பருமனான பெண்ணால் கருத்தரிக்க முடியுமா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. கண்டிப்பாக பருமனான பெண்ணால் கருத்தரிக்க முடியும். ஆனால், குண்டான தாய்க்கும், வயிற்றில் வளரும் சேய்க்கும், நிறைய இக்கட்டுகள் இருக்கும் என்பதை உணரவேண்டும். அத்தகைய சிக்கல்கள் என்னென்ன என்பதை இங்கே ஆராயலாம்.
கருத்தரித்த பருமனான பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள்
- மூச்சு விடுதல் நின்றுபோதல் – ஒருவருக்கு குறைவான நேரத்திற்கு மூச்சு விடுவது நின்று போனால் அதனை Sleep Apnea என்று கூறுவார்கள். பருமனானவர்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதை நீங்கள் அடிக்கடி கண்டிருப்பீர்கள். கருவை சுமந்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு sleep apnea இருந்தால் பிற உடல் நலக் குறைபாடுகளான உயர் ரத்த அழுத்தம், இதய சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை ஏற்படலாம்.
- பேறுகால நீரிழிவு நோய் (Gestational Diabetes) – பருமனான் பெண்களுக்கு, இந்த பேறுகால நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம்.
- சிறுநீரக பாதிப்பு – கருத்தரித்த 20 வாரங்களுக்கு பின்னர், சிறுநீரகங்கள் பழுதடையும் வாய்ப்பு அதிகம். பருமனான பெண்கள் இந்த காலக்கட்டத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த பழுது உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும். இந்த நிலையை Preeclampsia என்று கூறுகிறார்கள்.
- உயர் ரத்த அழுத்தம் ஒரு வகை வலிப்பினை கூட தரலாம். இதனை Eclampsia என்று கூறுவார்கள்.
- சிசேரியன் – பருமனாக இருக்கும் கருத்தரித்த தாய்மார்களுக்கு, இயல்பான பிரசவம் அமைவது மிகக் கடினம். அவர்களுக்கு பெரும்பாலும் சிசேரியன் என்று சொல்லக்கூடிய முறையிலேயே குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் பருமனான அவர்களது உடலில் அதிகப்படியான கொழுப்பே உள்ளது. தேவையான தசைகளும் குறைவாக காணப்படுகிறது. தசைகள் போதுமானதா இருந்தால் தான் அவர்கள் முக்கி முனகி பிரசவத்தின் போது கர்பப்பையை விட்டு குழந்தையை வெளியே தள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், குழந்தையும் வழக்கத்தை விட குண்டாக இருப்பதால், அதற்கு வெளியே வர சிரமம் இருக்கும். அதனால் தான் சிசேரியன் மூலமான குழந்தை பிறப்பு அதிகப்படியாக இருக்கும் என்கிறோம்.
பருமனான தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்கள்
- இருப்பதிலேயே பெரிய சிக்கல் கருச்சிதைவாகத்தான் இருக்கும். சில நேரங்களில் பருமனான உடல்வாகு, குழந்தை வளர்ச்சியை தடுப்பதால், துரதிர்ஷ்டவசமாக abortion என்று சொல்லக்கூடிய கருச்சிதைவு ஏற்படலாம்.
- நோயறிதல் செய்முறைகள் (Diagnosis) மிகவும் சிக்கலும், சவாலும் நிறைந்ததாக இருக்கும். கருவுற்ற பருமனான பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் போன்ற diagnosis முறைகளை செய்துக்கொள்ள நிறைய சிரமப்பட வேண்டி இருப்பதால், வளரும் குழந்தையின் நலம் அறிய நிறைய சிக்கல்களை சந்திக்கவேண்டி இருக்கும்.
- பருமனான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன் பிறக்கும் நிலை அதிகமாக இருக்கும். வயிற்றில் இருக்கும்போதே அதனை கண்டுபிடிக்க சவால்கள் நிறைந்து காணப்படுவதால் இந்த சோதனை.
- குறைப்பிரசவம் சர்வசாதாரணமாக நிகழும் வாய்ப்பு அதிகம். சராசரி பேறுகாலமான 39 வாரங்களை குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் காணாததால், அவர்களது உடல் நலம் மற்ற குழந்தைகளைக் காட்டிலும் சற்று குன்றியே காணப்படும்.
- பருமனான தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சர்க்கரை நோய், தைராய்டு, பருமன் போன்ற உபாதைகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம்.
- குழந்தை இறந்து பிறப்பது மிக துரதிர்ஷ்டமாக நிகழலாம். இது பெற்றோர்களுக்கு மிகுந்த மனக்கவலையை தரும்.
பருமனான பெற்றோர்களே பருமனான இளம் தலைமுறையினரை உருவாக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டை இப்போதெல்லாம் அதிகப்படியாக கேட்க முடிகின்றது. ஆகையால் தாய் பருமனாக இருந்தாள் குழந்தையும் பருமனாக இருப்பது, இன்றைய காலகட்டத்தில் அதிகமாக நடைபெறுகிறது.