பெரும்பாலும் கொலஸ்ட்ராலும் கொழுப்பும் ஒன்று தான் என்று அநேகமானவர்கள் குழப்பமடைகிறார்கள். மேலும் கொழுப்பு உடல் பருமனையும் கொலஸ்ட்ரால் இதய நோய்களையும் ஏற்படுத்துகிறது என்ற பொதுவான கருத்து உள்ளது. 70, 80 களில் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடந்த தகவல் திணிப்புகளால், கொலஸ்ட்ராலும் கொழுப்பும் உடலுக்கு மொத்தமாக கெட்டது என்றும், அவை இரண்டும் ஒன்றுதான் என்றும் நம் ஆழ்மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல விஷயங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. வாருங்கள் விவாதித்து அறிந்துக்கொள்வோம்.
கொழுப்பு என்றால் என்ன?
எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், கொழுப்புகள் என்பது கிளிசரால் (Glycerol) என்ற கலவையுடன் இணைக்கப்பட்ட கொழுப்பு அமிலங்களின் (fatty acids) ஒற்றை மூலக்கூறுகள் ஆகும். இது கொழுப்பின் மிகவும் பிரபலமான வடிவமாகும். அவை LIPIDS எனப்படும் இரசாயன கலவையின் ஒரு வடிவம். இது இறைச்சி (சிவப்பு, வெள்ளை), பாலாடைக்கட்டி, பால் பொருட்கள், தாவர எண்ணெய்கள் போன்ற பெரும்பாலான உணவுகளில் இயற்கையாகவே காணப்படுகிறது.
கொழுப்பின் முக்கிய வகைகளாக Saturated, Unsaturated ஆகிய இரண்டு வகைகளை கூறலாம். Saturated கொழுப்புகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த விதிக்கு விதிவிலக்குகள் உள்ளன.
கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற கலவைகள் ஆகும். உயிரணுக்களைச் சுற்றி சவ்வுகளை உருவாக்க அவை பொதுவாக உடலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதாவது உடலில் உள்ள உயிரணுக்களை பாதுகாக்க இது உடலால் செய்யப்படுகிறது. கல்லீரல் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் உறுப்பு ஆகும். கொலஸ்ட்ரால் இயற்கையாகவே சிவப்பு இறைச்சி, சீஸ், வெண்ணெய் மற்றும் முட்டை ஆகியவற்றில் காணப்படுகிறது. கொலஸ்ட்ராளும் LIPIDS இன் ஒரு வடிவமே ஆகும்.
குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதங்கள் (LDL) மற்றும் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதங்கள் (HDL) ஆகியவை கொலஸ்டிராலின் இரண்டு முக்கிய வகைகள் ஆகும். பொத்தாம்பொதுவாக பேசினால், அதிக எல்டிஎல் அளவு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது இதய நோய்களை உண்டாக்கும். அதே போல அதிக HDL அளவு ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும், இது இதயத்தைப் பாதுகாக்கும் என்றும் ஆய்வுகள் சொல்லுகின்றன.
கொலஸ்ட்ராலும் கொழுப்பும் வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்ட லிப்பிட்களின் இரண்டு வேறுபட்ட வடிவங்கள் ஆகும். அவை வேதியியல் ரீதியாக ஒரே மாதிரியானவை அல்ல.
கொலஸ்ட்ராலுக்கும் கொழுப்புக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகள்
- கொழுப்பு உடலுக்கு ஒரு ஆற்றல் மூலமாகும். ஆனால் கொலஸ்ட்ரால் ஒரு ஆற்றல் மூலம் இல்லை. அதாவது கொழுப்பை கலோரிகளாக எரிக்க முடியும், அதே நேரத்தில் கொலஸ்ட்ராலை ஆற்றலாக மாற்ற உடலால் எரிக்க முடியாது. கீட்டோ உணவு முறையில் ஆற்றலை வழங்க கொழுப்பு எவ்வாறு எரிக்கப்படுகிறது என்பதற்கான வழிமுறையை அறிந்துகொள்வதன் மூலம் இதை எளிதில் புரிந்துக் கொள்ளலாம்.
- கொழுப்பு என்பது கண்ணுக்கு புலப்படும் ஒன்று. உதாரணமாக அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பு திசு போன்றது. அதனை கண்களால் காண முடியும். மறுபுறம், கொலஸ்ட்ரால் இரத்தத்தில் உள்ளது. இது வெறும் கண்களுக்கு தெரியாத ஒன்று, ஆனால் அளவிடக்கூடிய ஒன்று.
- கொழுப்பு சைவம் மற்றும் அசைவ உணவுகள் இரண்டிலும் உள்ளது. கொலஸ்ட்ரால் அசைவ உணவுகளில் மட்டுமே உள்ளது.
- கொழுப்பும் கொலஸ்ட்ராலும் உறுதியான அளவில் சில அத்தியாவசியமான உடல் செயல்பாடுகளுக்கு தேவைப்படுவன ஆகும். அதிகப்படியான கொழுப்பு உடல் பருமனை ஏற்படுத்தினாலும், அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் தான் இதய நோய்களை உண்டாக்கும்.
கொழுப்பு கொலஸ்ட்ராலை பாதிக்குமா?
Saturated (பெரும்பாலான தாவர எண்ணெய்கள், சிவப்பு இறைச்சி போன்றவற்றில் காணப்படுகிறது) மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் (Trans Fats) (Dalda, வனஸ்பதி போன்ற ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள், அடிக்கடி வறுத்த எண்ணெய்கள் போன்றவைகளில் காணப்படும் கொழுப்புக்கூறு) கொலஸ்ட்ராலை பாதிக்கலாம். அவை இரத்தத்தில் எல்டிஎல் கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. Saturated கொழுப்பு வகைகளுக்கு பதிலாக பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளுக்கு (polyunsaturated and monounsaturated fats) மாறுவது இரத்த எல்டிஎல் அளவைக் குறைக்க உதவும்.