கடுமையான இரத்த சோகைக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு தீர்வை கொடுக்குமா?
மருத்துவத்தில் இரத்த சோகைக்கு பயனுள்ள பல சிகிச்சைகள் இருந்தாலும், இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் தங்கள் கடுமையான இரத்த சோகை நிலையைக்கூட குணப்படுத்த முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். கடுமையான இரத்த சோகையை குணப்படுத்த இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் போதுமானதா? ஆராய்வோம் வாருங்கள்.
இரத்த சோகையும், கடுமையான இரத்த சோகையும்
இரத்த சோகை என்பது திசுக்களுக்கும், உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல போதுமான ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் உடலில் இல்லாதபோது ஏற்படும் ஒரு நிலை ஆகும். இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிக முக்கியமானது. தவறான உணவு, நாள்பட்ட நோய்கள், கர்ப்பம் மற்றும் இரத்த இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இது ஏற்படலாம்.
கடுமையான இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை என்பது இரும்புச்சத்து குறைபாடு காரணமாக உடலில் போதுமான ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாத ஒரு நிலை. இது திடீரென குறுகிய காலத்திற்குள் நிகழ்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடுமையான இரத்த சோகையை ஏற்படுத்தும் அளவுக்கு இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஆகும். இந்த திடீர் சிவப்பணுக்களின் இழப்பு அதிக இரத்தப்போக்கு, மருத்துவ அவசரநிலை, அல்லது அதிர்ச்சி காரணமாக திடீரென இரத்த இழப்பு ஆவதால் ஏற்படுவது ஆகும். இரத்த இழப்பு ஏற்படும்போது, இரத்த சிவப்பணுக்களின் இழப்போடு உடலில் இரும்புச்சத்து இழப்பும் கூடவே ஏற்படுகிறது.
கடுமையான இரத்த சோகையின் அறிகுறிகள்
எல்லா இரத்த சோகைக்கும் உரிய அறிகுறிகள் தான் இதற்கும் ஏற்படுகிறது. ஆனாலும் இந்த வகையில் கொஞ்சம் அதிகமாகவே இதன் அறிகுறிகள் இருக்கும்.
- வெளிறிய தோற்றம்
- நெஞ்சு வலி
- தலைவலி
- டின்னிடஸ் (காதுகளில் ஒலி கேட்பது)
- மூச்சு திணறல்
இரத்த சோகைக்கான இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்
இரும்பு என்பது இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உடலுக்கு தேவையான ஒரு கனிமமாகும். இரத்த சோகைக்கான சில இயற்கை வைத்தியங்கள் இரும்புச்சத்து நிறைந்த கீழே பட்டியலிடப்பட்ட உணவுகள் உட்கொள்வதை அதிகரிப்பதை உள்ளடக்கியது ஆகும்
- சிவப்பு இறைச்சி
- கோழி
- மீன்
- பீன்ஸ்
- பருப்பு
- கீரை
ஒரு உண்மை கருத்து: இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவும் ஒரு முறையான வழி தான். சப்ளிமென்ட்களில் இருக்கும் இரும்பை விட, உடலானது உணவில் இருந்து இரும்பை எளிதாக உறிஞ்சுகிறது. மேலும் இரும்புச்சத்து நிறைந்த உணவு இரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. ஹீம் இரும்பு எனப்படும் இறைச்சிகளில் இருந்து வரும் இரும்பு சத்திற்கு இது குறிப்பாக உண்மை ஆகும். அதாவது இந்த ஹீம் இரும்பானது, தாவர உணவுகளில் கிடைக்கும் இரும்புச்சத்தை விட உடலால் எளிதாக உறிஞ்சப்படுகிறது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மட்டுமே கடுமையான இரத்த சோகையை எதிர்த்துப் போராட முடியாது என்பதற்கான காரணங்கள்
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மூலம் இரும்புச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பது லேசான இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பதில் வேண்டுமானால் உதவக்கூடும். கடுமையான இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை குணப்படுத்த இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை மட்டுமே எடுப்பது போதுமானதாக இருக்காது. அதற்கான சில காரணங்கள் இங்கே:
- இரத்த சோகையின் தீவிரம்: கடுமையான இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை வகையானது இரத்த சோகையின் கடுமையான வடிவமாகும். அதை சரிசெய்ய அதிக அளவு இரும்பு தேவைப்படுகிறது. உணவுகளில் உள்ள இரும்புச் சத்து, உடலின் அதிகரித்த இரும்புத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது.
- அதிகப்படியான இரத்தப்போக்கு – பெருங்குடல் புற்றுநோய், பிற வகை புற்றுநோய்கள், புண்கள் அல்லது பிற உள் உறுப்புகளில் அதிக இரத்தப்போக்கு, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு, அறுவை சிகிச்சையின் பொது ஏற்படும் இரத்த இழப்பு, விபத்து போன்ற நிகழ்வுகள், போன்றவற்றில் அதிகப்படியான இரத்த இழப்பு இருக்கும். இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் இப்படி திடீரென ஏற்படும் இரத்த இழப்பினால் உண்டாகும் இரும்புச்சத்து குறைபாட்டை ஈடுசெய்ய முடியாது.
