மஞ்சள் காமாலை – ஒரு அறிமுகம்
நம்மில் பலருக்கு மஞ்சள் காமாலை என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் உள்ளது. ஏனென்றால் நமது வாழ்நாளில் ஒரு முறையாவது அதை அனுபவித்திருக்கலாம். நமக்கு இல்லாவிட்டாலும், நம் குடும்பத்தில் ஒருவருக்கு கண்டிப்பாக மஞ்சள் காமாலை வந்திருக்கும். மஞ்சள் காமாலை என்பது ஒரு நோயல்ல, மாறாக ஏதோ ஒரு நோயின் அறிகுறி என்பதை நாம் அறிந்தால் நமக்கு அது வியப்பை தரலாம்.
மஞ்சள் காமாலை ஏன் வெளிப்படுகிறது? மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் என்னென்ன?
இரத்தத்தில் பிலிரூபின் அதிகரிப்பதே மஞ்சள் காமாலை வருவதற்குக் காரணம் ஆகும். வழக்கத்தை விட அதிக இரத்த சிவப்பணுக்கள் அழிக்கப்படும் போதோ அல்லது கல்லீரலில் குறைந்த வளர்சிதை மாற்றம் ஏற்படும் போதோ, மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. பிலிரூபின் என்பது ஒரு மஞ்சள் நிற கழிவுப் பொருளாகும். இது அழிக்கப்பட்ட இரத்தத்தில் இருந்து இரும்பு அகற்றப்பட்ட பிறகு இரத்த ஓட்டத்தில் இருக்கும். கல்லீரல் வழக்கமாக இரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டுகிறது. ஆனால் சில நேரங்களில் அதிக பிலிரூபின் இருந்தால், கல்லீரலால் முழு பிலிரூபினையும் வெளியேற்ற முடிவதில்லை. அவை மேலும் மேலும் இரத்தத்தில் குவிந்து உடல் திசுக்களில் கசிகிறது. இந்த கசிவு காரணமாகவே தோலிலும், கண்களிலும் இது காமாலைக்கான மஞ்சள் நிறத்தை உருவாக்குகிறது. மஞ்சள் காமாலை இருப்பது என்பது கல்லீரல் அல்லது பித்த நாளத்தில் ஒரு பிரச்சனையைக் குறிக்கிறது. புதிதாகப் பிறந்த பெரும்பாலான குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை இருக்கலாம் . இதனை உடலியல் மஞ்சள் காமாலை (physiological jaundice) என்று அழைக்கிறார்கள். குழந்தைகளை வெளிச்சத்தில் காட்டினால் இந்த வகை மஞ்சள் காமாலை தானாகவே குணமாகிறது.
மஞ்சள் காமாலை வகைகள்
மஞ்சள் காமாலையை மருத்துவ மஞ்சள் காமாலை அல்லது அறுவை சிகிச்சை வகை மஞ்சள் காமாலை என்று பரவலாக வகைப்படுத்தலாம். மருத்துவ மஞ்சள் காமாலை மருந்துகளாலோ கவனிப்பதன் (Observation) மூலமாகவோ சிகிச்சையளிக்க முடியும். அறுவை சிகிச்சை மஞ்சள் காமாலைக்கு அறுவை சிகிச்சை கண்டிப்பாக தேவைப்படுகிறது.
மருத்துவ வகை மஞ்சள் காமாலை
மருத்துவ மஞ்சள் காமாலை ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ஹீமோலிடிக் அனீமியா, ஹீமாடோமா போன்ற நிலைகள் மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும். ஹெபடைடிஸ் பி, சி அல்லது பிற வைரஸ்களால் ஏற்படும் தொற்று போன்ற நிலைகளில் கல்லீரல் செயல்பாடு தடைபடும் போது மஞ்சள் காமாலை ஏற்படலாம். அதிகமாக மது அருந்துதல் பொதுவாகவே மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும். சில மருந்துகளை நீண்ட காலத்திற்கு உட்கொள்வது, குறிப்பாக புற்றுநோய்க்கான கீமோதெரபி மருந்துகள் மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும். சில ஆட்டோ இம்யூன் நோய்கள் கல்லீரலில் காயத்தை ஏற்படுத்தி, அதனால் மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
அறுவைசிகிச்சை வகை மஞ்சள் காமாலை
பித்தப்பையில் கற்கள் இருப்பது, பித்த நாளத்திலோ, கணையக் குழாய் அல்லது சிறுகுடலிலோ ஏற்படும் அடைப்பு, கல்லீரலில் மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் போன்றவை மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும். இந்த நிலைமைகள் அனைத்தும் அறுவைசிகிச்சைக்குரியவை. மேற்கண்ட காரணங்களின் விளைவாக உருவாகும் மஞ்சள் காமாலையிலிருந்து நிவாரணம் வழங்க அறுவை சிகிச்சை தலையீடு கண்டிப்பாக தேவை. மேற்கூறிய அறுவைசிகிச்சை நிலைகளின் விளைவாக வெளிப்படும் மஞ்சள் காமாலையானது, தோல் மற்றும் கண்களின் மஞ்சள் நிற வழக்கமான அறிகுறியைத் தவிர, அரிப்பு மற்றும் வெளிர் நிற மலம் ஆகிய அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
மஞ்சள் காமாலைக்கு நோய் கண்டறிதல் முறைகளும், சிகிச்சைகளும்
உடல் பரிசோதனை என்பது மருத்துவரால் செய்யப்படும் முதல் நிலை பரிசோதனை ஆகும். ஒரு எளிய இரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை மற்றும் பித்த உப்பு சோதனை (சிறுநீர் சோதனை) ஆகியவை மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை காரணங்களால் மஞ்சள் காமாலை ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய உதவும். அடுத்த நிலை நோயறிதலாக அடிவயிற்றில் எடுக்கப்படும் அல்ட்ராசவுண்ட் ஆகும். பித்தப்பையில் ஏதேனும் அசாதாரணம் தென்பட்டால் அது துல்லியமான காரணங்களைத் தரலாம். நிலைமையைப் பொறுத்து, அறுவை சிகிச்சை நிபுணர் CT ஸ்கேன் அல்லது MRI போன்ற மற்ற நோயறிதல் முறைகளை எடுத்துக்கொள்ள சொல்லலாம். சில குறிப்பிட்ட அறுவைசிகிச்சை நிலைமைகள் மஞ்சள் காமாலையை ஏற்படுத்துவதாக சந்தேகம் இருந்தால், அறுவை சிகிச்சை நிபுணர் அதைக் குறிப்பிட்டு, அறுவை சிகிச்சையைப் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வார்கள்.
அறுவைசிகிச்சை காரணங்களாலும் மஞ்சள் காமாலை உண்டாவதால், மஞ்சள் காமாலைக்கான மூலிகை சிகிச்சைகள் இந்த காரணங்களால் ஒருபோதும் வேலை செய்யாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே சரியான நோயறிதல் மற்றும் மஞ்சள் காமாலைக்கான காரணங்களை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதல் இருந்தால்தான் மஞ்சள் காமாலைக்கான சரியான சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.