ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு உடல் பருமனும் காரணமா?
உடல் பருமனும் அது தன்னுடன் கொண்டுவரும் மற்ற உபாதைகளும் அறிந்தது தான். அதனுடன் அது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையையும் கொண்டுவருகிறது. உடல் பருமன் எதனால் ஆண்களுக்கு இந்த மலட்டுத்தன்மையை கொடுக்கிறது? அதற்கு பிரதானமாக ஆறு காரணங்கள் இருக்கின்றன. அவை….
- உடல் பருமன் பொதுவாகவே செக்ஸ் மீதுள்ள ஆர்வத்தை குறைவாக்கும். செக்ஸ் ஆசையை அது மட்டுபடுத்தும். பொதுவாகவே குறைவான உடலுறவு என்பது, குழந்தை பெறுவதை குறைக்கும். அது மட்டுமில்லை…உடல் பருமனாக இருப்பதால் நிறைவான உடலுறவை செய்ய முடியாது. உடலுறவு கொள்வதே கடினமாக ஒரு வேலையாக மாறிப்போவதால் அதில் நாட்டம் குறைகிறது. மேலும் உடலுறவு கொண்டாலும், பருமனான ஆணின் உறுப்பு பெண்ணின் உறுப்பை சரியான படிக்கு உள்ளே சென்றடைவது இல்லை. அதனால் விந்தணுக்கள் பெண்ணின் கருப்பையை சரியாக அடைவதில்லை.
- நம்முடைய செக்ஸ் ஹார்மோன்கள் உடலில் உள்ள கொழுப்புகளினால் கடத்தப்பட்டு ஆணின் பிறப்புறுப்பை சென்றடைகிறது. உடல் பருமனால் இந்த ஹார்மோன்கள் அதிகமான கொழுப்புகளிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் போதிய விரைப்புத்தன்மையை ஆணின் பிறப்புறுப்பு பெறுவதில்லை.
- ஆணின் விரைப்பை எந்த அழுத்தமும் இல்லாமல் உடலுக்கு வெளியே தொங்க வேண்டும். உடலில் அதிகமாக கொழுப்பு இருக்கும்போது விரைப்பை அப்படி தொங்காமல், பருமானான தொடைகளின் இடுக்குகளில் மாட்டிக்கொண்டு விடுகிறது. இதனால் விரைப்பையில் உள்ள உஷ்ணம் அதிகரிக்கிறது. அதிகமான இந்த வெப்பம் விந்தணுக்களை அழித்து விடுகிறது. இதனால் குழந்தை பெறும் தகுதியை அந்த விந்தணுக்கள் இழந்து விடுகின்றன.
- உடல் பருமன் மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. அதிகமான மன அழுத்தம், மேலும் உடலை பருமன் ஆக்குகிறது. அதிகமான மன அழுத்தத்தால், கார்டிசோல் என்ற ஒரு வித sterioid ஹார்மோன்களை அதிகமாக உடல் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் ஆண் செக்ஸ் ஹார்மோனான “டெஸ்டோஸ்டீரான்” அளவை குறைக்கிறது. இந்த ஹார்மோன் குறைபாடு விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு, விந்தணுக்களையும் சிதைத்து, அதனை பெண்களின் கருமுட்டையோடு இணையும் தன்மையை சிதைக்கிறது. குழந்தை இல்லை என்ற மன அழுத்தம் அதனோடு சேர்ந்து மேலும் அதிக மன அழுத்தத்தை கொடுக்கிறது.
- மன அழுத்தத்துடன் இருக்கக்கூடிய பருமனான ஆண்கள் குடிப் பழக்கத்துக்கும புகை பிடிக்கும் பழக்கத்துக்கும் ஆளானால் இந்த நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.. இந்த இரண்டு பழக்கங்களும் மேலும் மலட்டுத்தன்மையை அதிகரிக்குமே தவிர குறைக்காது.
- உடல் பருமன் உள்ளவர்களின் ஹார்மோன்கள் இயல்பான அளவு இல்லாமல் இருப்பதால், இன்சுலின் எதிர்ப்பு அதிகமாக இருக்கும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து சர்க்கரை நோயை உண்டு பண்ணும். சர்க்கரை நோய் என்ற நீரிழிவு நோய் இருந்துவிட்டால் அவர்களுக்கு மலட்டுத்தன்மை அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. இதே காரணங்களால் தைராய்டு ஹார்மோன்களின் அளவு தேவை அளவு அதிகரிக்கிறது. இதுவும் மலட்டுத்தன்மைக்கு ஒரு காரணம்.
அதனால் ஆண்களே….உங்கள் உடல் பருமனை சீரியசாக எடுத்துக்கொண்டு உடலை இளைக்க வழி செய்யுங்கள். குறிப்பாக கல்யாணம் ஆகாத இளைய ஆண்கள் பருமனாக இருந்தால் கண்டிப்பாக உங்கள் உடலை இளைக்க ஆனதை செய்யுங்கள். உடல் பருமன் என்ற பூதத்தை விரட்டி அடிக்க சபதமேடுங்கள்.