பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் முன்பு சர்ஜனிடம் இந்த பத்து கேள்விகளை கேளுங்கள்
நீங்கள் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தது அவசரமாக எடுத்த முடிவல்ல. நீங்கள் நிறைய முறை பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் உங்கள் கேள்விகளை எல்லாம் கேட்டு, தெளிவு பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளலாம் என்றே முடிவு செய்திருப்பீர்கள். அப்படி கேட்பதும் நல்லதே. அறுவை சிகிச்சைக்கு முடிந்தபின் என்னென்ன வழிமுறைகளை கையாளவேண்டும் என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் முன்பு என்னென்ன கேள்விகளை நீங்கள் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் கேட்கலாம் என்ற கேள்விப் பட்டியல் இதோ.
பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் கேட்கவேண்டிய கேள்விகள்
- எனக்கு நீங்கள் என்ன காரணங்களுக்காக பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையை பரிந்துரைக்கிறீர்கள்? எனது உடல் எடை அளவுக்கு அதிகமாக வரம்பை மீறி போனதால் பரிந்துரை செய்கிறீர்களா அல்லது வேறு காரணங்களுக்காக பரிந்துரை செய்கிறீர்களா?
- பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையில் எத்தனை வகைகள் உள்ளன? அதில் எந்த வகையை எனக்கு பரிந்துரை செய்கிறீர்கள்? அந்த பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை எனக்கு எந்த விதத்தில் பொருந்துகிறது?
- இந்த அறுவை சிகிச்சை முறையில் உள்ள இறப்பு விகிதம், இதில் இயல்பாக இருக்கக் கூடிய ஆபத்துகள் என்னென்ன? அதே போல இந்த அறுவை சிகிச்சை செய்துக்கொண்டால் வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவா?
- பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பிறகு சராசரியாக எவ்வளவு எடையை என்னால் குறைக்க முடியும்? சாத்தியமான எடை குறைப்பு எவ்வளவு சதவிகிதம் இருக்கும்? அந்த சாத்தியப்பட்ட உடல் எடை குறைப்பு எத்தனை மாதங்களில் அல்லது வருடங்களில் நடக்கும்?
- அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவுடன் எனது டையட் (உணவுமுறை) என்ன? பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறை திட்டம் (Diet Plan) என்று ஏதாவது உள்ளதா? அப்படி வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய உணவு முறை என்று எதாவது இருக்கிறதா?
- அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவுடன் வைட்டமின், தாது மாத்திரைகள், உணவு சப்ளிமெண்ட் என்று ஏதாவது தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டுமா?
- பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பிறகு எத்தனை நாட்கள் நான் மருத்துவமனையில் இருக்க நேரிடும்? பிறகு நான் எத்தனை நாளுக்கு ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும்?
- அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவுடன் எவ்வளவு நாட்களில் என்னுடைய அன்றாட வீட்டு அல்லது அலுவலக வேலைகளை செய்யலாம்? பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதால் இனி வாழ்நாள் முழுவதும் சில வேலைகள் செய்யக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா?
- பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பிறகு நான் உடல் பயிற்சி செய்ய ஜிம் செல்லலாமா? அல்லது ஓடுதல், வாக்கிங் (cardio vascular exercises) போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாமா? ஆம் என்றால், அறுவை சிகிச்சை செய்துக்கொண்டு எத்தனை நாட்களில் இதனை செய்யலாம்?
- பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதால் எனது வயிற்றுப் பகுதியில் ஏதாவது வடுக்கள் தோன்றுமா? அதேபோல எடை குறைப்பு ஏற்பட்டால், எனது தோல் சுருங்கிப்போய் வளவளவென தொங்கிப்போகுமா? அப்படி தொங்கிப்போனால், அதனை எப்படி இறுக்குவது?