வேகமான உடல் எடை குறைப்பு, பித்தப்பை கல் உருவாக காரணமாக இருக்குமா?
ஊரெல்லாம் பேலியோ பற்றிய பேச்சு தான். சமூக ஊடகங்களின் மூலமாக வேகமாக பரவிய ஒரு டையட் முறை உண்டென்றால் அது பேலியோவாகத்தான் இருக்க முடியும். இந்த டையட் முறையில் அதிகமாக கொழுப்பு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மாவுச்சத்து மிகவும் குறைந்த அளவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. உடலில் கொழுப்பு சேமிப்பு என்ற அடிப்படையே இதில் இல்லாது போவதால், வேகமான உடல் எடை குறைப்புக்கு இந்த டையட் முறை உதவுகிறது. இந்த வேகமான உடல் எடை குறைப்புக்கும், பித்தப்பையில் கல் உருவாவதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
உடல் எடை குறைப்பு குறித்த பொது ஆராய்ச்சி முடிவுகள்
வாரத்திற்கு 1.5 கிலோ வீதம் வேகமான எடை குறைப்புக்கு உடலை உட்படுத்தும்போது பித்தப்பையில் கல் உருவாகும் வாய்ப்பு மிக அதிக அளவில் உருவாகிறது என்று நிறைய ஆராய்ச்சிகள் குறிக்கின்றன. ஒருவேளை முன்பே இருக்கும் பித்தப்பை கற்கள் இந்த டையட் முறை காரணமாக ஊக்கம் பெற்று மேலும் அதிகமாகவோ, அதனால் பாதிப்பையோ ஏற்படுத்தவோ ஒரு காரணமாக அமையலாம்.
உணவில் கொழுப்பு அதிகமாக இருந்தால், பித்தநீர் சுரப்பதும், அதனை உடல் பயன்படுத்தி கொழுப்புணவை செரிமானப்படுத்துவதும் ஒரு சுழற்சி போல அமைந்து, பித்தநீர் பித்தப்பையில் தங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தான் தோன்றும். இந்த தர்க்கத்தின் படி பித்தப்பையில் கல்லே ஏற்படக்கூடாது. ஆனால் நம் உடல் இந்த தர்க்கத்தின்படி இயங்குவதில்லை. நம் உடலின் செயல்பாடு இன்னும்கூட ஒரு புரியாத புதிர் தான். பித்தநீர் பயன்பாடு இந்த தர்க்கத்தின் படி அமைவதில்லை என்பதே உண்மை. அதனால் தான் சிக்கலே.
பித்தப்பையில் கல் – பாதிப்பு அதிகம் ஏற்படும் வகையினர்
பேலியோவோ, அல்லது வேறு டையட் முறைகளையோ சரிவர கடைப்பிடிக்காமல், இடையிடையே நிறுத்தி மறுபடியும் மறுபடியும் தொடங்குபவர்கள் தான் பித்தப்பையில் கல் உருவாகும் ஆபத்துக்கு அதிகமாக உட்படுவார்கள். உடல் எடையை சீராக குறைத்தவர்களும், பிற்பாடு அதனை அதே சீராக வைத்திருப்பவர்கள் அதிகமாக இந்த சிக்கலில் மாட்டிக்கொள்வதில்லை. அதனால் ஒரு டையட் முறையை நீங்கள் கடைபிடிக்கத் தொடங்கினால் அதனை தொடர முயற்சி செய்யுங்கள். பேலியோ டையட் முறை மிகவும் செலவு பிடிக்கும் முறை என்பதே அனேகமாக உண்மை. அதனால் முதலிலேயே என்னென்ன செலவுகள் ஆகும், அதனை நீங்கள் தாங்கும் அளவிற்கு உங்களின் பொருளாதாரம் உள்ளதா என்று ஆராய்ந்து சரியாக திட்டமிடுங்கள். பின் அதனை மேற்கொள்ளுங்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலைப்பாடு நல்லதல்ல. பேலியோ டையட் முறை சிலருக்கு போரடிக்கும். இனிப்பான விஷயங்களுக்கு தடா இருப்பதால் நிரோய பேரால் அதனால் தொடர முடிவதும் இல்லை.
இயற்கையிலேயே பெண்களுக்கு பித்தப்பையில் கல் உருவாகும் வாய்ப்புகள் மிக அதிகம். கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக பித்தப்பையில் கல் ஏற்படுகிறது. அதனால் டையட் முறையில் இருக்கும் பெண்கள், தங்கள் பித்தப்பையின் நலனில் அக்கறை கொள்வது நல்லது. பெண்களுக்கு ஆபத்து விகிதம் அதிகம் என்று சொன்னாலும், ஆண்களுக்கு பித்தப்பையில் கல் வராது என்று அர்த்தம் இல்லை. சுருங்கச் சொன்னால், உடல் பருமனாக இருப்பவர்களுக்கு பித்தப்பையில் கல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் சற்று அதிகமே.
வேகமான உடல் எடை குறைப்புக்கும், பித்தப்பையில் கல் உருவாவதற்கும் தொடர்பு நிறைய இருப்பதால், உங்கள் பித்தப்பையின் மேல் அக்கறை கொள்வது நல்லது. அதனால் எந்த டையட் முறையை நீங்கள் கடைபிடித்தாலும், கொஞ்சம் விழிப்போடு இருப்பது எப்போதும் நல்லதே.