கொலிசிஸ்டெக்டமி (Cholecystectomy) என்று சொல்லப்படும் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையானது, பித்தப்பையில் கல் இருந்தால் செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சை முறை ஆகும். இயல்பாகவே பித்தநீரானது ஈரலால் எந்நேரமும் சுரக்கப்பட்டு, பின் கெட்டியான நீர்ம பதத்தில் பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது. பித்தப்பையை அகற்றிவிட்டால் என்ன ஆகும்? உடலின் ஒரு உறுப்பை அகற்றிவிட்டால் பின்னாளில் நிறைய சிக்கல்கள் வரும் என்றே பலரும் நம்புகின்றனர். பித்தப்பையை அகற்றிய பின் நம் வாழ்கை முறை எப்படி மாறுகிறது? வாருங்கள் அலசுவோம்.
பித்தப்பையை அகற்றுவதால் ஏற்படும் விளைவுகள்
- பித்தப்பையை அகற்றுவதால், பித்தநீர் சேகரிக்கப்பட வாய்ப்பில்லாமல் போகிறது.
- அறுவை சிகிச்சைக்குப் பிறகு பித்தப்பை இப்போது இல்லாமல் போவதால், ஈரலால் சுரக்கப்படும் பித்தநீரானது, சேகரிக்கப்பட வழியின்றி நேரிடையாக சிறுகுடலுக்கு சிறு சிறு அளவுகளில் வந்து சேரும்.
பித்தப்பையை அகற்றிய பின் உள்ள வாழ்கைமுறை
- அதிக நார்ச்சத்தும், குறை கொழுப்பும் உள்ள உணவுகளை உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரைப்பார். இந்த உணவுமுறையை அறுவை சிகிச்சை முடிந்த சில வாரங்களுக்கு கண்டிப்பாக கடைபிடியுங்கள். அதன் பின் கவனத்துடன் உங்கள் பழைய (சத்தான) உணவு முறைக்கு மாறலாம்.
- பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்களில் 90% பேர், வழக்கமான உணவு முறைக்கு மாறிய பின் சிக்கல் ஏதும் இல்லை என்றே கூறுகின்றனர்.
- ஆனாலும் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பிறகு வழக்கமான உணவு முறைக்கு உடனே தடாலென மாறாமல் சிறுக சிறுக மாறினால் உடலுக்கு நல்லது.
- பலமான விருந்துகளை தவிருங்கள். அதிலும் கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிருங்கள்.
- உணவை சின்ன சின்ன அளவுகளில் நிறைய வேளை உண்பது எப்போதுமே உடலுக்கு நல்லது. இந்த முறைக்கு மாறிக் கொள்ளுங்கள்.
- இந்த சிறிய, அளவான உணவில் நல்ல கொழுப்பு சத்து இருந்தால் சிக்கல் ஒன்றும் இல்லை. சிறுகுடலில் சிறிய அளவில் வந்து சேரும் பித்தநீரே இந்த சிறிய அளவிலான கொழுப்புணவை செரிக்க போதுமானதாக இருக்கும்.
- எண்ணையில் முக்கி பொறித்தெடுத்த பண்டங்களை தவிர்ப்பது எப்போதும் நல்லதே. அதிலும் கெட்ட கொழுப்பும், மாவுச்சத்தும் சேர்ந்த இந்த பண்டங்களை அறவே தவிருங்கள்.
- நீங்கள் வழக்கமான உணவு முறைக்கு மெல்ல மாறும்போது எந்தெந்த உணவுகள் செரிமானக் கோளாறு ஏற்படுத்துகின்றன என்று கூர்ந்து கவனியுங்கள். அந்த உணவுகள் உங்களுக்கு மறுபடியும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அதனை முற்றிலும் இனி தவிருங்கள். இது அவரவருக்கு மாறுபடும்.
பொதுவாக இருக்கும் தவறான கருத்துகள்
பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையானது பெரும்பாலும் நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கே செய்யப்படுகிறது. பொதுவாகவே நாற்பது வயதுக்கு மேலே நம் உடலின் செரிமான சக்தி சிறிது மட்டுப்படும். அதனால் நாற்பது வயதுக்கு மேலே உள்ளவர்கள் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டால் அதனால் தான் தனக்கு செரிமான சக்தி குறைந்துபோய்விட்டது என்று அங்கலாய்ப்பதும் உண்டு. இது அநேகமாக தவறான பார்வையாகத் தான் இருக்கும்.
முடிவு – சென்னையில் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை நிறைய செய்யும் அறுவை சிகிச்சை நிபுணரான மரு. மாறன் அவர்கள் என்ன சொல்கிறார் என்றால், அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்றியவர்கள் மிக இயல்பான வாழ்க்கையையே வாழ்கிறார்கள். அவர் மேலும் கூறுகையில், சிறு வயது குழந்தைகளுக்கு பித்தப்பையை அகற்றினாலும் அக்குழந்தை இயல்பாகவே வளரும்.