புற்றுநோயைக் கையாள்வது ஒரு கடினமான விஷயம் தான். இது நோயாளியின் உடல் ஆரோக்கியம் அவர்களின் உணர்ச்சி மற்றும் மன நலன் போன்றவற்றில் அதீத தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிகிச்சையின் போதும் அதற்குப் பின்னரும் புற்றுநோயாளிகளுக்கு முழுமையான ஆதரவையும் ஆறுதலையும் வழங்குவது பேலியாட்டிவ் கவனிப்பின் மூலம் பெருமளவில் சாத்தியமாகிறது.
புற்று நோயை தீர்க்கும் எந்த சிகிச்சையையும் அளிக்க முடியாத நோயாளிகளுக்கு பேலியாட்டிவ் கவனிப்பு அளிக்கப்படுகிறது. இந்த கட்டுரை பேலியாட்டிவ் கவனிப்பின் முக்கியத்துவம் பற்றியும், மேலும் புற்றுநோயாளிகளின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை எப்படி அது மேம்படுத்துகிறது என்பதைப் பற்றியும் விவாதிக்கிறது.
பேலியாட்டிவ் கவனிப்பை புரிந்துக்கொள்வோம்
நோயறிகுறி மேலாண்மை, வலி மேலாண்மை மற்றும் புற்றுநோயாளிகளின் உணர்ச்சி, சமூக மற்றும் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம், பேலியாட்டிவ் கவனிப்பு ஒரு சிறப்பான அணுகுமுறையாக இருக்கிறது. நோயின் நிலையைப் பொருட்படுத்தாமல், நோயாளியின் நல்வாழ்வை மேம்படுத்தும் குறிக்கோளுடன் பேலியாட்டிவ் கவனிப்பு இயங்குகிறது.
பேலியாட்டிவ் கவனிப்பு என்பது பேலியாட்டிவ் சிகிச்சையிலிருந்து வேறுபட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
புற்றுநோய் நோயாளிகளுக்கான பேலியாட்டிவ் கவனிப்பின் குறிக்கோள்கள்
- வலி மற்றும் அறிகுறி மேலாண்மை: பேலியாட்டிவ் கவனிப்பு புற்றுநோயாளிகளை முடிந்தவரை வலி மற்றும் அசௌகரியத்தை உணர வைக்காமல் ஆறுதல் அளிக்கிறது. இந்த கவனிப்பு முறை நோயாளியின் மன அமைதியை ஓரளவு மேம்படுத்துகிறது.
- மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைத் தரம்: பேலியாட்டிவ் கவனிப்பு என்பது உடல் மற்றும் உணர்ச்சிப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சிக்கிறது.
- உணர்ச்சி மற்றும் உளவியல் ஆதரவு: புற்றுநோய் நோயாளிகள் அடிக்கடி கவலையையும், மன வேதனையையும் அனுபவிக்கின்றனர். பேலியாட்டிவ் கவனிப்பு இந்த சிரமங்களை சமாளிக்க வழிகாட்டுகிறது.
- கவனிப்பின் ஒருங்கிணைப்பு: புற்றுநோயியல் நிபுணர்களுடன் சேர்ந்து, பேலியாட்டிவ் கவனிப்பு நிபுணர்கள் நோயாளிகள் முழுமையான, நன்கு ஒருங்கிணைந்த சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்கிறார்கள்.
பேலியாட்டிவ் கவனிப்பின் நன்மைகள்
- ஒரு முழுமையான அணுகுமுறை: நோயாளிகளுக்கு பேலியாட்டிவ் கவனிப்பை வழங்கும்போது உடல், உணர்ச்சி மற்றும் ஆன்மீகத் தேவைகள் அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
- குறைந்த மருத்துவமனை அட்மிஷன்கள்: பயனுள்ள பேலியாட்டிவ் கவனிப்பானது அவசர சிகிச்சை, மருத்துவமனையில் அட்மிஷன் போன்ற தேவைகளை பெருமளவு குறைக்கும்.
- சிறப்பாக முடிவெடுத்தல்: சிகிச்சைக்கான முடிவெடுக்கும் செயல்முறை, வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் நோயாளிக்கு செய்யப்படும் கவனிப்பு, நோயாளிக்கும், அவர் குடும்பங்களுக்கும் திருப்தியான முறையில் பேலியாட்டிவ் கவனிப்பின் மூலம் நிகழ்கிறது.
