Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க பேரீச்சம்பழங்கள் மட்டும் போதுமா?

நமது அன்றாட வாழ்வில் பேரீச்சம்பழங்கள் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும், நம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை அவைகள் மொத்தமாக வழங்கலாம் என்றும் நம் பெற்றோர் கூறாக கேட்டு இருக்கிறோம். குடும்பத்தில் யாராவது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக பேரீச்சம்பழங்களை பரிந்துரைப்பார்கள். பேரீச்சம்பழங்கள் உண்மையில் இரும்பு மற்றும் பிற ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பிரபலமான உலர் பழம் தான். இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க பேரீச்சம்பழங்கள் மட்டுமே போதுமானதா?

இரத்த சோகைக்கு இரும்புச்சத்து மட்டும் போதுமா?

இரும்பு, வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற அத்தியாவசியமான நான்கு சத்துக்கள் உடலுக்கு போதுமான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய தேவையானவை ஆகும். எனவே எந்த இரத்த சோகை நிலைக்கும் இரும்புச்சத்து மட்டுமே போதாது. எனவே இரும்புச்சத்து குறைபாடு மட்டுமே இரத்த சோகையை ஏற்படுத்துகிறது என்ற கருத்து உண்மையல்ல.

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு பேரீச்சம்பழங்களால் மட்டும் சிகிச்சையளிக்க முடியுமா?

தினசரி பேரீச்சம்பழத்தை உட்கொள்வது நோயாளிகளின் இரத்த சோகை நிலைக்கு சிகிச்சையளிக்கும் என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். முதலில், அவர்கள் இரத்த சோகையின் மூல காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இது எளிய ஊட்டச்சத்து காரணங்களால் கூட இருக்கலாம் அல்லது இரத்த இழப்பு காரணமாகவும் இருக்கலாம். பின்னர் ஊட்டச்சத்து குறைபாட்டின் அளவை கண்டறிய வேண்டும். எந்தவொரு இரத்த சோகை நிலைக்கும் என்ன சிகிச்சை பலனளிக்கும் என்பதை இது மட்டுமே தீர்மானிக்கிறது.

இரத்த சோகை இரத்த இழப்பின் காரணமாக இருந்தால், அது பேரீச்சம்பழங்களுடனோ, இரும்பு குறைபாடுடனோ எந்த தொடர்பாலும் இல்லை. எனவே அல்சர், பைல்ஸ் அல்லது வேறு ஏதேனும் தீவிரமான காரணங்கள் இரத்த இழப்புக்கான மூல காரணமா என்பதை முதலில் கண்டறிய வேண்டும். பின்னர் அதற்கு தக்க சிகிச்சையை அளிக்க வேண்டும். முன்பு கூறியது போல், அல்சர் அல்லது பைல்ஸ் அல்லது இரத்த இழப்பை ஏற்படுத்தும் வேறு எந்த காரணத்துக்கான சிகிச்சையும் இந்த வகை இரத்த சோகையை தீர்க்கும்.

பேரீச்சம்பழத்தில் அடர்நிற வகைகளில் மட்டுமே இரும்புச்சத்து நிறைந்து உள்ளது. 100 கிராம் பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து 0.3 முதல் 10 கிராம் வரை இருக்கலாம். இரும்பின் ஊட்டச்சத்து தேவை ஆண்களுக்கு 8 கிராம் முதல் 10 கிராம் வரையும், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 14-15 கிராம் வரையும் தேவை இருக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால் ஒரு சாதாரண நபருக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்க குறைந்தபட்சம் 100 கிராம் பேரீச்சம்பழத்தை தினமும் உட்கொள்ள வேண்டும். மற்ற முக்கியமான காரணி என்னவென்றால், 100 கிராம் பேரீச்சம்பழத்தில் சுமார் 60-65 கிராம் சர்க்கரை உள்ளது. அதாவது நீரிழிவு நோயுள்ளவர்கள் இதை உட்கொள்ள முடியாது. ஒருவருக்கு இரத்த சோகை இருக்கும்போது, ​​ஒரு நாளைக்கு 35 கிராம் இரும்பு தேவைப்படலாம். எனவே உண்மை என்னவென்றால் பேரீச்சம்பழங்கள் எந்த நேரத்திலும் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து தேவையை ஈடுசெய்யவே முடியாது.

எனவே இரத்த சோகைக்கு என்னதான் சிகிச்சை?

எனவே, உங்களுக்கு இரத்த சோகை இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை விடாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இரும்புச்சத்து குறைபாட்டின் அடிப்படையில் மருந்துகளின் அளவு பரிந்துரைக்கப்படுகிறது என்பதை மறக்க வேண்டாம். எனவே மருந்துகள் மட்டுமே இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை முழுமையாக குணப்படுத்த முடியும். நீங்கள் இரத்த சோகையை குணப்படுத்தியவுடன் உங்கள் இரும்பு அளவை பராமரிக்க வேண்டுமானால் பேரீச்சம்பழங்கள் உதவலாம். எனவே பேரீச்சம்பழங்களை மருந்துடன் எடுத்துக்கொள்வது எப்போதும் சிறந்த தேர்வாக இருக்கும்.

Exit mobile version