Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

தாவர அடிப்படையிலான உணவு என்றால் என்ன? இது உடலுக்கு போதுமானதா, ஆரோக்கியமானதா?

தாவர அடிப்படையிலான உணவு, தாவர மூலங்களிலிருந்து பெறப்படும் உணவுகளை மட்டுமே குறிக்கிறது. எனவே தாவர அடிப்படையிலான உணவில் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள், எண்ணெய்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவை அடங்கும். தாவர அடிப்படையிலான உணவு என்பது நீங்கள் கண்டிப்பாக சைவ உணவு உண்பவராகவோ அல்லது வீகன் உணவு உண்பவராகவோ இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. நீங்கள் தாவர மூலங்களிலிருந்து அதிகப்படியான உணவையும், விலங்கு மூலங்களிலிருந்து குறைவான உணவைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதையும் கூட குறிக்கலாம். தாவர அடிப்படையிலான உணவுகள் போதுமானதா, அது ஆரோக்கியமானதா என்பதை பற்றி இங்கே அலசுவோம்.

தாவர அடிப்படையிலான உணவு என்றால் என்ன?

தாவர அடிப்படையிலான உணவு (Plant-based) என்பது தாவர ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுகளை மட்டுமே குறிக்கிறது. “Plant-based” என்ற ஆங்கிலச் சொற்றொடர் முற்றிலும் அல்லது பெரும்பாலும் தாவர ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறிக்கும் ஒரு சொல்லாக கருதப்படலாம். இது அடிப்படையில் தாவர அடிப்படையிலான உணவு உண்பவர்கள், விலங்கு மூலங்களிலிருந்து பெறப்பட்ட உணவுப்பொருட்களை கூட சிறிதளவு உட்கொள்ளலாம் என்பதையும் கூட குறிக்கலாம்.

சைவ உணவையும், வீகன் உணவையும் உண்பவர்களின் உணவுகள் கண்டிப்பாக தாவர அடிப்படையிலானவை மட்டுமே. சைவ உணவு உண்பவர்கள் இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்களைத் தவிர்த்து, தங்கள் உணவில் பால் சேர்த்துக் கொள்ளுவர். ஆனால் வீகன் உணவு உண்பவர்கள் ஒரு படி மேலே சென்று தங்கள் உணவில் பாலையும், பால் பொருட்களையும் சேர்த்துக்கொள்வதில்லை. முழுக்க முழுக்க அல்லது பெரும்பாலும் தாவர மூலங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுகளால் செய்யப்பட்ட உணவு முறைகளுக்கு இடையிலான வேறுபாட்டினை தான் இதன் மூலம் குறிப்பிடுகிறோம்.

தாவர அடிப்படையிலான உணவு உண்பவராகவும், வீகன் உணவு உண்பவராகவும் இருக்க முடியும். உண்மையில், பலர் விலங்கு பொருட்களைக்கூட தவிர்த்து, தீவிர சைவ உணவு உண்பவர்களாகவே  தொடங்குகிறார்கள். விலங்கு உரிமைப் பிரச்சாரகர்களால் இந்த உணவு முறைக்கு கவரப்பட்டு இதைச் செய்கிறார்கள். நெறிமுறை காரணங்களுக்காவும், சுற்றுச்சூழல் காரணங்களுக்காவும் மட்டுமே அவர்கள் வீகன் உணவு உண்பவராக இருக்க ஆசைப்படுகின்றனர். ஆனால், பெரும்பாலானவர்கள் நாட்கள் உருண்டோடியபின் கடுமையான தங்களது வீகன் உணவு முறையைத் தளர்த்தி, தங்கள் ஆரோக்கிய இலக்குகளை அடைவதற்கு, பால் போன்ற விலங்குகளிலிருந்து பெறப்பட்ட உணவு ஆதாரங்களுடன் தாவர அடிப்படையிலான உணவைப் பின்னர் பின்பற்றுபவர்களாக மாறிவிடுகின்றனர்.

பெரும்பாலும் தாவர அடிப்படையிலான உணவை உட்கொள்வதன் அர்த்தம் என்ன?