- நோயாளிக்கு அதிகாரமளித்தல்: பேலியாட்டிவ் கவனிப்பானது, நோயாளிகளை, அவர்களையும் பராமரிப்பு செயல்பாட்டில் இணைத்துக்கொள்வதன் மூலம் அவர்களின் சிகிச்சை செயல்பாட்டில் அவர்களே ஆர்வமாக பங்கேற்கும் மனநிலையை அவர்களுக்கு வழங்குகிறது.
பேலியாட்டிவ் கவனிப்பை எப்போது கருத்தில் கொள்ள வேண்டும்
பொதுவாக சொன்னால், நோய் தீர்க்கும் சிகிச்சையை அளிக்க முடியாத நோயாளிகளுக்கு பேலியாட்டிவ் கவனிப்பு அளிக்கப்படுகிறது. குணப்படுத்தும் சிகிச்சை சாத்தியமற்றது என்பதற்கு பின்வரும் உதாரண நிலைகள் உள்ளன
- புற்றுநோயின் மேம்பட்ட நிலை (பொதுவாக நிலை 4)
- புற்றுநோயின் மறுநிகழ்வு
- வயது மற்றும் உடற்தகுதி காரணி
- அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை – உதாரணமாக புற்றுநோய்க்கட்டித் திசுக்கள் பெருநாடியைத் (aorta) தொட்டிருந்தால், அறுவை சிகிச்சை செய்ய முடியாது.
- சில மருந்துகள் கொடுக்க முடியாத நிலை
பேலியாட்டிவ் கவனிப்பை கருத்தில் கொள்ள:
- நோயறிதலின் போது: ஆரம்பகால பேலியாட்டிவ் கவனிப்புகள் நோய் அறிகுறிகளை நிர்வகிக்க உதவும்.
- சிகிச்சையின் போது: பேலியாட்டிவ் கவனிப்புடன் புற்றுநோய் சிகிச்சையை நிறைவு செய்வது ஒட்டுமொத்த குணப்படுத்தும் செயல்முறையை மேம்படுத்தும்.
- மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையின் போது: மேம்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பேலியாட்டிவ் கவனிப்பு முக்கியமானது. ஏனென்றால் நோயின் முன்னேற்றம் காரணமாக சில சிகிச்சை முறைகளே அப்போது எஞ்சி இருக்கும்.
பேலியாட்டிவ் கவனிப்புக் குழு
பேலியாட்டிவ் கவனிப்புக் குழுவில் பொதுவாக பின்வருவன அடங்கும்:
- பேலியாட்டிவ் கவனிப்பு மருத்துவர்: வலி மற்றும் அறிகுறிகளை நிர்வகிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.
- செவிலியர்கள்: கவனிப்பு மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்க உதவுவார்.
- சமூக பணியாளர்கள்: உணர்ச்சி மற்றும் நடைமுறை தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு உதவுவார்.
- ஆன்மீக ஆலோசகர்கள்: நோயாளிகள் விரும்பினால் ஆன்மீக ஆதரவை வழங்க இவர்கள் உதவுவார்கள்.
- மருந்தாளுநர்கள்: மருந்துகள் மற்றும் சாத்தியமான பக்க விளைவுகளை நிர்வகிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூட உதவுவார்கள்.
- உளவியல் ஆலோசனை வழங்குபவர்கள்.
புற்றுநோயாளிகளுக்கு, பேலியாட்டிவ் கவனிப்பு என்பது அவர்களின் சிகிச்சையின் போது அவர்களின் ஆறுதல் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்தும் ஒரு முக்கியமான ஆதரவு முறையாகும். பேலியாட்டிவ் கவனிப்பு நோயாளிகளுக்கு அவர்களின் கண்ணியத்தையும் அவர்களின் வாழ்க்கையின் மீது ஒரு வித கட்டுப்பாட்டையும் வைத்திருக்க உதவுகிறது. அதே நேரத்தில் அவர்களின் வலி, அறிகுறிகள் மற்றும் உணர்ச்சித் தேவைகளை நிர்வகிப்பதன் மூலம் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை அது மேம்படுத்துகிறது. மருத்துவ சிகிச்சைக்கு அப்பாற்பட்ட ஒரு முழுமையான அணுகுமுறையை வழங்குவதன் மூலம், புற்றுநோய் சிகிச்சையில் பேலியாட்டிவ் கவனிப்பை முன்கூட்டியே ஒருங்கிணைத்தால் நோயின் மோசமான விளைவுகளை கணிசமாக கட்டுப்படுத்தலாம். சுருக்கமாக, பேலியாட்டிவ் கவனிப்பு புற்றுநோயாளிகளுக்குத் தேவையான முழு உதவியைப் பெறுவதை உறுதி செய்கிறது.