Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மேல் நீரிழிவு நோய் ஏற்படுத்தும் தாக்கம்

நீரிழிவுநோயானது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் ஒரு நாள்பட்ட நிலை ஆகும். இது உங்கள் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது இரத்த சர்க்கரை அளவைப் பற்றியது மட்டுமல்ல. நமது நோயெதிர்ப்பு மண்டலத்தில் அது ஏற்படுத்தும் விளைவு பற்றியது. இது மேலும் ஆராய்ச்சிக்குரிய ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இரத்த சர்க்கரை அளவுகள் சீராக உயரிய அளவில் இருப்பது இறுதியில் உடலின் தொற்று-எதிர்ப்பு திறன்களை பலவீனப்படுத்தும். இது நாம் நோய்களுக்கு உள்ளாவதை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயானது நோயெதிர்ப்பு செயல்பாட்டை எப்படி பாதிக்கிறது, தொற்று அபாயத்தை எப்படி அதிகரிக்கிறது என்பதை இந்த கட்டுரை ஆராய்கிறது. நீரிழிவு நோயை திறம்பட நிர்வகிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கான வழிகளையும் இது ஆராய்கிறது.

நீரிழிவு நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி எல்லாம் பலவீனப்படுத்துகிறது

சர்க்கரை நோய் நமது உடலில் உள்ள இயற்கையான பாதுகாப்பு வழிமுறைகள் பலவற்றிலும் பல வழிகளில் குறுக்கிடுகிறது. இந்த குறுக்கீடுகள் தொற்றுகளுக்கு எதிரான நம் உடலின் போராட்டத்தையும், சரியான குணப்படுத்துதல் திறனையும்  சிக்கலாக்குகிறது.

1. உயர் இரத்த சர்க்கரை அளவு வெள்ளை இரத்த அணுக்களை பாதிக்கிறது

நோயெதிர்ப்பு பாதுகாப்பிற்கு வெள்ளை இரத்த அணுக்கள் மிக முக்கியமான கூறுகள் ஆகும். ஆனால் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, ​​அவற்றின் செயல்திறன் குறைகிறது. இதன் விளைவாக, நோய்த்தொற்றுகளுக்கு உடலின் எதிர்வினை மந்தமாகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு காயங்கள், சளி மற்றும் பல்வேறு தொற்றுகளிலிருந்து மீள்வதற்கான காலத்தை நீட்டிக்க வழிவகுக்கிறது.

2. அதிகரித்த அழற்சி

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாள்பட்ட அழற்சி பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது உடலில் அழற்சி எதிர்வினையைத் தூண்டுகிறது. இது படிப்படியாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, தொற்றுநோய்களுக்கு ஆளாகும் தன்மையை அதிகரிக்கிறது.

3. மோசமான இரத்த ஓட்டம் குணமடைதலை மந்தமாக்குகிறது

நீரிழிவு நோய் போதுமான இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் நுண் நாளங்கள் வழியாக கைகால்களுக்கு இரத்த விநியோகம் சரிவர இருக்காது என்பது உண்மையே. இரத்த ஓட்டம் குறையும் போது, ​​தொற்று இருக்கும் காயம் உள்ள பகுதிக்கு குறைவான நோயெதிர்ப்பு செல்கள் மட்டுமே வருகின்றன. இந்த நிலையில் தான் நீரிழிவுநோயாளர்களின் கால் புண்கள் குணமாகாமல் போய் சிக்கல்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பொதுவான தொற்றுகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருக்கும். எனவே அவர்களுக்கு குறிப்பிட்ட தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகம். அடிக்கடி ஏற்படும் தொற்றுகளில் சில இதோ:

நீரிழிவு நோய் இருந்தும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வழிகள்

நீரிழிவு நோய் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. ஆனால் நீரிழிவு நோயை முதலில் இருந்தே சரிவர நிர்வகிப்பதால் அதன் அபாயங்களைக் குறைத்து நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

1. இரத்த சர்க்கரை அளவைப் பராமரித்தல்

உணவுமுறை, மருந்து, உடற்பயிற்சி ஆகியவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமான வரம்பிற்குள் வைத்திருக்க உதவும். இந்த வாழ்க்கை முறை மாற்றம் உங்கள் நோயெதிர்ப்பு செயல்பாட்டை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும்.

2. ஊட்டச்சத்து நிறைந்த உணவைப் பின்பற்றுங்கள்

ஏராளமான பழங்கள், காய்கறிகள், புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட சமச்சீர் உணவு ஆகியவை நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இந்த மூலங்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் துத்தநாகம் (zinc) நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

3. உடலை சுறுசுறுப்பாக வைத்திருங்கள்

வழக்கமான உடற்பயிற்சி முறையைப் பின்பற்றுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அழற்சியைக் குறைக்கிறது. இந்த நேர்மறையான மாற்றம் நோயெதிர்ப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட உதவுகிறது.

4. நல்ல சுகாதாரம், காயம் பராமரிப்பு – சரிவர பின்பற்றுங்கள்.

தொடர்ந்து கை கழுவுதல் மற்றும் வாய்வழி சுகாதாரம் தொற்றுகள் மற்றும் சிக்கல்களைத் தடுக்க உதவும். உங்கள் உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா என தினமும் ஒரு முறை சரிபார்க்கவும். ஏதேனும் காயம் இருந்தால், அதை உன்னிப்பாகக் கண்காணிப்பதன் மூலம் அவை எவ்வாறு குணமாகியுள்ளன என்பதைச் சரிபார்க்கவும். உங்கள் கால்களில் உள்ள காயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.  

நீரிழிவு நோயால் நமது நோயெதிர்ப்பு அமைப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறைவான நோய் எதிர்ப்பு சக்தி தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது, அதன் மீட்பைத் தடுக்கிறது. ஆனால் எல்லாம் முடிந்துவிட்டதாக நினைக்க வேண்டாம். நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும், தடுப்பு உத்திகளைச் செயல்படுத்துவதன் மூலமும் தங்கள் நோயெதிர்ப்பு செயல்பாட்டையும் பொது ஆரோக்கியத்தையும் கண்டிப்பாக பாதுகாக்க முடியும். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். நீரிழிவு மருத்துவவருடன் சேர்ந்து முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடனே முயற்சி செய்யுங்கள்.

Exit mobile version