நெஞ்செரிச்சலும், அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்றுப்புண்ணும், தரக்கூடிய அறிகுறிகள் நெஞ்சுக்குள் ஏற்படுத்தும் வலி மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சு வலியோ என்று பலர் எண்ணுவர். நெஞ்செரிச்சலோ, மாரடைப்போ ஒருவருக்கு முதன்முதலில் ஏற்படுகிறது என்றால், இரண்டிற்கும் உள்ள வேறுபாடு நிறைய பேருக்கு தெரிவதில்லை. அது மட்டுமில்லை, திரும்ப திரும்ப அத்தகைய வலி ஏற்படும்போது, அது குறித்த தெளிவு மக்களிடம் அவ்வளவாக இல்லை என்றே சொல்லவேண்டும்.
நெஞ்செரிச்சலுக்கும், மாரடைப்புக்கும் உள்ள ஒரே மாதிரியான அறிகுறிகள்
- நெஞ்சுவலி – இரண்டிலும் தாங்கமுடியாத நெஞ்சு வலி இருக்கும். சில சமயங்களில் இடது பக்க தோள், கழுத்து, தாடை, மற்றும் கைக்கு இந்த வலி பரவும்.
- ஒரு வித குமட்டலும், அஜீரணம் ஏற்பட்டது போன்ற உணர்வும் தோன்றும்.
மாரடைப்புக்கு மட்டுமே உரிய அறிகுறிகள்
- மாரடைப்பு பெரும்பாலும் இரவிலோ, காலை வேளையிலோ ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
- தாங்க முடியாத ஒரு நெஞ்சு வலி ஏற்படும். நேரம் ஆக ஆக இந்த நெஞ்சு வலி அதிகமாகிக் கொண்டே செல்லும். சில சமயம் வலி விடாமல் பாதிக்கும் நிலைக்கு எடுத்துச்செல்லும். நெஞ்சில் மேல் ஒரு சுமக்க முடியாத பாரத்தை ஏற்றிவைத்து இருப்பதை போன்ற வலியை பலர் உணர்வார்கள். ஒரு யானை நெஞ்சில் மேல் அமரும்படியான வலி என்று கூறுவார். ஏதோ அசம்பாவிதம் என்று ஆழ் மனது அடித்துக்கொள்ளும்.
- அது மாரடைப்பு தான் என்றால் மூச்சு விட நிறைய சிரமம் இருக்கும்.
- திடீரென்று வியர்க்கும். வியர்வை சில்லென்ற உணர்வை தரும். இந்த உணர்வு பெரும்பாலும் நமது மனதிற்குள் எழும் பயத்தால் ஏற்படுவது.
- ஒரு வித குமட்டல் உணர்வு இருக்கும். மிகுந்த களைப்பை உணர்வார்கள்.
- நடக்க முடியாத நிலை ஏற்படும். நடந்தாலும் நாக்கு தள்ளும்.
- வீட்டில் உள்ள எந்த மருந்திற்கும், குறிப்பாக நெஞ்செரிச்சல் மருந்துக்கு மாரடைப்பு வலி நிற்காது.
யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்?
- நீங்கள் ஆணாக இருந்து, நாற்பது வயதுக்கு மேல் உள்ளவராக இருந்தால், உங்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.
- உங்கள் பரம்பரையில் யாருக்காவது மாரடைப்பு இளம் வயதில் வந்து அவர்கள் இறந்திருந்தால் உங்களுக்கும் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.
- புகை பிடிக்கும் பழக்கம், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு, நீரிழிவு நோய் போன்றவை இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.
நெஞ்செரிச்சலுக்கு மட்டுமே உரிய அறிகுறிகள்
- நெஞ்செரிச்சல் அடிக்கடி முன்னர் ஏற்பட்டு இருக்கலாம்.
