ஹெர்னியாவை சரிசெய்யும் அறுவை சிகிச்சைகள் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. இந்தியாவில் மட்டுமே ஒரு ஆண்டிற்கு பல ஆயிரம் பேருக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்று ஒரு கணக்கு கூறுகிறது. நிலைமை இப்படி இருக்க பலர் சில காரணங்களுக்காக அறுவை சிகிச்சையை செய்துக் கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். பணப்பற்றாக்குறை, ஹெர்னியா உள்ளதையே சரியாக கவனிக்காமல் போவது, ஆகிய இரண்டு காரணங்கள் தான் இதில் பிரதானம். ஆனால் இப்படி கவனிக்காமல் அறுவை சிகிச்சை செய்யாமல் விட்டுவிட்டால் சிக்கல்கள் எழும். அவ்வாறு எழும் சிக்கல்கள் சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
ஹெர்னியாவால் ஏற்படும் irreducibility எனப்படும் சுருக்கமுடியாமை
பொதுவாக ஹெர்னியா உண்டாகி இருந்தால், பிதுங்கி இருக்கும் குடல் பகுதிகளை சற்று உள்ளே தள்ள முடியும். இதை ஹெர்னியா நோயாளிகளேயோ அல்லது மருத்துவரோ தான் செய்வது சிறந்தது. இப்படியாக ஹெர்னியா ஓட்டை வழியாக குடல் பகுதிகள் வந்தும் போவதுமாக இருக்கலாம். இது ஹெர்னியா ஏற்பட்ட ஆரம்ப காலத்தில் பரவலாக இருக்கும் ஒரு நிலைமை. இதனை “சுருக்க முடியும் தன்மை” என்றும் சொல்லலாம். இந்த நிலைமை மறைந்து, ஹெர்னியா ஓட்டையில் துருத்திக் கொண்டு இருக்கும் குடல் பகுதிகள் ஒரு கட்டத்தில் உள்ளே போக முடியாதவாறு ஆகிவிடும். இது தான் ஹெர்னியாவினால் ஏற்படக்கூடிய முதல் நிலை சிக்கல்.
ஹெர்னியாவால் ஏற்படும் incarceration எனப்படும் சிறைபடுதல்
குடலின் ஒரு பகுதி உள்வயிற்றுப்பகுதியின் சுவற்றுத் தசையில் இருக்கும் ஹெர்னியா புழையில் மாட்டிக்கொண்டு சிறைபடுதலே முதலில் ஏற்படும் சிக்கல் ஆகும். இப்படி குடலின் ஒரு பகுதி சிறைபடும் போது, அதற்கு உள்ளே இருக்கும் ஜீரண பொருட்கள் இயல்பான போக்கில் போகாமல் தேங்கி சிக்கலை உண்டாக்கும். இதனால் உப்புசம், வாந்தி, தலை சுற்றல், தீராத வலி, ஆகியவை ஏற்படும். வயிற்றில் இருந்து வாயு பிரிவதிலும் சிக்கல் ஏற்பட்டு மிகவும் அசௌகரியத்தை உணர நேரிடும்.
ஹெர்னியாவால் ஏற்படும் Obstruction எனப்படும் அடைப்பு
சிறைபட்ட குடல் பகுதி அடுத்து வெளியே வர முடியாதபடிக்கு அடைபட்டு முறுக்கிக் கொள்ளத் துவங்கும். இந்த நிலையையே அடைப்பு நிலை அல்லது Obstruction of Hernia என்று கூறுவார்கள்.
ஹெர்னியாவால் ஏற்படும் Strangulation எனப்படும் நெரிப்பு
சிறைபட்ட குடல் பகுதி அடுத்த நிலையை அடையும் போது அது நெரிக்கப்படுகிறது. இப்படி நெரிபட்ட குடல் பகுதி சிக்குண்டு அதனால் வயிற்றுப் பகுதி வீங்கிப் பெருக்கிறது. இந்த வயிற்று வீக்கம் குடலில் இருக்கும் ஜீரண பொருட்கள் இயல்பான போக்கில் போகாமல் தடுக்கப்படுகிறது. இதனால் வாந்தி, தீராத வலி, போன்றவை ஏற்படுகின்றன. வயிற்றின் வீங்கிய பகுதிகள் ரத்த ஓட்டத்தை நிறுத்துகின்றன. இதனால் அந்த இடத்தில் அழுகல் நேருகிறது.
Strangulation எனப்படும் நெரிப்பு, குடல் சிறைபட்டு ஆறு மணி நேரத்தில் கூட நிகழ வாய்ப்பு இருப்பதாக ஹெர்னியா அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகிறார்கள். இப்படி ஏற்படும் உள்ளழுகல் மோசமான மருத்துவ அவசர நிலையை ஏற்படுத்தும். சிறைபட்ட பகுதியில் உள்ள குடல் திசுக்கள் மரணமடைந்து, அதனால் வெளிவிடப்படும் பல நச்சுகளும் ரத்தத்தில் கலக்க நேரிடும். உரிய அவசர அறுவை சிகிச்சை இல்லாமல் இந்த நிலை தொடரும் போது செப்டிக் நிலைக்கு (septicemia) போய் உயிருக்கே ஆபத்தாகக் கூட முடியலாம்.
ஹெர்னியா சிக்கல்கள் குறித்து மருத்துவர் மாறனின் கருத்து
ஹெர்னியா இருப்பது கண்டுபிடிக்கப் பட்டாலே உடனே அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளும்படி வலியுறுத்துகிறார் ஹெர்னியா அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மாறன். சிக்கல்கள் ஏற்படுவதற்கு முன்னர் வெறும் ஹெர்னியா மெஷ் வைத்தால் முடிந்து விடக்கூடிய ஒரு அறுவை சிகிச்சையை எந்த காரணத்தைக் கொண்டும் தள்ளிவைத்து அதனை தெரிந்தே சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டாம் என்பது அவரது வாதம். அதனால் உங்களுக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்படும் ஹெர்னியா வகைகளான இங்குவினல் ஹெர்னியா, இன்சிசனல் ஹெர்னியா மற்றும் தொப்புள்கொடி ஹெர்னியா வகைகளில் எதுவொன்று இருந்தாலும், அது கண்டுபிடிக்கப்பட்ட சில வாரங்களிலேயே அறுவை சிகிச்சையை செய்து முடித்து விடுவது சிக்கல்கள் வராமல் தடுக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார்.