Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

மூல நோய்க்கு லேசர் அறுவை சிகிச்சை சிறந்த தீர்வா?

மூல நோய்க்கு லேசர் சிகிச்சையை செய்துக் கொள்ளுங்கள் என்று நிறைய விளம்பரங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சுவர்களிலும், பேருந்துகளிலும் காணப்பட்ட மேற்கூறிய விளம்பர போஸ்டர்கள் இப்போதெல்லாம் நீங்கள் பொழுதுபோக்கிற்கு காணும் யூடியூப் காணொளிகளுக்கு மத்தியில் வந்துபோக தொடங்கிவிட்டன. உண்மையிலேயே மூலநோய்க்கு லேசர் அறுவை சிகிச்சை சிறந்த தீர்வாக அமையுமா? வாருங்கள் அலசுவோம்.

மூல நோய்க்கான லேசர் அறுவை சிகிச்சை பற்றிய ஒரு உண்மை

விரிவாக கட்டுரைக்கு உள்ளே செல்லும் முன் மூல நோய்க்கான லேசர் சிகிச்சை பற்றிய ஒரு பெரிய உண்மையை உங்களுக்கு சொல்லியாக வேண்டும். விரிவாக விளம்பரப்படுத்தப்படும் இந்த வகை அறுவை சிகிச்சையை பெரும்பாலும் “Infrared Coagulation” என்ற வகையில் செய்து முடிக்கிறார்கள். அதாவது அகச்சிவப்பு ஒளிக்கற்றைக ளை பயன்படுத்தி இந்த வகை அறுவை சிகிச்சையை செய்கிறார்கள். ஆக பெரும்பாலும் லேசரை பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை என்பதே உண்மை. லேசரை கொண்டும் மூலநோய்க்கு சிகிச்சை செய்யப்படுவது உண்டு. Infrared Coagulation முறையில் இல்லாமல் உண்மையான லேசரை கொண்டு செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் Hemorrhoidal LASER Procedure (HeLP), Laser hemorrhoidoplasty (LHP) மற்றும்  Laser hemorrhoidectomy என்ற முறைகள் ஆகும்.

மூல நோய்க்கான Infrared Coagulation எப்போது செய்யப்பட வேண்டும்?

மூல நோயானது Grade-1, அதாவது முதல் கட்டத்தில் இருக்கும்போது அரிதாக சிலருக்கு மட்டுமே ரத்தக் கசிவு இருக்கும். அப்படி நோய்நிலை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வகை அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மூலநோய் தொடங்கிய நிலையில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு எந்த அறிகுறியும் இருப்பதில்லை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டும். அத்தகைய நிலையில் நீங்கள் மூலநோயை கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு எந்த அறுவை சிகிச்சையும் தேவைப்படாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உங்கள் உணவுப் பழக்கவழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் Grade-1 மூலம் அடுத்த கட்டத்திற்கு செல்வதை தடுக்க இயலும்.

உங்களது மூலம் Grade-1 நிலையை தாண்டிச் சென்றுவிட்டது என்றால் இந்த Infrared Coagulation சிகிச்சை முறையால் எந்த பயனும் இல்லை.

மூல நோய்க்கான லேசர் சிகிச்சையைப் பற்றி ஒரு பார்வை

உண்மையான லேசரை கொண்டு செய்யப்படும் மூலநோய்க்கான அறுவை சிகிச்சைகள் கூட ரத்தக்கசிவு உள்ள Grade-1, Grade-2 மூலநோய் வகைகளுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. உங்கள் மூலநோய் அடுத்த கட்டத்தை தாண்டிச் சென்றுவிட்டால் லேசர் முறைகளோ, Infrared Coagulation முறைகளோ பெரிய அளவில் கைகொடுக்காது.

மூலநோய் இரண்டாம் நிலையை தாண்டிவிட்டால் என்ன செய்வது?

இந்த நிலைக்கு பிறகு ரத்தக்கசிவு இருந்தாலோ, உங்களது அன்றாட செயல்பாடுகளில் மூலநோய் மிகவும் குறுக்கிடுகிறது என்று இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப் படுகிறது. அந்த அடுத்த கட்ட மூலநோய் நிலைக்கு Hemorrhoidectomy, Rubber band Ligation போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன. இந்த சிகிச்சை முறைகள் Infrared Coagulation முறையை விடவும் சிறந்தவை என்பதே உண்மை.

லேசர் அறுவை சிகிச்சை முறையில் ஒரு நாளைக்குள் வீட்டுக்கு போய்விடலாம் என்று விளம்பரப்படுத்தினாலும், அந்த சிகிச்சை முறையை மேற்கொண்டவர்களுக்கு எளிதில் அறுவை சிகிச்சை புண் ஆறுவதில்லை என்பதே அனுபவம். புண் ஆறும்வரை ஆசனவாயில் இருந்து திரவம் ஒழுகிக் கொண்டே இருப்பது இந்த சிகிச்சை முறையில் உள்ள ஒரு குறைபாடு ஆகும். ஆகையால் விளம்பரங்களை பார்த்து அவசரப்பட்டு லேசர் சிகிச்சை செய்துக் கொள்கிறேன் என்று எண்ணி Infrared Coagulation சிகிச்சை முறையையோ, உண்மையான லேசர் அறுவை சிகிச்சை முறையையோ தேவை இல்லாமல் செய்துக் கொள்ளவேண்டாம்.

Exit mobile version