ஆசனவாய் பொதுவாகவே அதிக ரத்த நாளங்களை கொண்டு இருக்கும். அதோடு தசைகளும், நார்திசுக்கட்டிகளும் (fibrous tissues) சேர்ந்தே இருக்கும். இந்த மூன்றும் ஆசனவாய் பகுதிக்கு ஒரு மெத்தை போன்ற (cushion) இலகு தன்மையை கொடுக்கும். ஆங்கிலத்தில் இந்த பகுதியை Hemorrhoid (ஹெமராயிடு) என்று கூறுவார்கள். இந்த சிக்கலான ஹெமராயிடு திசுக்கள், அளவுக்கு அதிகமான விரிந்த ரத்த நாளங்கள் கொண்டு இருந்தால் அந்த நிலையை “மூலம்” என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில் இதனை Piles அல்லது Hemorrhoid என்று அழைக்கிறார்கள்.
மூலத்தை பற்றி இன்னும் சில தகவல்கள்
ஆசனவாய் என்பது நான்கு செமீ நீளம் உள்ள ஒரு குழாய் ஆகும். உள்ளிருக்கும் முனை, பெருங்குடலின் கடைசி பகுதியோடு இணைந்திருக்கும். பெருங்குடலின் இந்த கடைசி பகுதியில் தான் மலம் சேகரிக்கப்பட்டு இருக்கும். இந்த பகுதியை ஆங்கிலத்தில் rectum என்றும், தமிழில் “மலக்குடல்” என்றும் கூறுவார்கள்.
இந்த ஆசனவாயில் பொதுவாகவே நிறைய சிரை (கெட்ட ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளங்கள்) இருக்கும். இந்த சிரைகள் சில சமையம் நிறைய ரத்தத்தை தேக்கி வைத்திருக்கும். இதனால் அவை பல்கி பெருகி, பை போன்று தோற்றமளிக்கும். அது ஒரு கொத்தான புழுக்களின் தோற்றத்தை கொண்டு இருக்கும். இந்த கொத்தான அமைப்பையே மூலம் என்று கூறுகிறோம். பல நேரங்களில் ஒரு கொத்து இல்லாமல், பல கொத்துகள் இருக்கலாம். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், விரிவடைந்த ரத்த நாளங்களின் தொகுப்பே மூலம் எனலாம்.
இந்த மூலத்தொகுப்புகள், குழாய் போன்ற ஆசனவாயின் உள்ளே அமைந்து இருந்தால், “உள் மூலம்” (Internal Hemarrhoid) என்று கூறப்படும். அப்படி இல்லாமல், வெளியே தெரிந்திருந்தால், “வெளி மூலம்” (External Hemarrhoid) என்று கூறப்படும்.
மூலம் எதனால் ஏற்படுகிறது?
மூலம் எதனால் ஏற்படுகிறது என்ற துல்லியமான காரணம் இதுவரை அறியப்படவில்லை. பரிணாம வளர்ச்சியின் ஒரு பரிசு மூலநோய் என்று கூட சொல்லலாம். நான்கு கால்களில் நடக்கும் குரங்குகளுக்கு மூலம் ஏற்படுவது இல்லை. மனிதர்கள் நாம் இரண்டு கால்களில் நிமிர்ந்து நடக்கும்படி பரிணாம வளர்ச்சி பெற்றதால், உடலில் இயல்பாக அழுத்தப்புள்ளிகள் வேறுபட்டு, அதனால் மூலம் ஏற்படுகிறது.
ஆனால் வேறு என்னென்ன காரணங்கள் மூல வியாதியை ஏற்படுத்த கூடியன என்று ஒரு பட்டியல் உண்டு. இதோ அந்த காரணங்கள்.
- நாள்பட்ட மலச்சிக்கல் – உங்களுக்கு மலச்சிக்கல் பல காலம் இருந்தால், நீங்கள் மலம் கழிக்க நிறைய முக்குகிறீர்கள் என்பது உண்மை. இந்த நிலை நீடிக்கும் போது, ஆசனவாயில் உள்ள ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகம் உண்டாகும். இது மூலத்தை ஏற்படுத்தலாம்.
- மகப்பேறு – பேறு காலத்தில் கருவுற்ற தாய்மார்களுக்கு மூலம் ஏற்பட வாய்ப்பு அதிகம். குழந்தையின் பாரத்தை சுமப்பதால், தாய்மார்கள் மலம் கழிக்கும்போது அதிகமான அழுத்தத்தை ஆசனவாய் ரத்த நாளங்கள் சந்திக்கின்றன. இதனால் மூலம் ஏற்படலாம். ஆனால் இந்த மூலம் பெரும்பாலும் குழந்தை பெற்றவுடன் மறைந்து போய்விடுவதுண்டு.
- பேதி – அடிக்கடி பேதியானால், ஆசனவாய் பகுதி தளர்ச்சியுறும். இந்த தளர்ச்சி மூலத்தை ஏற்படுத்தலாம்.
- நார்ச்சத்து குறைபாடு – நாம் உட்கொள்ளும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், அந்த குறைபாடு மலச்சிக்கலை தரும். மலச்சிக்கல் மூலத்தில் முடியலாம் என்ற பொதுவான கருத்தொற்றுமை உள்ளபடியால், நார்ச்சத்து குறைபாடு ஒரு மறைமுக காரணமாக இருக்கலாம்.
- வயது – சில சமயம் வயதும் காரணமாக இருக்கும். வயது ஆக ஆக, நமது ஆசனவாய் பகுதி தளர்வடையும். இந்த தளர்வு, மூலத்தை உண்டு பண்ணலாம்.
- மரபு – நமது மரபணுக்கள் கூட மூலத்தை உண்டு பண்ணலாம். ஆக சில சமையங்களில் நமது பிறப்பிலேயே மூலத்தை உண்டுபண்ணும் மரபணுக்களோடு நாம் பிறக்க நேரிடும்போது மூலம் ஏற்படலாம்.
- ஈரல் நோய்கள் – ஈரலில் ஏற்படும் Cirrhosis போன்ற மருத்துவ குறைபாடுகள் சிரைகளை தளர்வாக்க நேரிடும். இந்த நிலை மூலத்தை உண்டுபண்ணலாம்.