கல்லீரலால் உற்பத்தி செய்யப்பட்ட அதிகப்படியான பித்தத்தை செறிவூட்டப்பட்ட வடிவத்தில் சேமிக்க நமது பித்தப்பை உதவுகிறது. பித்தத்தின் இந்த செறிவூட்டப்பட்ட வடிவம் அவ்வப்போது பித்தப்பையில் இருந்து வெளியேறாமல் இருக்கும்போது, அது திடமாகி கற்களை உருவாக்கும். இப்படி கற்கள் உருவாகும் பட்சத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்படுவது பொதுவான ஒரு அறிகுறியாகும். இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், கோலிசிஸ்டெக்டோமி எனப்படும் பித்தப்பை அகற்று அறுவை சிகிச்சை மட்டுமே இதற்கு தீர்வு. இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு எடை குறைப்பில் ஈடுபடலாமா?
கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிக்கப்படுவதற்கு பித்தநீர் உதவுகிறது. பித்தப்பை அகற்றப்பட்டவுடன், பித்தநீர் சேமிக்கப்பட இடமேதும் இல்லை. மாறாக அது தொடர்ந்து செரிமான உறுப்பான சிறுகுடலில் சொட்டுகிறது. உங்கள் செரிமான அமைப்பு பித்தப்பை இல்லாமல் சாதாரணமாக செயல்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஆரம்ப மாதங்களில் உங்கள் உடல் எடையை பாதிக்கக்கூடும் என்றாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்தும், உணவு முறைகளில் மாற்றங்கள் செய்தும், நீண்ட காலத்திற்கு உங்கள் எடையை மெதுவாக இழக்கவோ அல்லது பராமரிக்கவோ செய்யலாம்.
பித்தப்பை அகற்று அறுவை சிகிச்சை எடை இழப்பை ஏற்படுத்துமா?
உங்கள் பித்தப்பை அகற்றப்பட்ட பிறகு நீங்கள் ஓரளவு எடை இழப்பை அனுபவிப்பீர்கள். இது நடக்க பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
உங்கள் உணவில் இருந்து கொழுப்பு நிறைந்த உணவுகளை நீக்குதல்
பித்தப்பை நீக்கப்பட்ட பிறகு, ஆரம்ப சில நாட்களில் கொழுப்பு நிறைந்த உணவுகளை சீரணிப்பது உங்கள் உடலுக்கு கடினமாக இருக்கும். எனவே கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்குமாறு உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் உங்களிடம் சொல்லுவார் .
காரமில்லா உணவுகளை மட்டுமே உட்கொள்வது
அறுவை சிகிச்சையில் இருந்து மீளும் காலத்தில், உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் காரமில்லாத உணவுகளை மட்டுமே சாப்பிட பரிந்துரைப்பார். ஏனெனில் காரமான உணவுகள் இரைப்பையையும், குடலையும் சோர்வாக்கலாம்.
நாள் முழுவதும் சிறிய பகுதிகளாக உணவை சாப்பிடுவது
அறுவைசிகிச்சை முடிந்த உடனேயே உங்கள் உடலுக்கு விருந்து போன்று உணவை செரிக்க முடியாது. எனவே நாள் முழுவதும் சிறிய பகுதிகளாக சாப்பிட அறிவுறுத்தப்படுவீர்கள். இது எடை இழப்பைத் தூண்டும்
அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மீட்பு காலம்
எந்தவொரு அறுவை சிகிச்சைக்குப் பிறகும், நீங்கள் வலியையும் அசைவுகரியத்தையும் அனுபவிப்பீர்கள். இது உங்கள் பசியை நிச்சயமாக பாதிக்கும்.
அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வயிற்றுப்போக்கு
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் சாத்தியமான பக்க விளைவுகளில் ஒன்றான வயிற்றுப்போக்கு உங்களை பீடிக்கலாம். இந்த பக்க விளைவு தற்காலிகமானது தான். இது சில வாரங்களில் சரியாகிவிடும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நிகழ்வுகளும் உங்கள் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட வாய்ப்புள்ளது. இவை எல்லாம் உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.
பித்தப்பை அகற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் நீண்ட கால எடை இழப்பு
உங்கள் பித்தப்பை அகற்றப்பட்ட போதிலும், நீங்கள் சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் உடல் எடையை இழக்கலாம். ஆரோக்கிய குறைவு காரணமாக குறுகிய கால எடை இழப்பை பின்பற்ற பரிந்துரைக்கப்படுவதில்லை. அவை நீண்ட காலத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காகவும் அவை பரிந்துரைக்கப்படுவதில்லை. மாறாக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக உங்கள் எடை இழப்பை ஒருங்கிணைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால் நல்ல உணவுகளைத் தேர்வுசெய்யத் தயாராக இருப்பதும், வழக்கமான உடல் பயிற்சிகளில் ஈடுபடுவதுமே ஆகும்.