குழந்தைகளுக்கும் குடல்வால் அழற்சி ஏற்படலாம்
இளைய தலைமுறையினருக்கு தான் அதிக அளவில் அப்பெண்டிக்ஸ் என்று கூறப்படும் குடல்வால் அழற்சி ஏற்படுகிறது. நான்கு அல்லது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குடல்வால் அழற்சி ஏற்பட்டால் என்னாவது? அவ்வளவு சிறிய குழந்தைகள் என்ன மாதிரியான வலி ஏற்பட்டு இருக்கிறது என்று துல்லியமாக கூறமாட்டார்கள். அப்படி கூற அவர்களுக்கு வயதும் இல்லை. அதனால் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் வலி குடல்வால் அழற்சியால் தானா என்பதை கண்டறியும் மிகப்பெரிய பொறுப்பு குழந்தைகள் நல மருத்துவர்களிடமும், பொது மருத்துவர்களிடமும் தான் உள்ளது. அவர்கள் சரிவர அறிகுறிகளை ஆராய்ந்து தகுந்தபடி அறுவை சிகிச்சை நிபுணரிடம் பரிந்துரைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வரும் குடல்வால் அழற்சியை கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள்.
- பத்து வயதிலிருந்து இருபது வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கே அதிகம் குடல்வால் அழற்சி ஏற்பட்டாலும், மூன்று அல்லது நான்கு வயது குழந்தைகளுக்கு கூட குடல்வால் அழற்சி ஏற்பட்டிருப்பதை பல மருத்துவ தரவுகள் உறுதிபடுத்துகின்றன. அதனால் எப்போதெல்லாம் குழந்தைகள் வயிற்று வலியால் துடிக்கிறார்களோ, கீழ்கண்ட மற்ற அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று பாருங்கள்.
- வயிற்று வலியுடன் வாந்தியும், ஜுரமும் வரும்.
- குழந்தைக்கு பசி எடுக்காது. சில சமயத்தில் பேதி ஆகலாம்.
- குழந்தைகளுக்கு குடல்வால் அழற்சி ஏற்பட்டால், அநேகமாக குடல்வால் வெடித்த நிலையிலேயே கொண்டுவருவர். செப்சிஸ் என்று சொல்லக்கூடிய நிலைக்கு குடல்வால் அழற்சி சென்றிருக்கும். குடல்வால் அழற்சியை கண்டுபிடிப்பதில் ஏற்படும் தாமதமே இதற்கு முழு முதல் காரணம்.
- சாதரணமாக குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் ஜுரம், வயிற்றுவலி போன்றவை மாதிரியே குடல்வால் அழற்சி அறிகுறிகளும் உள்ளதால், அதனை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
- வயிற்று வலியால் துடிக்கும் குழந்தை விளையாடுவதை நிறுத்திவிட்டதா என்பதை கவனியுங்கள். இது உங்களுக்கே ஓரளவுக்கு யூகத்தை கொடுக்கலாம்.
- நீங்கள் குழந்தையை மருத்துவரிடன் காண்பிக்கும்போது, குழந்தை மருத்துவரை வயிற்றுப் பகுதியில் கைவைக்கவே விடாது. அப்படியே கைவைத்து பரிசோதனை செய்தாலும், குழந்தை வயிற்றை கல் போன்று இறுக்கிக்கொள்ளும். குழந்தையின் இந்த செயல் வலியை தாங்கும் பொருட்டு செய்தாலும், மருத்துவரின் பரிசோதனையை மேலும் சவலாக்கும். இது கூட ஒரு வகையில் குடல்வால் அழற்சிக்கான யூகத்தை கொடுக்கலாம்.
குடல்வால் அழற்சியை கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்களை சமாளிக்க சில வழிகள்
- குடல்வால் அழற்சிக்கான சில தனித்த அறிகுறிகள் தென்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.
- வயிற்றுப் பகுதியில் கைவைத்து அழுத்தி பிறகு கையை எடுத்தால் வரும் விண்ணென்ற வலி இருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்க்கவேண்டும். இந்த வலியை rebound tenderness என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இந்த வலி இருக்கிறது என்று குழந்தைகள் நல மருத்துவர் உணர்ந்தால் உடனே அறுவை சிகிச்சை நிபுணருக்கு தகவல் கொடுப்பது மிகவும் நல்லது.
- மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு முறையும் குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும், பொது மருத்துவர்களுக்கானது. மருத்துவர் குடல்வால் அழற்சி ஏற்பட்டு இருக்கலாம் என்று அவருக்கு தோன்றும் பட்ச்சத்தில், ரத்த பரிசோதனை போன்ற மேலும் சில பரிசோதனைகளுக்கு பரிந்துரைப்பார்.
குடல்வால் அழற்சிக்கான மருத்துவம்
- குடல்வால் அழற்சி உள்ளது என்பதை அல்ட்ராசவுண்டு மற்றும் ஸ்கான் அறிக்கைகள் மூலம் நிரூபித்துவிட்டால், குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டி வரும். இப்போதெல்லாம் லேபரோஸ்கோபி முறைகள் வந்துவிட்டபடியால், அறுவை சிகிச்சைகள் எளிமையாக நிகழ்த்தப்படுகின்றன. எக்காரணத்தை கொண்டும் கால தாமதம் வேண்டாம்.
- ஒருக்கால் குடல்வால் வெடித்தவுடன் (rupture of appendix) அதே குடல்வால் அழற்சி உள்ளது என்பதை அல்ட்ராசவுண்டு மற்றும் ஸ்கான் அறிக்கைகள் மூலம் நிரூபித்துவிட்டால், உடனிடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும். காலதாமதம் உயிரிழப்பை ஏற்படுத்தலாம். அறுவை சிகிச்சை செய்யும்போது குடல்வால் வெடித்ததால் உள்ளே வழிந்துள்ள குடல்வால் கசடுகளை முழுவதும் கழுவி முடித்த பிறகு, குடல்வாலையும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அகற்றிவிடுவார்கள்.