ஹெர்னியாவில் பல விதங்கள் உள்ளனவா?
ஆம். ஹெர்னியாவில் பல விதங்கள் இருக்கின்றன. உள்வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், மூளை, முதுகுத்தண்டு, உள் மார்பு துவாரம் போன்ற பகுதிகளில் ஹெர்னியா என்று கூறப்படும் குறைபாடு ஏற்படலாம். அதனால் ஹெர்னியாவை பொத்தாம் பொதுவாக “குடலிறக்க நோய்” என்று கூறுவது அபத்தம் என்பதை அறியலாம். அப்படியென்றால் ஹெர்னியாவுக்கு தமிழில் என்ன சொல்லலாம்? “பிக்கம்”, “பிதுக்கம்” என்று சொல்லை தமிழ் அகராதி குறிக்கிறது. பொதுவாக எல்லோருக்கும் ஹெர்னியா என்றாலே தெரியும்.
உள்வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளில் ஏற்படும் ஹெர்னியாவே மிகவும் அதிகமாக ஏற்படுகிறது. மொத்த ஹெர்னியா வகைகளில் அதுவே 95% சமயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
உள்வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளில் ஏற்படும் ஹெர்னியாவில் கூட எந்தப் பகுதியில் ஹெர்னியா ஏற்பட்டுள்ளது என்று வைத்து விதங்களை பகுப்பார்கள். அவ்வாறாக உள்வயிற்றுப் பகுதியில் நேரக்கூடிய ஹெர்னியாக்கள் பல விதங்கள் இருந்தாலும், இதில் பொதுவாக ஆறு வகை ஹெர்னியாக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
பொதுவாக காணப்படும் வயிற்று ஹெர்னியாவின் வகைகள்:
குடலிறக்கம் அல்லது இங்குவினல் ஹெர்னியா (Inguinal Hernia)
எல்லா ஹெர்னியா வகைகளிலும் மிகவும் அதிகமாக ஏற்படும் ஹெர்னியா வகை இதுவே. ஆண்களுக்கே இந்த வித ஹெர்னியா அதிகமாக ஏற்படுகிறது. ஆண் குழந்தை பிறப்பதற்கு சற்று முன்பு தான் அதன் விரைப்பைகள் அடிவயிற்றுப் பகுதியில் இருந்து கவட்டைக்கால் என்று சொல்லப்படும் inguinal canal என்ற பகுதி வழியாக கீழே இறங்கும். இந்த கவட்டைக்கால் (Inguinal canal) ஆண் குழந்தை பிறந்த மூன்று அல்லது ஆறு மாதங்களில் இயல்பாகவே மூடிக்கொள்ளும். ஆனால் சில சமையங்களில் இந்த கவட்டைக்கால் (Inguinal canal) மூடுவதே இல்லை. இதற்கான காரணம் என்ன என்பது புலப்படவில்லை. இந்த அமைப்பு மூடாமல் அப்படியே இருக்குமானால் பின்னாளில் இதுவே ஹெர்னியா ஏற்பட காரணமாக அமைந்துவிடுகிறது. இந்த ஹெர்னியா விதத்தை மட்டுமே வேண்டுமானால் “குடலிறக்க நோய்” என்று குறிக்கலாம்.
தொப்புள் பகுதியில் ஏற்படும் ஹெர்னியா / Umbilical Hernia
இந்த ஹெர்னியா வகை தொப்புள் பகுதியில் ஏற்படுகிறது. தொப்புள் பகுதியானது வயிற்றுப்பகுதியில் இயல்பாகவே பலவீனமான தசைகளைக் கொண்டு இருக்கும். தொப்புள்கொடி அறுக்கப்பட்டவுடன் அது மூடுவதற்கு முன்பாக சில காலங்களுக்கு இந்த வகை ஹெர்னியா இயல்பாகவே குழந்தைகளுக்கு இருக்கும். அது தானாகவே சில மாதங்களில் மறந்துவிடும்.
சில சமையம் பிள்ளைபேறு கூட பெண்களுக்கு இந்த வகை ஹெர்னியா ஏற்பட காரணமாக அமைவதுண்டு. இது குழந்தை கருப்பையில் வளரும்போது வயிற்றுப்பகுதி அதிகமான அழுத்தத்தை சந்திப்பதாலும், குழந்தையை பெறும்போது அதிகமாக முக்கும் காரணத்தால் ஏற்படுகிறது. பெண்களுக்கு இந்த வகை ஹெர்னியா வருவதற்கு இதுவே காரணம்.