- பொதுவாக இந்த நெஞ்செரிச்சல் சாப்பிட்டபின் வரும். அதுவும் கொழுப்பு மிகுந்த உணவை உட்கொண்ட பின் அதிகமாக ஏற்படும்.
- நெஞ்செரிச்சல் மாத்திரைகள், குளிர்ந்த நீர் போன்றவற்றிற்கு நெஞ்செரிச்சல் கேட்கும். சிறிது மட்டுப்படும்.
- இப்படியாக வரும் நெஞ்செரிச்சலை கூர்ந்து கவனித்தால், அந்த எரிச்சல் மேல் வயிற்றுப் பகுதியிலும், நெஞ்சுக்கூட்டுக்கு சற்றே கீழேயும் இருக்கும். இந்த வலியும் அதிகப்படியாக வலது புறத்தில் தான் இருக்கும். இடது பக்கத்திலும் வலி இருக்கலாம்.
- வாயில் ஒரு வித புளித்த அல்லது கசப்பான சுவையை இந்த நெஞ்செரிச்சல் உண்டுசெய்யும். இந்த சுவை வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்கள் உணவுக்குழாயின் வாயிலாக மேலே எழுந்து நாவில் படுவதால் உண்டாவது.
மாரடைப்பையும், நெஞ்செரிச்சலையும் எப்படி உறுதி செய்வது?
- ECG (electrocardiogram) பரிசோதனைகள் கொண்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியலாம். இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கின்றனவா என்று கண்டறிய எக்கோ (echocardiogram), நெஞ்சு X-rays, ஆஞ்சியோ பரிசோதனைகள் போன்ற இதர சோதனைகளும் உதவுகின்றன.
- நெஞ்செரிச்சல் (GERD) இருக்கிறதா என்பதை கண்டறிய எண்டோஸ்கோபி (endoscopy) உதவுகிறது.
உங்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும்?
சென்னையில் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் மாறன் அவர்கள் நெஞ்சு வலி ஏற்பட்டால் உடனே அது மாரடைப்பு இல்லை என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். தாங்க முடியாத நெஞ்சு வலி ஏற்படும் பட்சத்தில், உடனே ஏதாவது மருத்துவமனையின் எமெர்ஜென்சியில் சேர்ந்து ECG எடுத்துக்கொள்ளவும். பாதுகாப்பிற்கு ஒரு ஆஸ்பிரின் (350 mg) மாத்திரையை உங்கள் பையில் எப்போதும் வைத்திருங்கள்.
நெஞ்செரிச்சலைக் காட்டிலும் மாரடைப்பை கண்டுபிடிப்பதற்கே முக்கியத்துவம் தரவேண்டும். ஏனென்றால் நெஞ்செரிச்சல் உயிரை கொல்லாது ஆனால் வலிமையான மாரடைப்பு ஆளையே கொல்லும். இந்த கட்டுரையில் நெஞ்செரிச்சலையும், மாரடைப்பையும் வேறுபடுத்திப் பார்க்க சொல்லப்பட்டு இருந்தாலும், உங்கள் நெஞ்சு வலி அதிகமாக இருந்தால் உடனே ஆம்புலன்சை அழைத்து முதலுதவி எடுத்துக்கொள்வது நல்லது. நெஞ்சக நிபுணர் உங்களை பரிசோதித்து மாரடைப்பு இருக்கிறது, இல்லை என்று உங்களுக்கு அறிக்கை கொடுப்பதே முதன்மையானது. மாரடைப்பு இல்லை என்று உறுதியானால், பின்பு வயிறு சம்பந்தப்பட்ட நிபுணரிடம் எண்டோஸ்கோபி செய்துக்கொண்டு நெஞ்செரிச்சல் என்று சொல்லக்கூடிய GERD இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ளலாம். அதனால் தான் இல்லாத மாரடைப்பை பரிசோதித்து பார்த்து இல்லை என்று ஆனாலும் அது ஒரு வகையில் நல்லது என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.