Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

பன்றிக்கறி சாப்பிடுவதால் மூல நோய் குணமாகுமா?

பன்றிக்கறி மூலநோய்க்கு நல்லது என்ற ஒரு நம்பிக்கை நம் தமிழ்நாட்டில் உள்ளது. இது உண்மையா? மூல நோய்க்கும் பன்றிக்கறிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? வாருங்கள் அலசுவோம்.

மூலம் உடல் சூட்டினால் வருகிறது என்ற நம்பிக்கை

பொதுவாக இயற்கை மருத்துவத்தில் உடல் சூடாகிவிட்டது, உடல் குளிர்ச்சியாகிவிட்டது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். ஆனால் அறிவியலோ உடல் சூடு அல்லது உடல் வெப்பம் ஒரே சீராக 98.4F அளவுக்கு எப்போதும் இருப்பதாக கூறுகிறது. அதாவது வெளியே வெப்பநிலை சூடாக இருந்தாலும் சரி, அல்லது பனி பொழிந்து குளிர் வாட்டி எடுத்தாலும் சரி, உடல் வெப்பமானது ஒரே சீராக 98.4F அளவுக்கு எப்போதும் இருக்கும்படி உடல் பார்த்துக்கொள்ளும். இதுவே பரிணாமம். ஆக “உடல் சூடாகிவிட்டது”, “குளிர்ச்சியாகிவிட்டது” என்பது அறிவியல் படி ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். அதனால் மூலம் உடல் சூட்டில் தான் வருகிறது என்ற வாதமே முதலில் அடி பட்டு போகின்றது.

பிறகு மூலம் எப்படி ஏற்படுகிறது?

நம் உடலில் ஏற்படும் மலச்சிக்கலினால் தான் மூலநோய் பெரும்பாலும் ஏற்படுகிறது. மலச்சிக்கலுக்கு காரணம் குறைவான நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்பது, சர்க்கரை அதிகமான அல்லது குப்பை உணவுகளை அதிகப்படியாக உண்பது போன்ற காரணங்களும், உடலுக்கு உழைப்பு கொடுக்காமல் சோம்பி இருப்பது போன்ற காரணங்களாலும் தான்.

மலச்சிக்கல் ஏற்பட்டால் நாம் வெளிக்கு செல்ல முக்குகிறோம். ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்த குழாய்கள் இதனால் அழுத்தம் தரப்பட்டு அவை விரிவடைந்து கிழிவதால் ஏற்படுவதே மூலம் எனப்படும். ஆசனவாய்க்கு உள்ளேயே இது ஏற்பட்டால் உள்மூலம் என்று அறியப்படுகிறது. சில சமயங்களில் இந்த ரத்தகுழாய்கள் கொத்தாக ஆசனவாயின் வெளியே தள்ளப்பட்டால் அது வெளிமூலம் என்று அறியப்படுகிறது.

அப்படியென்றால் பன்றிக்கறி?

பன்றிக்கறி உடலுக்கு குளிர்ச்சியை தர வல்லது என்ற காரணத்திற்காக மூலத்திற்கு நல்லது என்று கூறப்பட்டது. மூலம் உடல் சூட்டினால் வருகிறது என்ற காரணத்தினால் அதற்கு நேர்மறையான உணவு எடுப்பதன் வாயிலாக மூலத்தை குணமாக்கலாம் என்ற கருத்துப்படி இது கூறப்பட்டது. இதில் உண்மை இல்லவே இல்லை.

பன்றிக்கறியில் தான் அதிகப்படியான கொழுப்பும் எண்ணையும் உள்ளது. இதனால் தான் பன்றிக்கறியை அதன் கொழுப்பிலேயே சமைக்கும் பழக்கம் இன்றளவும் இருக்கிறது. இந்த அதிகமான கொழுப்பு உடலில் ஒரு வித “laxative” தன்மையை கொடுக்கிறது. இதன் காரணமாக நம் மலம் வழுக்கிக்கொண்டு வெளியே தள்ளப்படுகிறது. அதாவது பன்றிக்கறி ஒரு சிறப்பான மலமிளக்கி.  அதனால் மலம் கழிக்கும்போது முக்குவது என்பது இங்கு இல்லாமல் இருக்கிறது. இதன் காரணமாக ஒரு வேலை பன்றிக்கறி சாப்பிட்டால் மூல நோய்க்கு நல்லது என்று கூறியிருக்கலாம். ஆனால் கண்டிப்பாக மூல நோயை பன்றிக்கறியால் குணப்படுத்தவே முடியாது என்பது தான் உண்மை. மூல நோயோ, பவுதிரமோ எது இருந்தாலும், பன்றிக்கறி அதை குணப்படுத்தாது. மலம் கழிக்கும் பொது வலியோ, எரிச்சலோ இருக்காது, அவ்வளவுதான்.

Exit mobile version