- அடிப்படை மருத்துவ நிலை: சில நேரங்களில், கடுமையான இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை, இரைப்பை குடல் இரத்தப்போக்கு போன்ற மருத்துவ நிலையால் கூட ஏற்படலாம். இதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கூட, இரத்த சோகைக்கான அடிப்படை காரணத்தை நிவர்த்தி செய்ய இரும்புச்சத்து நிறைந்த உணவை மட்டும் எடுத்துக்கொள்வது போதுமானதாக இருக்காது.
- இரும்பு உறிஞ்சுதல்: உணவில் இருந்து இரும்பை உறிஞ்சும் ஒவ்வொருவரின் உடலின் திறனும் மாறுபடும். மேலும் அனைத்து வகையான இரும்புகளும் சமமாக, நன்றாக உறிஞ்சப்படுவதில்லை. உதாரணமாக, இறைச்சி உணவுகளில் காணப்படும் ஹீம் இரும்பு, தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படும் ஹீம் அல்லாத இரும்பை விட எளிதாக உறிஞ்சப்படுகிறது. தேநீர், காபி போன்ற சில பானங்கள் இரும்பு உறிஞ்சுதலைத் மட்டுப்படுத்தலாம். பொதுவாக இரும்புச்சத்து நன்றாக உறிஞ்சப்படுவதற்கு, வயிற்றில் போதுமான அளவு அமிலமும், வைட்டமின் சியும் தேவைப்படுகிறது.
- தனிப்பட்ட வேறுபாடுகள்: சிலருக்கு மரபியல் காரணிகளால் உணவில் இருந்து இரும்பை உறிஞ்சுவதில் சிரமம் இருக்கலாம். இது கடுமையான இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை, உணவு மாற்றங்களின் மூலமாக மட்டும் சிகிச்சையளிப்பதை கடினமாக்கும்.
கடுமையான இரத்த சோகைக்கான சிகிச்சை
கடுமையான இரத்த சோகைக்கான சிகிச்சையானது நோய்நிலையின் அடிப்படை காரணத்தைப் பொறுத்தது ஆகும். கடுமையான இரத்த சோகைக்கான சில பொதுவான சிகிச்சைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
- இரத்தம் செலுத்துதல்: கடுமையான இரத்த சோகை ஏற்படும் சந்தர்ப்பங்களில், உடலுக்கு இரத்தம் ஏற்றுவது தேவைப்படலாம். இது குறைபாடுள்ள இரத்த சிவப்பணுக்களை மாற்றுவதற்கும், ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை அதிகரிப்பதையும் உள்ளடக்கிய ஒரு முறை ஆகும். இரத்தமாற்றம் என்று சொல்லப்படும் இரத்தம் செலுத்துதல் பொதுவாக ஒரு மருத்துவமனையில் செய்யப்படுகிறது.
- அடிப்படை நோய்நிலைக்கான சிகிச்சை: இரத்தப்போக்கு புண் போன்ற அடிப்படை மருத்துவ நோய்நிலை காரணமாக இரத்த சோகை ஏற்பட்டால், அந்த நிலைக்கு சிகிச்சையை உங்கள் மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம். இது அறுவை சிகிச்சை, மருந்து அல்லது பிற மருத்துவ தலையீடுகளை உள்ளடக்கியதாக இருக்கலாம்.
- இரும்புச் சத்துக்கள்: இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்பட்டால், உங்கள் மருத்துவர் உங்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை பரிந்துரைக்கலாம். இந்த சப்ளிமெண்ட்ஸ் உடல் அதிக இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவும். மேலும் இது திசுக்களுக்கும், உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்தும்.
- உணவுமுறை மாற்றங்கள்: இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி12 போன்ற சில ஊட்டச்சத்துக்கள் இல்லாத காரணத்தால் உங்களுக்கு இரத்த சோகை ஏற்பட்டால், அந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய உதவும் உணவுமுறை மாற்றங்கள் அல்லது சப்ளிமெண்ட்ஸ்களை உங்கள் மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மூலம் இரும்புச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பது மிதமான இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பதில் உதவக்கூடும். ஆனால் கடுமையான இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை தானாகவே குணப்படுத்த இது போதுமானதாக இருக்காது. இரத்த சோகைக்கான அடிப்படைக் காரணத்தை முதலில் கண்டறிய உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிப்பது முக்கியம் ஆகும். அதற்கு பின்னர் உங்கள் மருத்துவர் சரியான சிகிச்சை முறையை உங்களுக்கு தெரியப்படுத்துவார்.