Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

உயர் இரத்த சர்க்கரை அளவு உங்கள் கண்களையும் பார்வையையும் எப்படியெல்லாம் பாதிக்கலாம்

62 மில்லியன் நீரிழிவு நோயாளிகளுடன், இந்தியா உலகின் நீரிழிவு நோயாளர்களின் தலைநகராக விளங்குகிறது. இது உலகின் மொத்த நீரிழிவு நோய் உள்ளவர்களில் (422 மில்லியன்) 15% ஆகும். நீரிழிவு நோய் என்பது உயர் இரத்த சர்க்கரை அளவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகரித்த பசி மற்றும் தாகம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் ஒரு வித வளர்சிதை மாற்றக் கோளாறுகளின் தொகுப்பாகும். சிகிச்சையளிக்கப்படாமல் விட்டுவிட்டால், நீரிழிவு நோய் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இதன் பொதுவான நீண்டகால சிக்கல்களில் சில, இதய நோய்கள், பக்கவாதம், சிறுநீரக நோய்கள், புற வாஸ்குலர் நோய்கள் ஆகும். ஆனால் உயர் இரத்த சர்க்கரை அளவு குருட்டுத்தன்மைக்கும் வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பதால் ஏற்படக்கூடிய சில சிக்கல்கள் இந்த கட்டுரையில் பார்ப்போம்.

நீரிழிவு நோய் கண்களையும் பார்வையையும் எவ்வாறு பாதித்து குருட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது?

நீரிழிவு காரணமாக ஏற்படும் நீரிழிவு ரெட்டினோபதி (Retinopathy)

விழித்திரை என்பது உங்கள் கண்ணின் பின்புறத்தில் இருக்கும் உயிரணுக்களின் ஒரு திசுக்குழுவாகும். இது ஒளியை எடுத்து, அதை படங்களாக மாற்றி, பார்வை நரம்பு (optic nerve) வழியாக மூளைக்கு அனுப்புகிறது. நீரிழிவு ரெட்டினோபதி என்பது உயர் இரத்த சர்க்கரை அளவு விழித்திரைக்கு போகும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும் ஒரு நோய் நிலை ஆகும். ஒருவருக்கு உயர் இரத்த சர்க்கரை இருந்து, அவர் அதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், அது இரத்தக் கசிவுக்கு வழிவகுத்து, விழித்திரை இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. இது நிரந்தர பார்வை இழப்பு அல்லது குருட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது.

உயர் இரத்த சர்க்கரை காரணமாக ஏற்படும் மங்கலான பார்வை

உங்கள் பார்வை மங்கலாக இருப்பதை நீங்கள் கவனிக்க நேர்ந்தால், உங்களுடைய வயது 40க்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருக்கலாம். மங்கலான பார்வை சில நேரங்களில் அதிக இரத்த சர்க்கரையால் ஏற்படலாம். நீங்கள் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவைக் கொண்டிருக்கும்போது, உங்கள் கண்களில் உள்ள இயற்கை லென்ஸ் வீங்கி, அதனால் உங்களுக்கு பார்வை மங்கலாகிவிடும். உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை குறைந்தது 3 மாதங்களுக்கு இயல்பு நிலையில் வைத்திருப்பது உங்கள் பார்வையை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவலாம்.

நீரிழிவு நோய் கண்புரையை ஏற்படுத்தலாம்

கண்புரை என்பது நம் கண்களில் உள்ள லென்ஸ் மேகமூட்டமடைந்து பார்வை சமரசம் செய்யப்படும் ஒரு நிலை ஆகும். மங்கலான நிறங்கள், மங்கலான அல்லது இருமடங்காக தெரியும் பார்வை, இரவில் மோசமான பார்வை போன்றவை மாறுபட்ட கண்புரையின் அறிகுறிகள் ஆகும். பொதுவாக, கண்புரை என்பது வயதாகும்போது மக்கள் பெரும் ஒரு நோயாகும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களை விட வேகமாக கண்புரை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நீரிழிவு காரணமாக ஏற்படும் கிலகோமா

கிலகோமா என்பது இன்னொரு வித கண் நோயாகும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களை விட அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. கிலகோமா நிகழும்போது கண்களிலிருந்து நீர் வடிவது தடைபடுகிறது. இது கண்களில் நீர் கோர்ப்பையும், அதேவேளை கண்களுக்கு அதிகரித்த அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இந்த மிக உயர்ந்த அழுத்தம் பார்வை நரம்பு (optic nerve) மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தி பார்வை கோளாறை ஏற்படுத்தக்கூடும். இது சரிபார்க்கப்படாமல் விட்டுவிட்டால், பார்வைக்கு நிரந்தர சேதம் ஏற்படலாம். இதனால் நிரந்தர குருடாக்கலாம். நீரிழிவு மற்றும் கிலகோமா மரபாக ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே உங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு இந்த இரண்டு நோய்களும் இருந்தால் கண்டிப்பாக கவனியுங்கள்.

Exit mobile version