ஆம். நீங்கள் நாள் தவறாமல் ஜிம்முக்கு போய் உடல் பயிற்சி செய்துவந்தால், உடலுக்கு நல்லதே. இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. ஆனால் நீங்கள் பருமனாக இருக்கும் பட்சத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய முற்படுதல் நல்லதா என்றால்? வாருங்கள், ஆராய்வோம்.
உங்கள் BMIல் தான் எல்லாம் உள்ளது
உங்களது BMI 25-30 வரை இருந்து நீங்கள் அதிகமான உடல் எடை உடையவராகவோ, BMI 30-35 வரை இருந்து நீங்கள் ஓரளவு பருமனானவராகவோ, எந்தவிதமான நோய்வயப்பட்ட நிலையலும் நீங்கள் இல்லாமல் இருந்தால், உடல் எடையை குறைக்க ஜிம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.
BMI உங்களுக்கு 35க்கு அதிகமாக இருந்துவிட்டால், ஜிம் செல்வது நல்லது என்றாலும் கூட, நீங்கள் நினைத்தபடிக்கு அங்கே சென்று உடற்பயிற்சியில் ஈடுபட முடியாது.
ஜிம் போகும்போது கவனத்தில் வைக்கவேண்டிய சில விஷயங்கள்
- ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். ஜிம் சென்று தான் உடலை குறைப்பேன் என்று நீங்கள் சபதம் எடுத்துவிட்டால், அது ஒரு நீண்ட பயணம் என்பதை என்றைக்கும் மறக்காதீர்கள். நீங்கள் இந்த முயற்சியில் வெற்றியை விட தோல்வியையே அதிகமாக சந்திப்பீர்கள் என்பதே யதார்த்தம். ஏனென்றால் அவர்கள் தங்கள் முயற்சியை தொடராததே பிரதான காரணம். ஆக வெற்றி என்பது உடனே வருவது இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் உடல் “கொழுப்பு சேமிக்கும் கிடங்காக” பல காலம் இருந்தபடியால், உடனே குழுப்பை கரைக்க அது பல வகையில் முட்டுக்கட்டை போடும். அதனால் மனம் தளராமல் தினமும் முயற்சியை தொடரவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
- நீங்கள் உடல் பயிற்சி செய்யத்தொடங்கிய சில வாரங்ககுக்கு உடல் எடை குறைப்பு நடைபெறும். ஆனால் போகப்போக உடல் எடை குறைப்பு குறைவாகவே காணப்படும். இதனால் ஒரு வித அலுப்பு மேலோங்கத்தொடங்கும். நல்ல மனவலிமையால் மட்டுமே இந்த பாதிப்புகளில் இருந்து விடுவித்துக்கொண்டு உங்களை தட்டிக்கொடுக்க இயலும். அதனால் எக்காரணம் கொண்டும், வெற்றி எளிதாக வந்து சேரும் என்று எண்ணவேண்டாம்.
- வெறும் ஜிம் மட்டுமே சென்று பயிற்சிகள் பல செய்வேன், ஆனால் கண்டதை திண்பேன் என்று நினைத்தால், அங்கே மாபெரும் தவறினை செய்கிறீர்கள். ஆரோகியமான உணவு உட்கொள்கிறோமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். சரியான உணவு மிக முக்கியம் என்பது உண்மை. உடல் பயிற்சியும், சரியான டையட்டும் (diet) இரு கைகளைப்போன்றது. இரண்டு கைகளை தட்டினால் தானே தாளம்…அது போலவே இரண்டும் சேர்ந்தே இருந்தால் தான் உடல் பருமனை எதிர்த்த உங்கள் போர் வெற்றி பெறும்.
- நோய்வயப்பட்ட நிலையை எட்டிய பருமனானவர்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை சந்தித்து என்னென்ன உடல் பயிற்சிகளை செய்யலாம், செய்யக்கூடாது என்று ஒரு பட்டியலை வாங்கிவிடுவது சிறந்தது. உண்மையை சொல்லவேண்டும் என்றால் இந்த நிலையை அடைந்தவர்களுக்கு சவால்கள் நிறைய.
- உங்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் இருக்கும் பட்சத்தில் மேலும் சிக்கல் உண்டு. நீங்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை நாடியே தீர வேண்டும். ஏனென்றால் சில உடல் பயிற்சி முறைகள் விபரீதமாக முடிய வாய்ப்புகள் அதிகம்.
பொதுவாகவே “மிகவும் பருமன்”, “மிக மிக பருமன்” என்ற வகையில் வருபவர்களுக்கு ஜிம் சென்று உடற்பயிற்சிகள் செய்வதென்பது ஒரு நடக்காத காரியம். அதில் நிறைய யதார்த்த சிக்கல்கள் உள்ளன. அதனால் உடல் பருமனை குறைக்க அவர்களுக்கு சிறந்த தேர்வாக பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறைகள் (Bariatric Surgical Procedures) இருக்கின்றன. பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டு பிறகு ஜிம்முக்கு சென்றால், உங்கள் எடையை கண்டிப்பாக கட்டுக்குள் வைத்து, இனிய வாழ்கையை வாழலாம்.