பிரபலமான கருத்துக்கு மாறாக, இரத்த சோகை பெண்களுக்கு மட்டுமே ஏற்படுவதில்லை. ஆண்களும் குழந்தைகளும் கூட இரத்த சோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. சொல்லப்போனால், குழந்தைகளில் இரத்த சோகை மிகவும் பொதுவானது. ஒரு வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளில் 70% க்கும் அதிகமானோர் இரத்த சோகைக்கு உள்ளாவார்கள் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. அந்த அளவிற்கு இந்தியாவில் குழந்தை பருவ இரத்த சோகை பாதிப்பு இருப்பது உண்மை. மேலும் இது குறித்து தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.
இந்தியாவில் குழந்தைகளில் இரத்த சோகையை தீர்மானிக்கும் காரணிகள்
இந்தியாவில், இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் பி 12 குறைபாடுகள், இவையே குழந்தைகளில் இரத்த சோகை ஏற்பட பொதுவான காரணங்களாகும். பிற பொதுவான காரணங்களாக குழந்தை நீண்ட காலத்திற்கு தாய்ப்பால் குடிப்பதை கூறலாம். ஏனென்றால், அத்தகைய குழந்தைகள் தாயின் பாலை மட்டுமே ஊட்டத்திற்கு நம்பியிருக்கும். இது போதுமான இரும்புச்சத்தை வழங்குவதில்லை. அல்லது தாய்ப்பாலுடன் அவர்களின் அற்ப உணவு அவர்களுக்கு தேவையான இரும்புச்சத்தை வழங்க முடிவதில்லை.
குடல் புழுக்கள் இருப்பதும் ஒரு மருத்துவர் தேடும் பிற காரணங்களுள் ஒன்றாகும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு இது அதிகம் இருப்பது உண்மை. ஒரு எளிய மலப்பரிசோதை குழந்தைகளின் குடலில் புழுக்கள் இருப்பதை எளிதாகக் குறிக்கும்.
நாம் கவனிக்க வேண்டிய இன்னும் ஒரு காரணி மலேரியா தொற்று ஆகும். மலேரியா ஏற்பட்டால், சிவப்பு ரத்த அணுக்கள் அழிக்கப்படுகின்றன. இதுவும் இரத்த சோகை நிலையை ஏற்படுத்துகிறது.
பெண் குழந்தைகளில் இரத்த சோகையை தீர்மானிக்கும் காரணிகள்
பருவ வயது பெண் குழந்தைகளில் இரத்த சோகைக்கு இளவயது முதல் ஏற்படும் மாதவிடாய் ஒரு முக்கிய காரணியாகும். இது பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு காரணி என்றே சொல்லியாகவேண்டும். மேலும் இந்தியாவில் பள்ளிக்குச் செல்லும் பருவ வயதுப் பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் பரவலாக உள்ளது. சில நேரங்களில் அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் இரும்பு, ஃபோலேட் மற்றும் பிற வைட்டமின்கள் குறைவான உணவு இரத்த சோகைக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கின்றன.
குழந்தைகளில் இரத்த சோகை அறிகுறிகள்
– லேசாக இருக்கும் பொதுவான பலவீனம்
– குழந்தைகள் எளிதில் சோர்வடைவது
– வெளிர் நிற அல்லது மஞ்சள் நிற தோல்
– நகக்கண் இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டு இருப்பது
– இரத்த சிவப்பணுக்கள் வேகமாக அழிக்கப்படும் இரத்த சோகை வகைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வந்த தோல் நிறமும், கண்களின் மஞ்சள் நிறமும்.
– கடுமையான அறிகுறிகளாக மூச்சுத் திணறல், விரைவான இதயத் துடிப்பு, தலைவலி, தலைச்சுற்றல், வீங்கிய கைகள் அல்லது கால்கள் போன்றவை இருக்கும்.
குழந்தைகளில் பிற அறியப்படாத இரத்த சோகை வகைகள்
– மெகாலோபிளாஸ்டிக் அனீமியா
– ஹீமோலிடிக் அனீமியா
– ஏபிளாஸ்டிக் அனீமியா
– சிக்கிள் செல் இரத்த சோகை (மரபணு காரணங்களால் ஏற்படுவது)
– தலசீமியா (மரபணு காரணங்களால் ஏற்படுவது)
குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்பட குறைவாக அறியப்பட்ட பிற ஆபத்து காரணிகள்
– குறைமாதப் பிறப்பு ஒரு முதன்மை காரணி
– குழந்தைக்கு இருக்கும் நீண்ட கால நோய்கள்
– விபத்துகளால் ஏற்படும் வழக்கத்துக்கு மாறான அதிக இரத்த இழப்பு
– அரிவாள் செல் இரத்த சோகை அல்லது தலசீமியாவின் குடும்ப வரலாறு இருக்கும் மிக அரிதான மரபணு காரணங்கள்
குழந்தைகளுக்கு இரத்த சோகை நோயைக் கண்டறிதலும் சிகிச்சையும்
இரத்த சோகை கண்டறிய முழுமையான இரத்த எண்ணிக்கை (சிபிசி) எனப்படும் Complete Blood Count (CBC) மற்றும் பெரிபரல் ஸ்மியர் சோதனை (Peripheral Smear Test ) ஆகிய இரண்டு சோதனைகள் முதற்கட்டமாக செய்யப்படுகின்றன. இந்த இரண்டு சோதனைகள் கொடுக்கும் துப்புகளைப் பார்த்த பிறகுதான் மற்ற அனைத்து குறிப்பிட்ட வகை சோதனைகளும் செய்யப்படுகின்றன.
குழந்தைகளுக்கு இரத்த சோகைக்கான சிகிச்சை இரத்த சோகைக்கான காரணத்தைப் பொறுத்து அமையும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது இரும்பு, ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி 12 இன் குறைபாட்டால் ஏற்படுகிறது என்பதால், குழந்தைகளுக்கு வைட்டமின் மற்றும் தாது சொட்டுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதனோடு குழந்தைகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்க பரிந்துரைக்கப்படுகின்றன. இவை தவிர உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் பி 12 மற்றும் பிற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவை மருத்துவர் பரிந்துரைக்கிறார். பொதுவான அல்லது குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் கண்டறியப்படாவிட்டால், குழந்தைகளுக்கு குடற்புழுக்களை கொல்லும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. குறைபாடு காரணங்களைத் தவிர வேறு ஏதேனும் குறிப்பிட்ட காரணங்கள் இருப்பதை சோதனைகள் சுட்டிக்காட்டினால், அதற்கான குறிப்பிட்ட பரிசோதனைகள் உத்தரவிடப்படுகின்றன. அதன்படி சிகிச்சை திட்டங்கள் மருத்துவரால் வகுக்கப்படுகின்றன.