உடல் பருமனானது உண்மையில் இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய நீரிழிவு நோய்க்கான தூண்டுதல் காரணியாகும். இவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பைக் கொண்டுள்ளன. மேலும் உடல் பருமனாக இருப்பது சில ஹார்மோன்கள் உடலில் உற்பத்தி செய்யப்படுவதற்கும், இன்சுலின் எதிர்ப்பு நிலை உருவாவதற்கும் நேரடியாக பங்களிக்கும் ஒரு விஷயம் ஆகும்.
இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன?
உங்கள் தசைகள், கொழுப்பு மற்றும் கல்லீரலில் உள்ள செல்கள், கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலினுக்கு செயல் புரியாதபோது இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகிறது. இன்சுலின் என்பது இரத்த குளுக்கோஸ் (சர்க்கரை) அளவைக் கட்டுப்படுத்த தேவையான ஒரு ஹார்மோன் ஆகும். இன்சுலின்-எதிர்ப்பு நிலையை இன்சுலின் உணர்திறன் குறைபாடு என்றும் அழைக்கிறார்கள். இன்சுலின் எதிர்ப்பு தற்காலிகமாகவோ, நாள்பட்டதாகவோ இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில் மட்டுமே அதற்கு சிகிச்சையளித்து குணமாக்க முடிகிறது.
இன்சுலின் செயல்பாடுகள்
- உடலில் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோனின் இன்றியமையாத பாத்திரங்களில் ஒன்று குளுக்கோஸுடனான அதன் தொடர்பு ஆகும். இந்த தொடர்பு உடலின் செல்கள் குளுக்கோஸை ஆற்றலாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. கணையத்தின் பீட்டா செல்கள் அதிக இன்சுலினை உற்பத்தி செய்கின்றன. இது பொதுவாக உணவு உண்ட பிறகு ஏற்படும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு உடல் நமக்கு செய்யும் செயல் ஆகும். இன்சுலின் உடலில் உள்ள செல்களைத் திறக்க உதவி செய்து, அதில் உள்ள குளுக்கோஸை ஆற்றலாக பயன்படுத்த அனுமதிக்கிறது.
- இன்சுலினுக்கு இன்னொரு தொடர்புடைய செயல்பாடும் உள்ளது – இரத்த ஓட்டத்தில் அதிகப்படியான குளுக்கோஸ் இருக்கும்போது, கல்லீரல், தசை மற்றும் கொழுப்பு செல்களில் குளுக்கோஸை கிளைகோஜனாக சேமிக்க இன்சுலின் ஊக்குவிக்கிறது. அதாவது இன்சுலின் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் தசை, கொழுப்பு மற்றும் கல்லீரல் செல்களுக்குள் நுழைய உதவுகிறது. இது ஆற்றலுக்காகப் பயன்படுத்த அல்லது தேவைப்படும்போது பின்னர் பயன்படுத்துவதற்கு என அதனை சேமிக்க உதவுகிறது. பொதுவாக கூறினால், ஆற்றல் சேமிப்புகளை உருவாக்க இன்சுலின் உதவுகிறது. ஆற்றல் தேவைகள் பின்னொரு தருணத்தில் அதிகரிக்கும் போது இந்த ஆற்றல் சேமிப்புகள் உடலால் பயன்படுத்தப்படுகின்றன.
மேலே விவரிக்கப்பட்ட இரண்டு அத்தியாவசிய செயல்பாடுகளும் இரத்தத்தில் சாதாரண இரத்த குளுக்கோஸ் அளவை மீட்டெடுக்க உதவுகின்றன.
இன்சுலின் செயல்பாடு பலவீனமடையும் போது என்ன நடக்கும்?
