குடல்வால் அழற்சி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 வியப்பான உண்மைகள்
குடல்வால் அழற்சியானது திடீரென கடுமையான வயிற்று வலியாக வெளிப்படும் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம். குடல்வால் அழற்சி பற்றிய 10 ஆச்சரியமான உண்மைகளை கீழே தொகுத்துள்ளோம்.
ஒரு உறுப்பாக குடல்வாலுக்கென்று ஒரு நோக்கம் உள்ளது
குடல்வால் ஒரு வெஸ்டிஜியல் உறுப்பு (பயன்பாடு இல்லாமல் செயல் இழந்த) என்று நமக்கு நெடுங்காலமாக கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் குடல்வால் என்னும் உறுப்புக்கு தனித்த சில செயல்பாடுகல் இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளன. குடல்வாலின் சரியான செயல்பாட்டைப் பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை என்றாலும், அது நன்மை பயக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டு உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குடல்வால் அழற்சி எந்த வயதிலும் ஏற்படலாம்
குடல்வால் அழற்சி பொதுவாக குழந்தைகள், இளைஞர்கள் ஆகியவர்களுடன் தொடர்புடையது என்றாலும், இது எந்த வயதினரையும் பாதிக்கலாம். இது குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் கூட ஏற்படலாம்.
வயிற்று வலி தவறான சமிஞையை கொடுக்கலாம்
குடல்வால் அழற்சியின் ஆகப்பெரிய அறிகுறி வயிற்று வலி ஆகும். ஆனால் வலியின் இடம் நபருக்கு நபர் மாறுபடும். வலி அடிக்கடி தொப்புளுக்கு அருகில் தொடங்கி கீழ் வலது பக்கமாக நகரும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இது அடிவயிற்றின் பிற பகுதிகளிலோ அல்லது பின்புறத்திலோ கூட உணரப்படலாம்.
குடல்வால் அழற்சி எப்போதுமே திடீரென ஏற்படுவதில்லை
குடல்வால் அழற்சியானது திடீரென்று ஏற்படும் கடுமையான வலியாகத் தொடங்குவதாகக் கருதப்பட்டாலும், அறிகுறிகள் உண்மையில் பல நாட்களில் படிப்படியாகவே ஏற்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், இது பல மணிநேரங்களில் படிப்படியாக உருவாகலாம்.
குடல்வால் அழற்சி எப்போதும் அடைப்பினால் ஏற்படுவதில்லை
குடல்வால் அழற்சி பொதுவாக குடல்வாலின் நுழைவாயிலில் ஏற்படும் அடைப்பு காரணமாக ஏற்பட்டாலும், நோய்த்தொற்றுகள், விரிவாக்கப்பட்ட நிணநீர் முனைகள் அல்லது கட்டிகள் போன்ற பிற காரணங்களும் குடல்வால் அழற்சிக்கு வழிவகுக்கலாம்.
குடல்வால் அழற்சி நிச்சயமாக ஒரு மருத்துவ அவசரநிலை தான்
உரிய அவசர சிகிச்சையளிக்கப்படாவிட்டால், வீக்கமடைந்த குடல்வால் சிதைந்து, பெரிட்டோனிட்டிஸ் எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கலாம். உடனடி மருத்துவ கவனிப்பும், தேவை ஏற்பட்டால் உடனடி அறுவை சிகிச்சையும் சிக்கல்களைத் தடுக்க உதவும்.
வாழ்க்கை முறை தேர்வுகள் மூலம் குடல்வால் அழற்சியைத் தடுக்க முடியாது
உடல் பருமன், நீரிழிவு போன்ற சில மருத்துவ நிலைமைகளைப் போலல்லாமல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் குடல்வால் அழற்சியைத் தடுக்க முடியாது.
இமேஜிங் முறையில் நோயறிதல் எப்போதும் உறுதியான முடிவை கொடுக்காது
அல்ட்ராசவுண்ட் அல்லது CT ஸ்கேன் போன்ற இமேஜிங் பரிசோதனைகள் பெரும்பாலும் குடல்வால் அழற்சியைக் கண்டறிய உதவுகின்றன. ஆனால் பல காரணங்களுக்காக அவை எப்போதும் தெளிவான முடிவை அளிப்பதில்லை. குடல்வால் அழற்சியை பொறுத்தவரை ஒரு விரிவான நோயறிதல் முறை என்பது மருத்துவ அறிகுறிகள், உடல் பரிசோதனை, நோயாளியின் மருத்துவ வரலாறு போன்ற காரணிகளின் கலவையாகவே உள்ளது.
குடல்வால் அழற்சி ஒரு பொதுவான அறுவை சிகிச்சை முறையாகும்
அப்பெண்டிக்ஸை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது அப்பென்டெக்டமி என்று அழைக்கப்படுகிறது. இன்று உலகில் பொதுவாக செய்யப்படும் அவசர அறுவை சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும். எனவே இந்த அறுவை சிகிச்சையைப் பற்றி கவலைப்படவோ பயப்படவோ தேவையில்லை.
குடல்வால் அழற்சி மீண்டும் ஏற்படுவது அரிது
குடல்வால் அழற்சி ஏற்பட்ட பிறகு அறுவைசிகிச்சை மூலம் அப்பெண்டிக்ஸ் அகற்றப்பட்டால், மீண்டும் குடல்வால் அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருப்பினும், புதிதாக வயிற்று வலி அல்லது ஏதேனும் தொடர்புடைய அறிகுறிகள் இருந்தால், உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரை அணுகுவது அவசியம்.