பருமனாக இருப்பவர்கள் ஏன் அளவுக்கு அதிகமாக கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுகிறார்கள்?
அளவுக்கு அதிகமாக வரைமுறை இல்லாமல் சாப்பிடுவதை Binge Eating Disorder (BED) என்று மருத்துவ பாஷையில் கூறுவார்கள். வரைமுறையில்லாமல் இப்படி சாப்பிடுவது உடல் பருமனில் தான் முடியும். இந்த இரண்டுமே ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. இவை இரண்டும் எப்படி ஒன்றன் மீது ஒன்று செல்வாக்கு செலுத்துகின்றன என்ற உண்மையை பார்ப்போம்.
வரைமுறை இல்லாமல் சாப்பிடுவது கீழ்கண்ட காரணங்களுக்காக இருக்கலாம்.
- மனதளவில் உள்ள சஞ்சலம்
- மிதமாகவோ, அதிகமாகவோ உள்ள மன அழுத்தம்.
- Depression என்று கூறப்படும் மனசோர்வு
- தீங்கான உணவு பழக்கங்கள் ஏற்படுத்தும் உடல் நலக்குறைபாடு – தீங்கான உணவு பழக்கங்கள் உடலுக்கு தேவையான சத்துகளை அளிக்காமல் உணவுக்கான ஏக்கத்தை உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்படுத்தும். உணவின் மேல் ஏற்படும் இந்த திடீர் தீவிர நாட்டம், கட்டுப்பாடு இல்லாமல் உணவு உட்கொள்வதை ஊக்குவிக்கும்.
- தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் நாம் அன்றாடம் பார்க்கும் குப்பை உணவுகள் குறித்த விளம்பரங்கள் நம்முள் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த உணவுகளை ஏன் நாம் சாப்பிட்டு பார்க்க கூடாது என்ற ஆவலை தூண்டும். இந்த குப்பை உணவுகளில் சர்க்கரை அதிகமாக உள்ளதால் இந்த உணவுகளுக்கு நாம் அடிமையாகி கட்டுப்பாடு இல்லாமல் இதனை உண்ணத் தொடங்குவோம்.
மக்கள் ஏன் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுகிறார்கள்?
மன அழுத்தம், மன சோர்வு அதிக அளவில் சஞ்சலம் இவை எல்லாம் உடலில் உள்ள “மகிழ்ச்சி ஊக்கிகள்” எனப்படும் “happy hormones” அளவை குறைத்துவிடும். இந்த நிலைமையில், அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடும்போது இந்த குப்பை உணவானது இந்த மகிழ்ச்சி ஊக்கிகளான டோப்பமைன், எண்டார்பைன் போன்றவைகளை சுரக்க மூளைக்கு சமிஞை அளிக்கும். இதில் தான் வினையே. சாதாரணமாக ஆரம்பிக்கும் இந்த பழக்கமே நாளடைவில் கட்டுப்பாடு இல்லாமல் மக்களை சாப்பிட வைக்கும். நமது மனநிலையை சுலபமாக மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் வல்லமை உணவுக்கு உண்டு. அதுவும் உணவு துரிதமாக கிடைக்கும் ஒன்று என்பதால் இந்த கொடிய பழக்கத்துக்கு சுலபமாக இரையாவோம்.
இந்த பழக்கம் தொடர்வதன் மூலம் முதலில் அதிக எடை போட்டு பின்னர் அதிவேகமாக உடல் பருமனை நோக்கி சென்றுவிடுவோம். ஆக இந்த இரண்டு காரணிகளும் ஒரு சர்வ வல்லமை பொருந்திய உடலுக்கு அழிவை தரக்கூடிய மோசமான ஜோடிகள். உடல் பருமனாகி வடிவம் இல்லாமல் போகும்போது அது மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தி மேலும் நம்மை சாப்பிட வைக்கும். இது கடைசியாக மன சோர்வில் கொண்டு போய் வைக்கும்.
உடல் பருமன் மனித உடலை சோம்பேறியாக்கி உடல் உழைப்பை குறைத்துவிடும். இந்த நிலை மேலும் மன அழுத்தத்தை தரக்கூடியது. இது கூட நாம் அதிகமாக உணவு சாப்பிடுவதை ஊக்குவிக்கும்.
ஆகவே கட்டுப்பாடு இல்லாமல் உணவு சாப்பிடுவதை குறைக்க வேண்டியதை செய்தால் வாழ்வில் உடல் ஆரோக்கியம் நிலை பெறும். நல்ல சத்தான உணவுகளை தேடிச்சென்று சமைத்து உணவில் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் பெற்று இந்த மோசமாக சுழலில் இருந்து விடுபடலாம்.