உங்கள் தசை, கொழுப்பு மற்றும் கல்லீரல் செல்கள் இன்சுலினுக்கு தகாத முறையில் செயல் புரிய பல காரணங்கள் இருக்கலாம். அதாவது மேலே குறிப்பிட்டுள்ள இன்சுலினின் அத்தியாவசியமான 2 செயல்பாடுகள் பலவீனமடைந்துள்ளன என்று இதற்கு பொருள். அதாவது இரத்தத்தில் இருந்து குளுக்கோஸை திறம்பட எடுத்து சேமித்து வைக்கும் முறைமை திறமையாக இந்த நிலை இருக்கும்போது இல்லை என்று இதற்கு அர்த்தம். இதன் விளைவாக, இரத்தத்தில் அதிகரித்த இரத்த குளுக்கோஸ் அளவைக் கடக்க அதிக இன்சுலின் சுரக்கச் செய்ய கணையம் அதிகமாக வேலை செய்கிறது. இந்த நிலை ஹைப்பர் இன்சுலினீமியா (hyperinsulinemia) என்று அழைக்கப்படுகிறது, இது இன்சுலின் எதிர்ப்புக்கான மருத்துவப் பெயராகும்.
கணையத்தால் தயாரிக்கப்படும் கூடுதல் இன்சுலின் இரத்த சர்க்கரை அளவை ஈடுசெய்து சமாளிக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் செல்கள் இன்சுலினுக்கு மிகவும் எதிர்ப்பு தெரிவிக்கும்போது தான் இன்சுலின்-எதிர்ப்பு ஏற்படுகிறது.
உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்கிறதா என்று எப்படிச் சரிபார்க்கலாம்?
நீரிழிவு மருந்துகள், உடற்பயிற்சிகள் மற்றும் முறையான வாழ்க்கை முறை இருந்தபோதிலும், மக்கள் தங்கள் ஒழுங்கற்ற இரத்த சர்க்கரை அளவை சந்தேகிக்கும்போது, அவர்கள் இன்சுலின்-எதிர்ப்பு இருப்பதை கண்டிப்பாக சந்தேகிக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலானவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு நிலை பற்றி பொதுவாக ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. உடல் மத்தியில் ஏற்படும் பருமன் அல்லது வயிற்றுப் பருமன், அதிக ட்ரைகிளிசரைடு அளவுகள், குறைந்த HDL அளவுகள், உயர் இரத்த அழுத்தம் இருப்பது, கழுத்துப் பகுதியில் ஏற்படும் தோல் மருக்கள், தோலில் ஏற்படும் வெல்வெட் கறுப்புத் திட்டுகள் (குறிப்பாக தொடை, கழுத்து, அக்குள் பகுதிகளில்), இன்சுலின் எதிர்ப்பு நிலை உள்ளவர்கள் காட்டும் சில அறிகுறிகளாகும்.
அதிக கார்போஹைட்ரேட் மற்றும் ஜங்க் உணவுகளை உட்கொள்பவர்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வாழ்பவர்கள், மனநல மருந்துகளை உட்கொள்பவர்கள், பிசிஓஎஸ் உள்ள பெண்கள், இவர்கள் எல்லாம் இன்சுலின் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இன்சுலின் எதிர்ப்பின் சிக்கல்கள்
இன்சுலின்-எதிர்ப்பின் சிக்கல்களில் கட்டுப்பாடற்ற நீரிழிவு, சிறுநீரக நோய்கள், கண் பிரச்சினைகள், புற்றுநோய் உண்டாவதற்கான அதிக வாய்ப்புகள் ஆகியவை அடங்கும்.
இன்சுலின் எதிர்ப்பை சமாளிப்பது எப்படி?
- குறைந்த பட்சம் 45 நிமிடம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வது அல்லது நீங்கள் விரும்பும் பிற உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
- இடுப்பு அளவைக் குறைத்தல், ஆண்களுக்கு 90 செ.மீ.க்குள்ளும், பெண்களுக்கு 80 செ.மீ.க்குள்ளும் இடுப்பு அளவு இருப்பது நல்லது.
- ஆரோக்கியமான, சீரான உணவை உட்கொண்டு உடலை பராமரித்தல், அதிக நார்ச்சத்து உள்ள உணவை எடுத்தல்.
- ஜங்க் உணவுகளையும், எளிய கார்போஹைட்ரேட்டுகளால் செய்யப்பட்ட உணவுகளையும் தவிர்த்தல்.
- இன்சுலின் எதிர்ப்பு நிலை மோசமாக ஆகும்பட்சத்தில் இடைப்பட்ட உண்ணாவிரதம் என்று சொல்லப்படும் intermittent fasting முறையையோ, பேலியோ டயட்டை பின்பற்றுவதையோ மருத்துவரின் ஆலோசனையுடன் செய்யலாம்.