நீங்கள் மனக்கவலை அடையும்போதோ அல்லது அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போதோ வயிற்றில் ஏற்படும் ஒருவித உணர்வை நீங்கள் உணர்ந்ததுண்டா? உங்கள் மூளையும், இரைப்பை குடலும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதற்கான சான்று இதுவாகும். நமது செரிமான அமைப்பு நமது மன நலனுக்கு ஏற்ப ஒத்திசைந்து செயல்படுகிறது என்பதை பல ஆய்வுகள் நமக்குக் சுட்டிக்காட்டுகின்றன.
நமது உடல் மற்றும் செரிமான அமைப்புக்கு இடையிலான இந்த தொடர்பு பல உடல் செயல்பாடுகள் சரிவர நடைபெற முக்கியமானது ஆகும். இதன் பொருள் என்னவென்றால், உங்கள் செரிமான அமைப்பின் ஆரோக்கியம் உங்கள் மன நலனையும் சார்ந்துள்ளது என்பதாகும். மலச்சிக்கல் என்பது கவலை மற்றும் மன அழுத்தத்தின் விளைவாக ஏற்படும் ஒரு பொதுவான செரிமான பிரச்சனை. இது சைக்கோஜெனிக் மலச்சிக்கல் (Psychogenic Constipation) என்று அழைக்கப்படுகிறது.
கவலை ஏன் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது?
இரைப்பைக் குழாயில் அமைந்துள்ள உள்ளுறுப்பு நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியான வாகஸ் நரம்பு, உங்கள் மூளை மற்றும் உங்கள் நரம்பு மண்டலத்தின் முன்னும் பின்னுமாக தொடர்பு கொள்ளும் நியூரான்களைக் கொண்டுள்ளது. பதட்டம் அதிகரிக்கும் காலங்களில், உங்கள் செரிமான மண்டலத்தில் செரோடோனின் என்ற ஹார்மோனின் அளவை கூட்டுகிறது. இது உங்கள் வயிறு மற்றும் பெருங்குடலில் பிடிப்பை ஏற்படுத்துகிறது. உங்கள் பெருங்குடல் வழியாக பிடிப்பு ஏற்பட்டால், அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். பெருங்குடலின் சில தனித்த பகுதியில் பிடிப்பு ஏற்பட்டால், மலச்சிக்கல் ஏற்படலாம்.
மன அழுத்தம் அல்லது பதட்டமான சூழ்நிலைகளின் போது, நம் உடலில் உள்ள அட்ரீனல் சுரப்பிகள் எபினெஃப்ரின் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றன. இந்த எபிநெஃப்ரின் குடலில் இருந்து இரத்தத்தை இதயம், நுரையீரல் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்கு திருப்பி விடுகிறது. குடலுக்கு இந்த குறைக்கப்பட்ட இரத்த ஓட்டம் குடல் இயக்கத்தை இயல்பை விட குறைக்கிறது. இது மலச்சிக்கல் ஏற்பட வழிவகுக்கிறது.
கார்டிகோட்ரோபின்-வெளியிடும் காரணி (சி.ஆர்.எஃப்), Corticotrophin-releasing factor (CRF), என்பது உடல் பதட்டமான சூழ்நிலைகளில் வெளியிடும் மற்றொரு ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் குடல் இயக்கங்களை குறைத்து மலச்சிக்கலை ஏற்படுத்துவதன் மூலம் குடலின் இயக்கத்தில் நேரடியாக தலையிடுகிறது.
மலச்சிக்கலை நிறுத்த நீங்கள் என்ன செய்யலாம்?
– பதட்டம் மற்றும் மன அழுத்தம் தொடர்பான மலச்சிக்கலைக் கட்டுப்படுத்த சில சிறந்த வழிகள் உள்ளன. அவை நல்ல உணவை எடுத்துக் கொள்ளுதல், நிறைய தண்ணீரை உட்கொள்வது, தாராளமாக உணவில் நார்ச்சத்தை எடுத்துக்கொள்வது என்பன ஆகும். மருத்துவர் அறிவுறுத்தாவிட்டால் மலமிளக்கி பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான உடல் செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகளே குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது. இது மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தலாம்.
– அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் மற்றும் எண்ணையில் வறுத்து, பொறித்து எடுத்த, நிறைந்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
– புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும்.
– யோகா பயிற்சி மற்றும் பிற உடற்பயிற்சிகளையும் முறையாக செய்து வாருங்கள். இவை மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும். இதனால் குடல் நன்றாக இயங்கி உங்கள் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்த வழிவகுக்கும்.