இப்போது கடை திறந்துள்ள பல ஜிம்கள் (உடற்பயிற்சி நிலையங்கள்) உடல் பருமனானவர்களை நம்பியே தொடங்கப்படுகின்றன. ஜிம்மில் சேரும் பலரும் பல காரணங்களுக்காக ஒழுங்காக ஜிம்மிற்கு போகாமல் இடையிலேயே விட்டுவிடுவதே அதிகமாக நடைபெறுகிறது. இது குறித்த எந்த தரவும் (data) இல்லையென்றாலும் ஜிம்மில் சேரும் ஏறக்குறைய 70% பருமனானவர் இப்படி தான் விட்டுவிடுகின்றனர். இந்த போக்கு இயல்பாகவே நம்மை “இது ஏன்” என்று கேட்கவைக்கிறது.
உடல் பருமானாக இருப்பவர்களின் உடல், உடல் பயிற்சியை எப்படி எடுத்துக் கொள்கிறது?
- உடல் பருமனாக இருப்பவர்கள் வெகு சீக்கிரமே சோர்வடைந்து விடுவார்கள்.
- உடல்வாகு இயல்பாக இருப்பவர்களைக் காட்டிலும் உடல் பருமனானவர்களுக்கு அதிகமாக மூச்சு வாங்கும்.
- அதே போல உடல்வாகு இயல்பாக இருப்பவர்களைக் காட்டிலும் உடல் பருமனானவர்களுக்கு அதிகமாக வியர்க்கும். இதனால் வெகு சீக்கிரமாக உடலில் நீரும், உப்ச்சத்தும் வெளியேறி தசைகள் இறுக்கமாகி (cramp) சோர்வடைவார்கள்.
- பருமனாக இருப்பவர்களின் மூட்டுகள் அதிக உடல் எடையை தாங்குவதால் விரைவிலேயே அது பலவீனமாகவும், தேய்மானம் ஏற்படுவதாலும் விரைவாக வலி ஏற்பட்டு அதனால் பயிற்சியை தொடர்வதை நிறுத்திவிடுவார்கள்.
- பருமனானவர்கள் ஒய்வு எடுத்துக்கொண்டு இருக்கும்போது கூட அவர்களது இதயம் வழக்கத்தை விட அதிகமாக வேலை செய்கிறது. அவர் உடல் பயிற்சி செய்யும்போது இதயம் இன்னும் கூட வேகமாக வேலை செய்து உடலின் எல்லா பாகத்திற்கும் ஆக்சிஜனை அனுப்பவேண்டி இருப்பதால் விரைவாக சோர்வடைந்து விடுவர்.
மேற்குறிப்பிடப்பட்ட எல்லா காரணங்களும் உடல் பருமனாக இருப்பவர்களை இயல்பாக இருக்கவிடாமல் செய்துவிடுகிறது. உண்மையாக சொல்லவேண்டும் என்றால், பருமனாக இருப்பவர்கள் உடல் பயிற்சி மேற்கொள்ளும் நேரத்தை விட, இடையில் ஒய்வு எடுத்துக் கொள்ளும்போது தான் நன்றாக இருப்பது போன்று உணர்வார்கள். உடலும் உள்ளமும் அவர்களுக்கு அதிகமாக அழுத்தத்துக்கு உள்ளாவதால், உடல் பயிற்சி செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணி தங்களது முயற்சியை கைவிட்டு விடுவார்கள்.
இந்த மனநிலை தான் அவர்களுக்கு எதிராக வேலை செய்கிறது. இந்த எதிர்மறையான சிந்தனையை ஒரு வகையில் அவர்களது மூளையே தூண்டுகிறது. ஜிம்மில் சேரும் பருமனானவர்கள் ஒழுங்காக ஜிம்மிற்கு போகாமல் இடையிலேயே விட்டுவிடுவது பெரும்பாலும் இந்த காரணங்களுக்கு தான். ஆனால் அவர்களது மூளையின் இந்த எதிர்மறையான எண்ணத்திற்கு செவிகொடுக்காமல், தொடர்ந்து ஜிம்முக்கு வந்து உடல் பயிற்சி மேற்கொள்பவர்களால் உடல் எடையை வெற்றிகரமாக குறைக்க முடிகிறது. உடலும் மெல்ல ஒத்துழைக்கத் தொடங்கி நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கத் தொடங்குகிறது.
அதேபோல் ஜிம்முக்கு வரும் மற்றவர்களோடு (இள வயதினர், ஒல்லியாக இருப்பவர்கள், ரொம்ப நாட்களாக ஜிம்மிற்கு வருபவர்கள்) தங்களை ஒப்பிட்டு பார்த்து, அது போல நம்மால் செய்யமுடியவில்லை என்று ஒரு வித பட்ட நிலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்வார்கள். இதனால் தான் உடல் பருமனாக இருப்பவர்கள் இடையிடையே counselling எடுத்துக் கொள்வது நல்லது என்கிறோம்.
இன்னொரு காரணமும் உள்ளது. உடல் எடை சிறிது சிறிதாக தான் குறையும். இந்த வேகம் போதாது என்று தவறுதலாக நினைத்துவிட்டால், பருமனாவர்கள் மன சோர்வுக்கு ஆளாகி உடல் பயிற்சியை விட்டுவிடுவார்கள். இதையும் தாண்டி வைராக்கியமாக உடல் பயிற்சியில் ஈடு படவேண்டும். விடா முயற்சியே பலனை தரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் அவர்களது பயிற்சி முறைகள் சிறிய அளவில் தொடங்கி, சிறிது சிறிதாக மேலேற்றிக் கொண்டு செல்லும்படி இருக்க வேண்டும். எடுத்தவுடன் கடினமான உடற்பயிற்சி செய்வது கூடாது. அப்போது தான் நீண்ட காலத்திற்கு உடல் பயிற்சியை செய்யும்படிக்கு உடல் தயாராகும்.
ஆக உடல் பருமனாக இருப்பவர்கள் உடல் பயிற்சி செய்ய மாட்டார்கள், அவர்கள் சோம்பேறிகள் என்றெல்லாம் நினைக்கக் கூடாது. அவர்களால் முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அதனால் அவர்கள் ஜிம்மிற்கு வந்து உடல் பயிற்சி செய்யும்போது அவர்களை ஊக்குவிக்கவேண்டும். உடல் ஆரோக்கியமாக இருப்பது நம் எல்லோருடைய உரிமை. உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் அந்த உரிமை உள்ளது என்பதை நாம் மறக்கக்கூடாது.