குடல்வால் வெடித்தால் என்ன ஆகும்?
குடல்வால் வெடிக்குமா என்று சிலர் கேட்கலாம். வயிற்று வலி வந்தால், மருத்துவர் சோதித்துப் பார்த்து குடல்வால் நோய் உள்ளது என்பார். உடனடியாக அகற்றிவிட பரிந்துரைப்பார். நீங்களும் உடனே அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்துவிடுவீர்கள். இப்படி தான் நடக்கும் என்று நாம் எல்லோரும் நினைக்கிறோம் அல்லவா? ஆனால் பல சமயங்களில் இவ்வளவு சுலபமாக நடப்பதில்லை. ஏன்? விரிவாக பார்ர்ப்போம்.
குடல்வால் பிரச்சனையின் ஆரம்ப கட்ட அறிகுறிகளும், அதன் காரணங்களும்
குடல்வாலில் பிரச்னை ஏற்பட மூல காரணமே அதில் ஏற்படும் கிருமி தொற்று தான் என்பதை மறக்கக்கூடாது. எதனால் கிருமி தொற்று ஏற்படுகிறது என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்றாலும், குடல்வாலின் வாயில் பகுதியில் ஏற்படும் அடைப்பில் தான் இந்த கிருமி தொற்று தொடங்குகிறது என்று பரவலாக யூகிக்கப் படுகிறது. இந்த அடைப்பை அனேக நேரங்களில் மலம் தான் ஏற்படுத்துகிறது. அப்படி அடைப்பு ஏற்பட்டால் குடல்வாலின் சுவற்றில் ஒரு வித அழுத்தத்தை இது ஏற்படுத்துகிறது. இதுவே வயிற்று வலியாக நமக்கு ஏற்படுகிறது.
முதலில் என்னென்ன அறிகுறிகள் தெரியும்?
- தொப்புள் பகுதியில் மிதமான வலி
- காய்ச்சல் / ஜுரம்
- வாந்தி
இந்த அறிகுறிகள் தோன்றும்போது யாரும் இதனை முதலில் குடல்வால் பிரச்சனையோடு சம்பந்தப் படுத்துவதில்லை. சாதாரண வயிற்று வலி என்றே நினைத்து இருந்துவிடுவார்கள். அல்லது சோடா ஏதாவது குடித்தோ, கைவைதியங்கள் செய்தோ அல்லது மருந்து கடைகளில் வயிற்றுவலி மாத்திரையை கேட்டு, வந்த அறிகுறிகளை மழுங்கடித்து பேசாமல் இருந்துவிடுவார்கள்.
அடுத்த கட்டத்தில் என்னென்ன அறிகுறிகள் தென்படும்?
- வலி இன்னும் மோசம் அடைந்து தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும். இந்த வலி தொப்புளில் இருந்து கீழ் வலப்பக்கத்தில் இருக்கும்.
- அதிகமான காய்ச்சல் / ஜுரம்
- வாந்தி
- ரத்த வெள்ளணுக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். கிருமிதொற்றுக்கு எதிராக உங்கள் உடல் போராடுவதால் இந்த எண்ணிக்கை அதிகமாக ஆகிறது.
இந்த அறிகுறிகளையும் சட்டை செய்யவில்லை என்றால்?
இந்த கட்டம் தான் ஆபத்தானது. இந்த கட்டத்தில் பெரும்பாலும் கண்டுபிடித்து விடலாம். ஆனாலும் இந்த நிலையிலும் உதாசீனப் படுத்தினால், கண்டிப்பாக குடல்வால் உள்ளுக்குள் வெடிக்கும். பட்டாசு போல “டமால்” என்றெல்லாம் வெடிக்காது. அதன் சுவரில் விரிசல் ஏற்பட்டு, அதன் உள்ளே இருக்கும் கழிவுகளையும் (மலம்), கிருமி தொற்றுகளோடு குடலுக்கு வெளியே வயிற்றுப் பகுதிக்குள் வெளியேற்றும்.
குடல்வால் வெடித்தால் ஏற்படும் அறிகுறிகள்
- வயிறு கல் போன்று இறுகி விடும்
- கடுமையான காய்ச்சல் / ஜுரம்
- கடுமையான வாந்தி / வலி
- செப்டிக் நிலைக்கு ஆளை கொண்டு போய்விடும்
இந்த நிலை ஏற்பட்டால் அறுவை சிகிச்சைக்கு உடனே போக வேண்டியது தான். இல்லையேல் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அப்படி உள்ளே குடல்வால் வெடிக்கும்போது, உள்ளே சிந்திய கழிவுகளை அறுவை சிகிச்சையில் சுத்தப்படுத்தி, குடல்வாலையும் அகற்றி விடுவார்கள்.
இந்த மோசமான நிலைக்கு செல்லுவதற்கு முன்னரே, குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) பிரச்சனையை முன்னரே அல்ட்ராசவுண்டு கருவிகளை கொண்டு கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடித்தால் உயிருக்கு ஆபத்தான கட்டத்திற்கு செல்லாமல் அறுவை சிகிச்சை செய்து குடல்வாலை எளிதாக அகற்றிவிடலாம். அதே நேரம் உயிருக்கு ஆபத்தான கட்டத்திற்கும் செல்ல வேண்டிய நிலை இருக்காது.
முடிவு – இப்போது நவீன மருத்துவ முறைகள், உபகரணங்கள், ஸ்கான் கருவிகள், அண்டிபயாடிக் மருத்துகள், ஆகியவை உள்ளபடியால் குடல்வால் வெடிப்பு என்பதே மிகவும் அரிதாகி விட்டது. அதனால் குடல்வால் பிரச்சனை இருந்ததென்றால் முன்பு போல சில மணிநேரங்களிலேயே அறுவை சிகிச்சை செய்து முடிக்க வேண்டிய நிலையெல்லாம் இப்போது இல்லை. எந்த வயிற்று வலியையும் அலட்சியப் படுத்த வேண்டாம். ஒரு நல்ல காஸ்ட்ரோ நிபுணரை தொடர்பு கொண்டு உங்கள் வயிற்று வலி குடல்வாலால் ஏற்படவில்லை என்று உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.