இரத்த சோகை என்பது உலகளவில் மில்லியன் கணக்கான நபர்களை பாதிக்கும் ஒரு மருத்துவ நிலையாகும். இது ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாததால் ஏற்படுகிறது. புண்களின் தாக்கம், குறிப்பாக வயிறு அல்லது குடலில் உள்ள புண்கள், இரத்த சோகைக்கான பல காரணங்களில் ஒன்றாகும். இந்த காரணம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. செரிமான மண்டலத்தின் உள்ள வயிற்றின் உள்சுவற்றில் (புறணி) மீது, புண்கள் உருவாகும். இது உட்புற இரத்தப்போக்கை ஏற்படுத்தும். இந்த இரத்தப்போக்கு தொடர்ச்சியாக இருந்து, அதை நாம் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், கணிசமான இரும்புச் சத்து இழப்பு ஏற்படலாம். இதன் விளைவாக இரத்த சோகை ஏற்படும். ஒரு நபருக்கு அல்சர் மற்றும் இரத்த சோகை இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அறிகுறிகளையும், இருக்கும் சிகிச்சை முறைகளையும் இந்த பதிவில் பார்ப்போம்.
அல்சர் புண்களைப் புரிந்துகொள்வோம்
அல்சர் புண்கள் என்பது வயிற்றின் உள் சுவற்றிலும், மேல் சிறுகுடல் அல்லது உணவுக்குழாயிலும் ஏற்படும் திறந்த புண்கள் ஆகும். பின்வரும் காரணங்களால் இந்த புண்கள் அடிக்கடி நிகழலாம்:
- நோய்த்தொற்றுகள் – ஹெலிகோபாக்டர் பைலோரி (H. pylori) பாக்டீரியாவால் சேதமடைந்த உட்புற வயிற்றுச்சுவற்றில் ஏற்படும் தொற்றுகள்.
- மருந்துகள்- ஆஸ்பிரின், ஐப்யூபுரூஃபன் போன்ற NSAID வகை மருந்துகளை நீண்டகாலத்திற்கு பயன்படுத்தினால் உட்புற வயிற்றுச்சுவர் (புறணி) எரிச்சல் அடையலாம்.
- வாழ்க்கை முறை காரணிகள் – புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், அதிக அளவு மன அழுத்தம் ஆகியவை அல்சர் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
செரிமான மண்டலத்தில் உள்ள பாதுகாப்பு உட்புற படலம் போன்ற அமைப்புகளான புறணி சேதமடைந்தால், வயிற்று அமிலம் இந்த திசுக்களை அரித்து, வலிமிகுந்த புண்களை ஏற்படுத்தும். இந்த புண்களில் இருந்து சில நேரங்களில் இரத்தம் வரக்கூடிய சாத்தியம் உள்ளது. நீண்ட காலத்திற்கு இது தீர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டால், அவை தொடர்ந்து இரத்த இழப்பு ஏற்படுத்தும் பட்சத்தில், அது இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.
தொடர்ச்சியான இரத்தப்போக்கு ஏற்படுத்தும் புண்கள் ஏன் இரத்த சோகைக்கு வழிவகுக்கும்
-
இரத்தப்போக்கு புண்களில் இருந்து ஏற்படும் இரத்த இழப்பு
இரத்த சோகையை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களுள் ஒன்று உள் இரத்தப்போக்குஆகும். இந்த புண் ஏற்படுத்தும் அரிப்பு இரத்தக் குழாய்க்குள் ஊடுருவும்போது இரைப்பை குடல் அமைப்பில் உள் இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம். இந்த இரத்தப்போக்கு திடீரெனவும் கடுமையாகவும் ஏற்படலாம் அல்லது மெதுவாகவும், தொடர்ச்சியாகவும் ஏற்படலாம். இதன் விளைவாக நாள்பட்ட இரத்த இழப்பு ஏற்படலாம்.
- இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை: புண் காரணமாகவும், அது ஏற்படுத்திய நீண்ட கால இரத்த இழப்பு காரணமாகவும் உடலின் இரும்பு இருப்பு குறைகிறது. ஆக்ஸிஜனை வழங்கும் இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு வகை புரதம் ஹீமோகுளோபின் ஆகும். இது சரியாக செயல்பட இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை, உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும்போது ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை நம் உடல் குறைவாக உற்பத்தி செய்வதால் ஏற்படுகிறது.
- கடுமையான இரத்த இழப்பு இரத்த சோகை: ஒருவருக்கு வயிற்றுப்புண் இருந்து அவர் கடுமையான இரத்தப்போக்கு அனுபவிக்கும் போது கடுமையான இரத்த இழப்பு வகை இரத்த சோகை ஏற்படலாம். இரத்தத்தை வேகமாக இழக்க நேரிடுவைத்தால் சோர்வு, தலைச்சுற்றல், விரைவான இதயத் துடிப்பு ஆகியவை அறிகுறிகளாக வெளிப்படும்.
-
இரும்புச்சத்து போதுமான அளவு உறிஞ்சப்படாமல் இருப்பது
அல்சர் உள்ள சில நோயாளிகள் இரத்தத்தை இழப்பது மட்டுமின்றி அவர்களுக்கு இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் கூட பிரச்சனை இருக்கலாம். சிறுகுடலின் மேல் பகுதியில் புண்கள் உருவாகி அது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கும் பட்சத்தில் இரும்புச்சத்து மற்றும் பிற முக்கிய கூறுகள் உடலில் இருந்து மேலும் குறையக்கூடும்.
உற்று கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
இரத்த சோகையும், அல்சர் புண்களும் தனித்துவமான சில அறிகுறிகளைக் கொண்டுள்ளன. ஆரம்பகால நோயறிதலும், சிகிச்சையும் இந்த அறிகுறிகளை அங்கீகரிப்பதன் மூலம் நடக்கலாம்.
- அல்சரின் சில முக்கிய அறிகுறிகள்:
- வயிற்றில் குடையும் ஒரு வித வலி, பெரும்பாலும் உணவுக்கு இடையிலோ, இரவிலோ ஏற்படும்
- குமட்டல் அல்லது வாந்தி
- உப்புசம், துர்நாற்றம்
- வாந்தி அல்லது மலத்தில் இரத்தம், கருமையாகவோ தார் நிறத்திலோ தோன்றும்
- இரத்த சோகையின் சில முக்கிய அறிகுறிகள்:
- சோர்வு, பலவீனம்
- வெளிர் தோல், உடையக்கூடிய நகங்கள்
- மூச்சுத் திணறல்
- தலைச்சுற்றல்
- கை கால்கள் குளிர்ச்சியடைதல்
வெளிறிய தோல், வயிற்றில் அசௌகரியம், சோர்வு போன்ற அறிகுறிகளையோ, இந்த அறிகுறிகளின் கலவையையோ நீங்கள் அனுபவித்தால், உங்களுக்கு இரத்த சோகையை ஏற்படுத்தும் புண் இருக்கலாம்.
அல்சர் தொடர்பான இரத்த சோகையைக் கண்டறிதலும் சிகிச்சையும்
-
நோய் கண்டறிதல்
அல்சர் தொடர்பான இரத்த சோகையை கண்டறிவது பின்வரும் காரணிகளின் கலவையை உள்ளடக்கியது ஆகும்:
- இரத்த பரிசோதனைகள்: இரும்பு அளவு, ஹீமோகுளோபின் மற்றும் பிற இரத்த சோகை தொடர்பான மார்க்கர்களை சரிபார்ப்பது.
