வயிறு பரிசோதனை என்பது அந்தரங்க உறுப்புகளையும் உள்ளடக்கியதே
அடிவயிற்றைப் பரிசோதிப்பது என்றால், மருத்துவர் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர், மேல் மற்றும் கீழ் வயிற்றுப் பகுதியைத் தொடுவது, உணருவது மற்றும் பரிசோதிப்பது மட்டுமே அடங்கியது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், ஒரு முழு அடிவயிற்று பரிசோதனையில் மேல் வயிறு, கீழ் வயிறு, அடிவயிறு ஆகியவற்றை பரிசோதிப்பது மட்டுமல்லாமல், ஆணுக்கு அவரது ஆண்குறி மற்றும் விரைப்பை, பெண்ணிற்கு அவர்களது யோனி, இருவருக்கும் ஆசனவாய் பகுதி ஆகியவற்றையும் சேர்த்தே பரிசோதிப்பது தான் முழு அடிவயிற்று பரிசோதனை ஆகும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் செய்யப்படும் அடிவயிற்று பரிசோதனை
மருத்துவர் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர் தங்கள் கைகளைப் பயன்படுத்தி மென்மையாகவோ அல்லது ஆழமாகவோ தொடுவதன் மூலம் உடலைச் சரிபார்க்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் “palpation” என்பார்கள். இந்த முறையின் போது, மருத்துவர் நோயாளியின் வயிற்று தசைகளின் தொட்டவுடன் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனிக்கிறார். மேலும் ஏதாவது அசௌகரியத்தின் அறிகுறிகள் நோயாளிகளின் முகத்தில் பிரதிபலிக்கிறதா என்று பார்க்கிறார். மருத்துவர் ஒரு லேசான palpation முறையில் தொடங்கி பின்னர் ஆழ்ந்த palpation முறையை செய்யலாம்.
கீழ் மற்றும் மேல் அடிவயிற்றின் (முன் வயிற்றுப் பகுதி) palpation முறைகள் மூலம், நன்கு அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் குடல் அழற்சி, பெரிட்டோனிட்டிஸ், கல்லீரலின் விரிவாக்கம், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகங்கள், இடுப்புப் பகுதியின் உள்ளே நீர்கட்டிகள் போன்றவற்றைக் கண்டறிய முடியும். எனவே மருத்துவர் இருக்கும்போது வயிற்றுப் பகுதியில் ஒரு palpation பரிசோதனை செய்து, கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளையும் ஆய்வு செய்கிறார். தொப்புள் குடலிறக்கம் போன்ற குடலிறக்கங்களும் தொப்புள் பகுதியை ஆராய்வதன் மூலம் கவனிக்கப்படுகின்றன.
Palpation என்னும் படபடப்பு முறையை தவிர, ஸ்டெதாஸ்கோப்பைப் பயன்படுத்தி குடல் ஒலிகளைக் கவனிப்பது போன்ற நுட்பங்கள், ஏதேனும் அசாதாரணமாக உள்ளுக்குள் இருக்கிறதா என்று கண்டறியப் பயன்படும் சில முறைகள் ஆகும். இந்த வகை பரிசோதனை செயலிழந்த சிறுகுடல் பகுதிகள், பெரிட்டோனிட்டிஸ், குடல் அடைப்பு போன்றவை இருக்கிறதா என்று கண்டறிய உதவுகிறது.
Palpation-னோடு சேர்ந்து Percussion எனப்படும் தாளங்கள் மற்றொரு பரிசோதனை நுட்பம் ஆகும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், தாளமானது உடல் பகுதியைத் தட்டி, அதனால் உண்டாகும் ஒலியைக் கூர்ந்து கவனிப்பதாகும்.
அடிவயிற்று பரிசோதனையின் ஒரு பகுதியாக அந்தரங்க உறுப்புகளை பரிசோதிப்பது ஏன் அவசியமாகிறது?
ஆண்களில், விரைப்பையின் உள்ளே இருக்கும் விரைகள் (டெஸ்டிஸ்) குழந்தையின் வளர்ச்சியின் போது சிறுநீரகங்களுக்கு அருகில் உருவாகிறது. இது பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான் கீழே விரைப்பையில் இறங்குகிறது. எனவே சிறுநீரகத்தில் ஏற்படும் எந்தவொரு தொற்றுநோயும் விரைப்பையில் பிரதிபலிக்கும். அதுபோல விரைப்பையில் ஏற்படும் எந்தவொரு தொற்றுநோயும் சிறுநீரகத்தில் பிரதிபலிக்கும்.
விரைப்பையில் ஏற்படும் தொற்று புரோஸ்டேட்டையும், சிறுநீர்ப்பையையும் பாதிக்கும். அல்லது தொற்று சிறுநீர்ப்பையில் இருந்து விரை வரை (நேர்மாறாகவும்) பயணிக்கலாம். ஹெர்னியா மற்றும் ஹைட்ரோசெல் ஆகியவை வலியை ஏற்படுத்தும் பிற நோய்நிலைகள் ஆகும். எனவே ஆண்களை பொறுத்தவரை விரைப்பையை பரிசோதிக்காமல் அடிவயிற்று பரிசோதனை முழுமையடையாது.
ஆண்களுக்கு சொல்லப்பட்ட நோய்த்தொற்றுகள் மற்றும் பிற காரணங்களைச் சரிபார்க்க, பெண்களுக்கு யோனி பரிசோதனை அவசியம். பெண்கள் தங்கள் அந்தரங்க உறுப்புகளின் உடற்கூறியல் (anatomy) காரணமாக சுலபமாகவே நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள்.
ஆண்கள், பெண்கள், இருவரிடமும், மலக்குடல் அல்லது ஆசனவாய் கட்டிகள் போன்ற நிலைமைகள் இல்லை என்பதை நிறுவ குதப் பகுதியில் விரலை உள்ளேவிட்டு செய்யப்படும் Digital Examination அவசியம். இந்த பரிசோதனை, மூல நோய் நிலை அல்லது அது எந்த கட்டத்தில் உள்ளது என்பதை அறிய இது உதவியாக இருக்கும்.
அடிவயிற்றுப் பகுதியில் அல்ட்ராசவுண்ட் செய்யப்படும்போதெல்லாம், விறைப்பை அல்லது யோனி பகுதியையும் சேர்த்தே பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது. அந்தரங்க உறுப்புகளை ஆராயும்போது, வெட்கப்படுவதில் எந்த பயனும் இல்லை. இந்த பரிசோதனைகள் அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கோ அல்லது மருத்துவர்களுக்கோ உடலில் உள்ள மருத்துவ நோய்நிலைகளை கண்டறிவதற்கு ஒரு நல்வாய்ப்பை வழங்குகிறது.