மூலம் பொதுவாகவே மலச்சிக்கலில் அவதிப்படுபவர்களுக்கு தான் பெரும்பாலும் ஏற்படுகிறது. உடல் எடை சற்றே அதிகமாக உள்ளவர்களுக்கும், பருமனாக உள்ளவர்களுக்கும் அதிகமாகவே மலச்சிக்கல் ஏற்படுகிறது என்ற பொதுவான கருத்து உண்டு. ஏனென்றால் அவர்களிடம் உடல் உழைப்பு அதிகம் இல்லாமல் இருப்பதால் செரிமானம் மந்தமாகவே இருக்கும். இந்த மந்த நிலை மலச்சிக்கலில் கொண்டுபோய் விடுவதோடு மட்டுமில்லாமல் அதற்கு அடுத்த நிலையில் மூலத்தையும் ஏற்படுத்தலாம். மூலம் இருந்தால் உடல் எடை குறையுமா?
மூலத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாதது
பொதுவாகவே மூலத்திற்கு சிகிச்சை எடுக்கவில்லை என்றால் அது மறைமுகமாக சில காரணங்களுக்காக உடல் எடை குறைப்பை நிகழ்த்தலாம். மலத்தில் ரத்தத்துளிகளை பார்த்த பின்னரும் நோயாளிகள் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் மூலம் அதிகமாகலாம். அதிகரித்த மூலம் நோயாளிகளுக்கு கடுமையான மன உளைச்சலைக் கொடுக்கலாம்.
மலச்சிக்கலால் அவதியுறும் மூல நோயாளியின் மனநிலை
நீண்ட காலமாக மலச்சிக்கலால் அவதியுறும் ஒருவர் உணவை தவிர்க்கும் மனநிலைக்கு சென்றிருப்பார். அது மூலம் மேலும் அதிகமாவதை தடுக்கும் பொருட்டாகவே இருக்கும். ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்படியான மூலம் இருந்தால் இந்த மனநிலை இன்னும் கூடவே இருக்கும். அப்படி உணவு உண்பதை குறைத்துக் கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு கண்டிப்பாக உடல் எடை குறைவு ஏற்படும். பொதுவாக மூலம் இருந்தால் உடல் எடை குறைவதை நல்ல அறிகுறியாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
மூல நோயுடன் வாழும் உடல் பருமனானவர்கள்
உடல் பருமனான ஒருவருக்கு மூலம் இருந்தால் அது கண்டிப்பாக அவரது உணவினால் தான் என்று கூறலாம். அவர்களின் உணவில் நிறைந்த மாவுச்சத்தும், குறைந்த நார்ச்சத்தும் உள்ளதே இதற்கு காரணம் என்று சொல்லலாம். இந்த நிலைமை உடல் பருமன் ஆவதற்கு உதவி புரிகின்றது. குறைவான நார்ச்சத்தினாலும், குறைவான உடல் உழைப்பினாலும், அவர்களுக்கு மூலம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம். இது ஒரு கொடுமையான சுழற்சி என்று தான் கூறவேண்டும். இந்த சுழற்சியை உடைக்கவில்லை என்றால் மூலம் பல நிலைகளைத் தாண்டி மோசமான சிக்கலில் கொண்டுபோய்விடும். மலத்தில் ரத்தப்போக்கு அதிகரித்து அதனால் ஏற்படும் மனஉளைச்சல் அவர்களது உடல் எடையை குறைத்துவிடும். ஆனால் இந்த நிலை மிகவும் அரிது என்பதை மனதில் கொள்ளவேண்டும். ஏனென்றால் மூலநோய் இருக்கும் உடல் பருமனானவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை பெரும்பாலும் கடைபிடிப்பதில்லை.
நீண்ட நாட்கள் மூலம் இருந்தால் பொதுவாகவே ரத்தசோகை என்று சொல்லப்படும் வெளுப்பு நோயும், அதிக உடல் சோர்வும் வந்துசேரும். மூலத்தால் ஏற்படும் உடல் எடை குறைப்பு மிகவும் அரிதாக நிகழ்கின்ற ஒன்று தான். உங்களுக்கு மூலம் இருந்து, உடல் எடை குறைவு திடீரென்று ஏற்படுகின்றதென்றால் கண்டிப்பாக கோலோனோஸ்கோபி பரிசோதனை ஒன்றை செய்துப் பார்த்துக்கொள்வது நல்லது. இது வேறு சில நோய்கள் இருப்பதை கண்டறிய உதவுவதோடு, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள நமக்கு துணைபுரியும்.