பொதுவாக அதிக உடல் பருமன் இருந்தால், கொழுப்பு அதிகமான அழுத்தத்தை கொடுத்து அந்த பகுதியை பலவீனமாக மாற்றுகிறது. ஆண்களுக்கு இந்த வகை ஹெர்னியா ஏற்பட்டால் அதற்கு காரணம் உடல் பருமனே.
தொடை பகுதியில் ஏற்படும் குடலிறக்கம் (அ) ஃபிமோரல் ஹெர்னியா (Femoral Hernia)
இந்த வகை ஹெர்னியா பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. ஆனால் மிக அரிதாக ஆண்களுக்கும் ஏற்படலாம். இந்த ஹெர்னியாவில் “கவட்டை” என்று சொல்லப்படும் “groin” தான் பலவீனமான பகுதி. இதில் தொடை எலும்புக் கால்வாய் என்று சொல்லப்படும் femoral canal பகுதிக்குள் குடலிறக்கம் ஏற்படும். இது கிட்டத்தட்ட இங்குவினால் ஹெர்னியா போன்றே இருக்கும். இந்த வித ஹெர்னியாவில் சிக்கல் அதிகமாக ஏற்படுவதாலும், உடனே இதனை கண்டுபிடிக்க முடியும் என்ற காரணத்தாலும், மருத்துவர் உடனே அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள பரிந்துரைப்பார்.
மேல் இரைப்பை ஹெர்னியா / Epigastric Hernia
நெஞ்செலும்புக்கு சற்று கீழே இருக்கும் தசைகளில் ஏற்படும் பலவீனம் இந்த வகை ஹெர்னியாவை ஏற்படுத்தும். இதனால் மேல் இரைப்பை மற்றும் குடல் வெளியே வரலாம். இந்த வகை ஹெர்னியா ஆண்களுக்கு சற்றே அதிகமாக ஏற்படுகிறது. இந்த வகை ஹெர்னியா உடல் பருமனாலும், அதிகப்படியான கொழுப்பினாலும் தான் ஏற்படுகிறது. பெண்களுக்கு இந்த வகை ஹெர்னியா ஏற்பட மகப்பேறு ஒரு காரணம் ஆகும்.
ஹையாடஸ் ஹெர்னியா / Hiatal Hernia
இந்த ஹெர்னியா வகை வயிற்றுப்பகுதி தசைகளில் ஏற்படும் பலவீனத்தால் நிகழ்வது இல்லை. இது திரைத்தசை / diapraghm என்று சொல்லப்படும், நெஞ்சையும் வயிற்றையும் பிரிக்கும் வலுவான தசைப்பகுதியில் ஏற்படும் பலவீனத்தால் ஏற்படுவது. திரைத்தசை என்பது மேலே உள்ள நெஞ்சுக்கூட்டையும், கீழே உள்ள வயிற்றுப்பகுதியையும் பிரிக்கும் ஒரு வித வலுவான தசை. மூச்சு உள்ளிழுப்பதற்கும், வெளியே விடுவதற்கும் இந்த தசையே உதவுகிறது. இந்த தசையில் ஏற்படும் ஹெர்னியாவையே Hiatal Hernia என்று வகை படுத்துகிறோம். இந்த ஹெர்னியா ஏற்பட்டால், இந்த சந்து வழியாக வயிற்றின் மேல் பகுதியானது நெஞ்சுப்பகுதிக்குள் சற்றே பிதுங்கும். இதனால் உணவும், வயிற்றுக்கு உள்ளே உள்ள அமிலங்களும் மேலே எழும். இது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். சில சமையங்களில் இதனை நெஞ்சு வலி என்று நாம் தவறாக நினைத்து இதய சம்பந்தமான நோய் இருக்கிறது என்று நினைக்க வைக்கும்.
கீறல் அல்லது அறுவைசிகிச்சைக்கு பின் ஏற்படும் ஹெர்னியா / Incisional Hernia
முன்னர் அறுவை சிகிச்சை செய்த பகுதியில் ஹெர்னியா ஏற்பட்டால் அதனையே கீறல் ஹெர்னியா அல்லது Incisional Hernia என்று கூறுகிறோம். இந்த வகை ஹெர்னியா அறுவை சிகிச்சை முடிந்து சில வாரங்களிலோ, சில மாதங்களிலோ, ஏன் பல ஆண்டுகள் கழித்தோ கூட ஏற்படலாம். பெண்களுக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை அல்லது சிசேரியன் அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கு பிறகு இந்த ஹெர்னியா ஏற்படலாம். அறுவை சிகிச்சையால் குடலின் கூறு சற்றே மாறுகிறது. இதனால் இந்த வகை ஹெர்னியா ஏற்பட்டால் மேலும் பல சிக்கல்களை உருவாக்கும். அதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள மருத்துவர் பரிந்துரைப்பார்.