்கொள்ளல் இரத்த சோகையைத் தடுக்கிறது. இது நீண்டகால ஆரோக்கியத்திற்கும் ஒரு அடித்தளத்தை அமைக்கிறது. சரியான ஃபோலேட் அளவுகள் இளம் பெண்களில் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு செயல்பாடு, அறிவாற்றல் செயல்திறன், எதிர்கால இனப்பெருக்க ஆரோக்கியம், ஆகியவற்றுக்கு பங்களிக்கின்றன.
ஒருவர் கர்ப்பம் அடைய முயற்சி செய்தாலோ, கர்ப்பம் அடைந்துவிட்டாலோ, அவருக்கு அவசியம் ஃபோலேட் சத்து மருந்துகள் 3 மாத காலத்திற்கு முன்பிருந்தே இப்போதெல்லாம் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால் பிறக்கப்போகும் குழந்தை எந்த விதமான குறைபாடுகளுடன் பிரக்கூடாது என்ற காரணத்தினாலேயே அரசாங்கங்கள் இதனை நடை முறைப்படுத்திவிட்டனர்.
ஃபோலேட் என்பது இன்னொரு வைட்டமின் என்று மட்டும் பார்க்கக்கூடாது. இது இளம் பருவத்தினரின் வளர்ச்சியை ஆதரிக்கும், இரத்த சோகையைத் தடுக்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். டீனேஜர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் அதன் முக்கியத்துவம் குறித்து கற்பிப்பதன் மூலமும், தினசரி உணவுகளில் ஃபோலேட் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதன் மூலமும், அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