- எண்டோஸ்கோபி: வயிறு மற்றும் குடல்களில் ஏதேனும் புண்கள் உள்ளதா என அறுவை சிகிச்சை நிபுணரால் கண்டறியப்படும் ஒரு பயனுள்ள நுட்பம் ஆகும். தொண்டையில் கேமரா பொருத்தப்பட்ட நெகிழ்வான குழாயைச் செருகுவதன் மூலம் இது கண்டறிய உதவுகிறது.
- மல பரிசோதனைகள்: மலத்தில் மறைந்திருக்கும் இரத்தத்தை பார்க்க, இது உட்புற இரத்தப்போக்கு இருக்கிறதா என்று பார்க்க பரிந்துரைக்க்கப்படுகிறது.
-
சிகிச்சை தேர்வு விருப்பங்கள்
அல்சர் புண்களால் ஏற்படும் இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பது இரத்த சோகை மற்றும் அடிப்படை வயிற்றுப் புண் இரண்டையும் நிவர்த்தி செய்ய வேண்டும்.
- அல்சருக்கு:
- மருந்துகள்: புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்கள் (PPIs) மற்றும் H2 blockers ஆகியவை வயிற்றில் அமிலத்தைக் குறைப்பதற்கும் குணப்படுத்துவதை மேம்படுத்துவதற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படும் சில மருந்துகளாகும்.
- ஆண்டிபையோட்டிக்குகள் : எச்.பைலோரி தொற்று காரணமாக அல்சர் இருந்தால், அந்த வகை பாக்டீரியாவை அழிக்க ஆண்டிபையோட்டிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
- வாழ்க்கை முறை மாற்றங்கள்: மன அழுத்தத்தைக் குறைப்பது, மது அருந்துவதைத் தவிர்ப்பது, புகைப்பிடிப்பதை நிறுத்துவது ஆகியவை அல்சர் மீண்டும் வருவதைத் தடுக்க உதவும்.
- இரத்த சோகைக்கு:
- இரும்புச் சத்துக்கள்: இரும்புச் சத்தை மீண்டும் அதிகரிக்க, இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தலாம். ஹீமோகுளோபின் அளவு 8 கிராமுக்குக் கீழே குறையும் தீவிர சூழ்நிலைகளில் இரத்தமாற்றம் அல்லது நரம்பு வழியாக ஊசி மூலம் இரும்புச் சத்து இன்ஜெக்ஷன் ஏற்றுவது தேவைப்படலாம்.
- உணவு சரிசெய்தல்: இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கோழி இறைச்சி, பச்சை காய்கறிகள், கீரைகள், இரும்புச்சத்து சேர்க்கப்பட்ட தானியங்கள் போன்றவற்றை உட்கொள்வது ரத்த சோகையை குணப்படுத்த உதவும்.
இரத்த சோகைக்கும், வயிற்றுப் புண்களுக்கும் இடையே உள்ள தொடர்பு, பொது ஆரோக்கியத்தை பேண இரைப்பை குடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறது. இரத்தப்போக்கு புண்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நாள்பட்ட இரத்த இழப்பு ஆகியவற்றால் உடலில் இரும்புச்சத்தின் அளவுகள் பெரிதும் பாதிக்கப்படலாம். இந்த நாள்பட்ட இரத்த இழப்பானது இரத்த சோகை மற்றும் அதனுடன் செல்லும் அறிகுறிகளிலால் உண்டாகிறது. வயிற்றுப் புண்கள் மற்றும் இரத்த சோகை இருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டால், ஆரம்பகால நடவடிக்கை மிகவும் முக்கியமானது ஆகும். இரண்டு நோய்களையும் திறம்பட நிர்வகிக்க முடியும். இதற்கு வாழ்க்கை முறை மாற்றங்களுடன் இணைந்த சரியான சிகிச்சை நெறிமுறை தேவை. உங்கள் இரத்த சோகை அல்சரால் ஏற்பட்டு இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசுங்கள். இதன் மூலம் உங்களுக்கு தேவையான சரியான சிகிச்சையை நேரத்திற்கு பெறலாம்.