இந்தியாவில் பெரியவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் நீரிழிவுநோய் ஒரு பொதுவான நிலையாகிவிட்டது. 20-79 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு டைப்-2 நீரிழிவானது 2000 ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை, 32 மில்லியனிலிருந்து கிட்டத்தட்ட 74 மில்லியனாக, அதாவது இருமடங்காக அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் கண்டறியப்படாத நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையே குறைந்தது 39 மில்லியனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. நீரிழிவு நோய் சில ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை கொடுக்கிறது. இதனை கல்வியறிவு அவ்வளவாக இல்லாத நபர்களால் கூட நன்றாக கவனித்து அறிய முடியும். நீரிழிவு நோயின் 10 எச்சரிக்கை அறிகுறிகளின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர் கழிப்பதற்காக அடிக்கடி இரவில் கழிவறைக்குச் செல்வது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரில் இரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். நீரிழிவு நோயின் போது, சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை அகற்ற கடினமாக உழைக்கிறது. ஆனால் இறுதியில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், சிறுநீரகங்கள் தொடர்ந்து சீராக செயல்படாது, மேலும் அவை அதிகப்படியான சர்க்கரையை சிறுநீரில் அனுமதிக்கின்றன. இந்த அதிகப்படியான சர்க்கரை அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது.
அதிக தாகம்
அடிக்கடி சிறுநீர் கழிப்பதால், உடல் இயல்பை விட விரைவாக நீரிழப்புக்கு ஆளாகிறது. இழந்த திரவத்தை ஈடுசெய்ய, உடல் அதிக தண்ணீரைக் கோருகிறது. இது அதிக தாகத்தை ஏற்படுத்தி, அதனால் அதிக தண்ணீர் குடிக்கும் ஆசைக்கு வழிவகுக்கிறது.
தொற்றுநோய்கள் தொடர்ச்சியாக ஏற்படுவது
பொதுவாக, சிறுநீர் பாதையில் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்களின் அளவு உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. சிறுநீரில் அதிகப்படியான சர்க்கரை இருந்தால் அதுவே சிறுநீர் பாதையில் இருக்கும் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்களுக்கு உணவாக செயல்படுகிறது. இதனால் அவை விரைவாக பெருகும். எனவே நீரிழிவு நோயாளிகளிடையே சிறுநீர் பாதை நோய்த்தொற்று தொடர்ச்சியாக ஏற்படுவது மிகவும் பொதுவாக நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக இந்த பிரச்சனை பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.
தீராத பசி
நமது உடல் குளுக்கோஸ் என்ற எளிய சர்க்கரையிலிருந்து சக்தியைப் பெறுகிறது. நாம் உண்ணும் உணவு குளுக்கோஸாக உடைக்கப்படும்போது இந்த சக்தி கிடைக்கிறது. இந்த குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் இருந்து உடலின் செல்களுக்குச் சென்று தேவையான ஆற்றலை அளிக்கிறது. நீரிழிவு நோயாளிகளில், இந்த செயல்முறை திறமையாக செயல்படுவதில்லை. அதாவது, உடலின் செல்களுக்கு போதுமான குளுக்கோஸ் செல்லாமல் இருக்கும். அதிக குளுக்கோஸைப் பெறுவதற்கு உடல் தொடர்ந்து உணவைத் தேடும் நிலைக்கு மெனக்கெடுகிறது. இது உடலை அதிகமாகச் சாப்பிடத் தூண்டுகிறது. அதனால்தான் நீரிழிவு நோயாளிகளுக்கு தீராத பசி இருக்கும்.
சோர்வும் பலவீனமும்
இந்த காரணி குளுக்கோஸை ஒழுங்காக உடைக்க உடலின் இயலாமையுடன் நெருக்கமாக தொடர்புடையது ஆகும். உடலில் எரிபொருள் (குளுக்கோஸ்) வேகமாக வெளியேறி, மேலும் அதனை வேண்டி உடல் ஏங்கும்போது, நீரிழிவு நோயாளி சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்கிறார். மேலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும், நீரிழப்பு ஏற்படுவதும் இந்த சோர்வையும் பலவீனத்தையும் கூட்டுகிறது.
எடை இழப்பு
வழக்கமான உணவில் இருந்து போதுமான ஆற்றலைப் பெறாததால் நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள கொழுப்பும் தசைகளும் எரிக்கப்பட அது உடலைத் தூண்டுகிறது. உணவிலோ, உணவுப் பழக்கத்திலோ எந்த வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், இது நீரிழிவு நோயாளியின் எடையைக் குறைக்கிறது.
மங்கலான அல்லது மோசமான பார்வை
இரத்த ஓட்டத்தில் அதிகப்படியான சர்க்கரை உங்கள் கண்களில் உள்ள சிறிய இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இதுவே நீரிழிவு நோயாளிக்கு மங்கலான அல்லது மோசமான பார்வையை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில், கண்களுக்கு உள்ளே உள்ள லென்ஸ்கள் வீக்கமடையலாம். ஆனால் சர்க்கரை அளவு குறைந்தால் இந்த வீக்கம் குறைகிறது. ஆரம்பகால சிகிச்சையானது இந்த சேதங்களை சரிபார்க்க உதவலாம். ஆனால் அதனை சரிபார்க்காமல் விட்டுவிட்டால், அவை நிரந்தர பார்வை இழப்புக்கு கூட வழிவகுக்கலாம்.
காயங்கள் மெதுவாக குணமாதல்
ஒரு நீரிழிவு நோயாளியின் இரத்த நாளங்களும் நரம்புகளும் மெதுவாக சேதமடைவதால், உடலில் இரத்த ஓட்டம் மெல்ல பலவீனமடைகிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளிக்கு உடலில் ஏற்படும் காயங்கள் குணமடைய நேரம் எடுக்கும்.
உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு
ஏற்கனவே கூறப்பட்ட மோசமான இரத்த ஓட்டம் மற்றும் நரம்பு சேதத்தின் காரணிகள் நீரிழிவு நோயாளியின் கைகளிலும் கால்களிலும் கூச்ச உணர்வு, உணர்வின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்.
தோலில் ஏற்படும் திட்டுகள்
கழுத்து, அக்குள், இடுப்பு ஆகியவற்றின் மடிப்புகளில் உள்ள தோல் பகுதியில் ஏதேனும் திட்டுகள் உள்ளதா என கவனிக்க வேண்டியது அவசியம். மேற்கூறிய பகுதிகளில் கருமையான, வெல்வெட் போன்ற திட்டுகள் இருந்தால், அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.