வாரத்தில் 5 அல்லது 6 நாட்களுக்கு உங்கள் உணவு பெரும்பாலும் தாவர அடிப்படையிலானதாகவும்,  அதே போல, வாரத்திற்கு 1 அல்லது 2 நாட்களுக்கு இறைச்சி, கடல் உணவு அல்லது பிற விலங்குகளிலிருந்து பெறப்பட்ட பொருட்களை உட்கொள்வது என்பது தான் “பெரும்பாலும் தாவர அடிப்படையிலான உணவு” என்பதன் பொருள். ஒரு வழக்கமான இந்திய உணவு பெரும்பாலும் தாவர அடிப்படையிலானது என்பதை நீங்கள் கவனிக்கலாம். மேற்கத்திய உணவு முறையில் இறைச்சி அல்லது விலங்குகளில் இருந்து பெறப்பட்ட உணவு கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் உட்கொள்ளப்படுகிறது. ஒரு மத்திய தரைக்கடல் உணவு முறை கூட  (Mediterranean diet) கிட்டத்தட்ட இந்திய உணவு முறையைப் பின்பற்றுகிறது. மத்திய தரைக்கடல் உணவில் கடல் உணவுகள், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி அதிகமாக இருக்கிறது. இதை ஒத்து இந்திய உணவில்  தேங்காய், எள், கடுகு அல்லது வேர்க்கடலை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட சமையல் எண்ணெய்களும், நெய், பனீர், கடல் உணவு மற்றும் இறைச்சி ஆகியவையும் அதிகமாக இருக்கிறது.

தாவர அடிப்படையிலான உணவு ஆரோக்கியமானதா?

முற்றிலும் தாவர அடிப்படையிலான, விலங்குகளின் மூலத்தை உள்ளடக்காத எந்த உணவின் ஆரோக்கிய தன்மையும் கேள்விக்குரியவையே. விலங்கு மூலங்களிலிருந்து புரதங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் தாவர மூலங்களை விட உடலால் உடனடியாக உறிஞ்சப்படுகின்றன என்பது கண்டறியப்பட்ட அறிவியல் உண்மை ஆகும். உதாரணமாக இரும்பை எடுத்துக் கொள்ளுங்கள் – காய்கறி மற்றும் விலங்கு மூல உணவுகளில் இரும்புச்சத்து உள்ளது. விலங்கு மூலங்களிலிருந்து வரும் இரும்பு ஹீம் என்றும், தாவரங்களிலிருந்து வரும் இரும்பு ஆதாரம் நான்ஹீம் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஹீம் அல்லாத இரும்பை விட நம் உடல் ஹீம் இரும்பை எளிதில் உறிஞ்சி கிரகித்துக்கொள்கிறது.

கடல் உணவுகளும், மிதமான அளவிலான வெள்ளை இறைச்சியுடன் கூடிய தாவர அடிப்படையிலான உணவுகளும் எடை இழப்பு மற்றும் உடல் பருமனை குறைக்க உதவுவதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன. தாவர அடிப்படையிலான உணவில் உள்ள அதிக நார்ச்சத்தும், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் முற்றிலும் தவிர்ப்பதும், எடை இழப்புக்கு அதிகமாக உதவுகிறது. தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்றுவது, ஆனால் சோடா, பானங்கள், சர்க்கரை பானங்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவைக் கைவிடாமல் இருப்பது பயனளிக்காது. மேலும் அவை ஆரோக்கியமான தேர்வு அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தாவர அடிப்படையிலான உணவின் பிற நன்மைகள் என்னென்ன?

–              தாவர அடிப்படையிலான உணவின் நார்ச்சத்து நிறைந்த தன்மை மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது. எனவே மூல நோயை எதிர்த்துப் போராடுவதில் இது பயனுள்ளதாக இருக்கும்.

–              தாவர அடிப்படையிலான உணவை பின்பற்றுவது என்பது, நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை குறைப்பதற்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இருப்பினும், பதப்படுத்தப்பட்ட உணவை சேர்த்துக் கொண்டால், நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயம் இன்னும் மோசமாகும்.

–              காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் வித்துகள் நிறைந்த ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்றுபவர்களுக்கு இதய நோய் உருவாகும் வாய்ப்பு கணிசமாகக் குறைவு.

–              தாவர அடிப்படையிலான உணவு சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கலாம். ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், கடல் உணவுகளை உண்ணும் சைவ உணவு உண்பவர்களுக்கு (Pescatarians) பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகக் குறைவு.

–              காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகள் வயதானவர்களில் அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் அல்சைமர் நோயை மெதுவாக்கவோ, அல்லது தடுக்கவோ உதவும். ஏனென்றால், தாவர அடிப்படையிலான உணவுகளில் அதிக எண்ணிக்கையிலான தாவர கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை அல்சைமர் நோயின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகின்றன.

Exit mobile version