வீங்கிய இரத்த நாளங்கள் உங்கள் ஆசனவாயைச் சுற்றி அதிக அழுத்தம் கொடுக்கும் போது மூல நோய் தோன்றுகிறது. மூலம் ஏற்பட்ட பெரும்பாலான மக்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேச விரும்புவது இல்லை. ஆனால் இந்த நிலையிலேயே பலர் வாழ்க்கையை வாழ்வர். மூல நோய் பெரியவர்களை மட்டுமில்லாமல் சிரியவர்களையும் பாதிக்கும். பெண்களில், மூல நோய் பெரும்பாலும் அவர்களின் கர்ப்ப காலத்தில் ஏற்படலாம். குறிப்பாக சொல்லவேண்டும் ஏன்றால் அவர்களது மூன்றாம் மாதம் தொடங்கி பிரசவம் நடப்பது வரை தோன்றலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மூல நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த சில குறிப்புகளை இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்.
கர்ப்ப காலத்தில் மூல நோய் ஏற்படுவதற்கான காரணங்க என்னென்ன?
பெண்கள், தங்கள் கர்ப்ப காலத்தில், நிறைய உடல் மாற்றங்களுக்கு ஆளாகிறார்கள். அத்தகைய ஒரு மாற்றம் கருப்பையின் விரிவாக்கம் ஆகும். கரு உருவாகும் போது கருப்பை பெரிதாக வளரத் தொடங்கும் போது, அது இடுப்புக்கு கீழே அழுத்தத்தை கொடுக்கிறது. இது ஆசனவாய் மற்றும் மலக்குடலைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை அளிக்கிறது. பிரசவத்தின்போது முக்கி குழந்தையை வெளியே தள்ளுவது மூல நோயின் நிலையை மோசமாக்கலாம். ஆனால் கர்ப்ப காலத்தில் மூல நோய் ஏற்படுவது பொதுவாக தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை. இது தாய் மற்றும் குழந்தைக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது என்றாலும், கர்ப்ப காலத்தில் தாய்க்கு மிகவும் எரிச்சலூட்டும் சூழ்நிலையை அளிக்கிறது.
கர்ப்ப காலத்தில் மூல நோயை தவிர்ப்பது எப்படி?
- ஏராளமான தண்ணீர் அல்லது பழச்சாறுகளை குடிப்பதன் மூலம் உங்கள் உடலை எப்போதும் நீர்ச்சத்து இருக்கும்படி வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்து நிறைந்த உணவு பரிந்துரைக்கப்படுகிறது. ஆசனவாய் மற்றும் மலக்குடலைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை மலச்சிக்கல் மேலும் அதிகரிக்கிறது.
- நீங்கள் மலம் கழிக்கவேண்டும் என்று உங்கள் உடல் சமிஞை கொடுத்தால் உடனே கழிப்பறைக்கு விரைந்து செல்லுங்கள். மலம் கழிப்பதை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க முயற்சிக்காதீர்கள்.
- மலக்குடலுக்கு ரத்த ஓட்டத்தை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இடுப்பு தசைகளை வலுப்படுத்துவது சிறந்தது. இதற்கு ‘கெகல் பயிற்சிகள்’ எனப்படும் பயிற்சிகளின் தொகுப்பு மிகவும் பயனளிக்கிறது. இந்த பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.
- நீண்ட நேரம் உட்காரவோ அல்லது நிற்கவோ முயற்சி செய்ய வேண்டாம். குத மண்டலத்தில் அதிக அழுத்தத்தைத் தடுக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பிறகு சில நிமிடங்கள் ஒரு சுற்று நடக்க முயற்சி செய்யுங்கள்.
- குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்ப எடை அதிகரிப்பு பொருத்தமானதாக இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான எடை அதிகரிப்பை உறுதி செய்துக்க கொள்வது முக்கியம்.
கர்ப்ப காலத்தில் மூல நோய் ஏற்பட்டால் அதை எவ்வாறு சமாளிப்பது?
- கர்ப்ப காலத்தில் மூல நோய் நிவாரணம் வழங்குவதில் சிட்ஸ் குளியல் (Sitz Bath) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீடித்த நிவாரணம் பெற உங்கள் குதப் பகுதியில் வெதுவெதுப்பான நீர் படும்படி உட்காருவதே சிட்ஸ் குளியல் ஆகும்.
- வீங்கிய பகுதியில் ஐஸ் கட்டிகளைப் மேலுக்கு வைத்து ஒத்தடம் கொடுப்பதால் வீக்கமும், வலியும் குறையலாம்.
- குதப் பகுதியையும் அதன் சுற்றுப்புறங்களையும் சுத்தமாகவும், வறண்டதாகவும் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இப்பகுதியில் அதிக ஈரப்பதம் எரிச்சலை ஏற்படுத்தும்.
- மலத்தை கழிக்கும்போது வலியைக் குறைக்க சில மலமிலக்கிகளை உங்களுக்கு பரிந்துரைக்க உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள். மலமிலக்கிகளை பொதுவாக தவிர்ப்பதே நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு முடியாத பட்சத்தில் மட்டுமே இதனை கேளுங்கள்.
- மூல நோயை சமாளிக்க உடல் நீர்ச்சத்துடன் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்.