பருமனானவர்களுக்கு ஏற்படும் அகோரப்பசியை எப்படி கட்டுப்படுத்துவது
உடல் எடை சற்று அதிகமாக இருப்பவர்களும், உடல் பருமனாக இருப்பவர்களும் தாங்கள் வாழும் வாழ்கை முறையையும், உணவு முறையையும் மாற்றியமைத்து உடல் பருமனிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழவே பெரும்பாலும் விரும்புகின்றனர். அதேபோல பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையை செய்துக் கொண்டவர்களும் உணவின் பால் அவர்களுக்கு உள்ள ஈர்ப்பை குறைக்கவே மிகவும் விரும்புகின்றனர். உணவின் மேல் ஏற்படும் இந்த ஈர்ப்பு அகோரப்பசியாக உருவெடுத்து பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை அளித்த நன்மைகளை புறந்தள்ளும் அபாயம் உள்ளது. அப்படியென்றால் பருமனானவர்களுக்கு ஏற்படும் அகோரப்பசியை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
உணவை அதிகமாக உண்ண தூண்டும் காரணிகள் என்னென்ன?
உங்கள் உடல் சுரக்கும் ஹார்மோன்கள் தான் முதல் காரணம் ஆகும். சர்க்கரை மிகுந்த மாவுச்சத்து உணவுகள் தான் அதிகப்படியான பசியை திரும்பத்திரும்ப ஏற்படுத்துகின்றன. ஏனென்றால், சர்க்கரை மிகுந்த உணவுகளை நம் உடலுக்கு கொடுக்கும்போது நம் உடல் எண்டார்பின் (endorphin) என்ற ஹார்மோனை சுரக்கின்றது. இந்த ஹார்மோன் உடலுக்கு தற்காலிகமான சுகத்தை தருகின்றது. ஆனால் சர்க்கரையோ விரைவாக செரிமானம் ஆகி விரைவாக நம் வயிற்றை விட்டு வெளியேறுகிறது. இப்போது சுரக்கும் பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் மேலும் சர்க்கரையை கேட்டு மூளைக்கு சமிஞையை அனுப்புகிறது.
அகோரப்பசியை கட்டுப்படுத்தும் சில வழிமுறைகள்
- டையட் என்ற பெயரில் உண்ணாவிரதம் எதுவும் இருக்காதீர்கள். உடல் நிறைய உணவை கேட்டால் அதற்கு கொடுத்துவிடுங்கள். ஆனால் அப்படி நீங்கள் கொடுக்கும் உணவுப்பொருட்கள் அடர் சத்துகள் (nutrientdense) நிறைந்ததாக இருக்கட்டும். அவை கண்டிப்பாக சர்க்கரை உள்ள உணவுப்பொருட்களாகவோ, மாவுச்சத்து நிரம்பிய உணவுப்பொருட்களாகவோ இருக்கவேண்டாம். நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் நட்ஸ் போன்றவையாக அந்த உணவுகள் இருக்கட்டும்.
- நல்ல கொழுப்பு அதிகமுள்ள உணவுகளான கோழிக்கறி, மீன், முட்டை, சீஸ் என்று சொல்லப்படும் பாலாடைக்கட்டி, போன்ற உணவுப் பொருட்களை மிதமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த உணவுகள் வயிறு நிறைந்த ஓர் உணர்வை கொடுக்கின்றன. இந்த உணர்வு பசியைக் கட்டுப்படுத்தும்.
- எப்போது சாப்பிட்டாலும் குறைந்த அளவிலேயே உணவை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு பதில் சின்னச்சின்ன அளவுகளில் ஆறு வேலையாக உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் குளிர்சாதனப்பெட்டியை சர்க்கரை அதிகமுள்ள உடலுக்கு தீங்கான எந்த உணவுப்பொருட்களையும் கொண்டு நிரப்பாதீர்கள். சாக்லேட், ஐஸ்கிரீம், பர்கர், கோலா, போன்ற சர்க்கரை அதிகமுள்ள பொருட்களை உங்கள் குளிர்சாதனப்பெட்டியில் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி பார்த்துக்கொண்டால் நடுஇரவில் ஏற்படும் பசியை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், மோசமான உணவுகள் வயிற்றுக்குள் இறங்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
- உங்கள் குளிர்சாதனப்பெட்டியை சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், போன்றவற்றால் நிறைத்து வையுங்கள். நடுஇரவில் ஏற்படும் பசிக்கு இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் எந்த தீங்கும் இல்லை.
- மாலை சீக்கிரம் உறங்கச்செல்லுங்கள், அதே போல அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதிகாலையில் எழுந்திருப்பது மிகுந்த பலனளிக்கும் ஒரு செயல் என்று பல வெற்றியாளர்களும், சாதனையாளர்களும் சான்றளிக்கிறார்கள்.
- அதிகாலையில் யோகா, ஜிம், நடைபயிற்சி போன்றவற்றை செய்யலாம். அப்படி செய்யும்போது உங்களோடு பயிற்சியில் ஈடுபடுபவர்களோடு நீங்கள் சாதரணமாக உரையாடும்போது உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பமாகவும் அது அமையலாம். அது உங்கள் மன அழுத்தத்தையும் சிறிது குறைக்கலாம்.
- உங்கள் உடல் எடையின் மீது எப்போதும் கவனமாக இருங்கள். அதனை வாரத்திற்கு ஒரு முறையாவது குறித்து வைத்து ஒப்பிடுங்கள். மேலே குறிப்பிட்டவற்றை நீங்கள் தொடர்ந்து செய்துவந்தால் உங்கள் உடல் எடை படிப்படியாக இறங்குவதை நீங்களே கவனிக்கலாம். இப்படியே தொடர்ந்தால் மேலே சொன்ன வழிமுறைகள் உங்கள் பழக்கவழக்கமாகவே மாறிவிடும்.
- நீங்கள் அடைய விரும்பும் உடல் எடையை மனதில் குறித்துவைத்து அதனை குறிக்கோளாக அமைத்துக்கொண்டு செயல்படுங்கள். உங்கள் மனதில் ஆழமாக அது பதியும் பட்சத்தில் நீங்கள் மேலும் மேலும் உந்தப்பட்டு உடல் ஆரோக்கியமாக வாழ்வீர்கள். இந்த உந்துதலே அகோரப்பசியில் இருந்து உங்களைக் காப்பாற்றியது என்று நினைக்க கண்டிப்பாக இடமுண்டு.