ஏன் பல வகையான ஹெர்னியா மெஷ்கள் உள்ளன?
ஹெர்னியா மெஷ் அல்லது அறுவைசிகிச்சை மெஷ் என்று அழைக்கப்படும் மெஷ்கள் குடலிறக்க துளைகளை மூட உதவுகிறது. நமக்கு நெருக்கமானவர்கள் பலர் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டதை நாம் கேள்விப்பட்டிருப்போம். மேலும் குடலிறக்க அறுவை சிகிச்சைக்கான செலவு மருத்துவமனைக்கு மருத்துவமனையோ, குடலிறக்க வகைகளுக்கோ மாறுபடும் என்பதை கிட்டத்தட்ட அனைவரும் அறிந்திருப்போம். மேலும் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அறுவை சிகிச்சை விலை மாறுபாட்டுக்கான பல காரணிகளில் ஒன்று குடலிறக்க மெஷ்களின் விலை என்பதை அறியலாம். ஏன் பல வகையான ஹெர்னியா மெஷ்கள் உள்ளன என்று தெரியுமா? வாருங்கள் அலசுவோம்.
ஹெர்னியா மெஷ் பற்றிய மேலும் சில விவரங்கள்
ஹெர்னியா மெஷ், அல்லது அறுவைசிகிச்சை மெஷ், குடலிறக்க குறைபாடு அல்லது ஓட்டையை மூடும் ஒரு மருத்துவ தயாரிப்பு ஆகும். குடலிறக்கத்தைச் சுற்றியுள்ள சேதமடைந்த திசுக்களை இந்த மெஷ் மூடுவதால், ஹெர்னியா குணமடையத் தொடங்குகிறது. குடலிறக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் குடலிறக்கத்தைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் மெஷ்ஷை வைத்து, இருக்கும் ஹெர்னியா நிலைக்கு எது சிறந்தது என்பதை கருத்தில் கொண்டு தையல்கள், ஸ்டேபிள்ஸ் அல்லது பசை ஆகியவற்றைக் கொண்டு இணைக்கிறார்கள். மெஷ்ஷில் உள்ள துளைகள் திசுக்களை இந்த மருத்துவ சாதனத்தில் வளர அனுமதிக்கின்றன. இந்த வகையில், குடலிறக்க மெஷ்கள் குடலிறக்கத்தை மூடுவதற்கும், குணப்படுத்துவதற்கும் உதவுகின்றன.
பல வகையான ஹெர்னியா மெஷ்கள் ஏன் உள்ளன?
இங்குவினல் குடலிறக்கம், கீறல் குடலிறக்கம் (Incisional Hernia), தொப்புள் குடலிறக்கம், ஹையாடஸ் குடலிறக்கம், போன்ற பல வகையான குடலிறக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு குடலிறக்க வகையும் அவற்றிற்கு சிகிச்சையளிப்பதில் வெவ்வேறு சவால்களைக் கொண்டுள்ளன. வெவ்வேறு வடிவத்தில் இருக்கும் ஹெர்னியா ஓட்டை, அதன் தன்மை, அதை மூடுவதற்கு இருக்கும் சவால்கள், இவற்றையெல்லாம் பொறுத்தே பல்வேறு வகையான குடலிறக்க மெஷ்கள் இருக்கின்றன. இது தவிர, தரம் என்ற மற்றொரு காரணியும் இருக்கிறது. வேறுபாடுகளுடன் கூடிய தரத்தில் கூட நிறைய மெஷ்கள் கிடைக்கின்றன. ஒரு நல்ல அறுவை சிகிச்சை நிபுணர் தான் பயன்படுத்தும் ஹெர்னியா மெஷ்ஷின் தரத்தில் எப்போதுமே சமரசம் செய்துக்கொள்ள மாட்டார்.
உடலில் கணிசமான தசையளவு, ஆரோக்கியமான திசுப்படலம், எளிமையான குடலிறக்கத்துடன் இளமையாக ஒரு நோயாளி இருந்தால், அவருக்கு ஒரு எளிய ஹெர்னியா மெஷ் போதுமானதாக இருக்கும். ஆனால் அதற்கு நேர்மாறாக, நோயாளிக்கு குறைவான தசைகள் இருந்தாலோ, மெல்லிய திசுப்படலம் இருந்தாலோ, வயிறு தொளதொளவென்று இருந்தாலோ, அவர் வயது முதிர்ந்தவராக இருந்தாலோ, அடிவயிற்றில் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ, அவருக்கு ஒரு எளிய ஹெர்னியா மெஷ் போதுமானதாக இருக்காது. இதேபோல், நோயாளி ஒரு பெண்ணாக இருந்தாலோ, அவர் குழந்தை பெற செசெரியன் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலோ, மெல்லிய திசுப்படலத்துடன் கூடிய வயிற்றை கொண்டிருந்தாலோ அவர்களுக்கும் குடலிறக்கம் இருக்கும்பட்சத்தில் அதை தீர்க்க ஒரு எளிய ஹெர்னியா மெஷ் போதுமானதாக இருக்காது.
குடலிறக்க பகுதி எவ்வாறு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது கூட முக்கிய பங்கு வகிக்கும் மற்றொரு காரணியாகும். ஒரு பொதுவான விதியாக, குடலிறக்க மெஷ் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தவிர்க்கப்படுகிறது. ஏனென்றால், மெஷ்கள் கிருமித்தொற்றோடு வினைபுரிந்து சிக்கல்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, tension repair என்று சொல்லக்கூடிய ஹெர்னியா அறுவை சிகிச்சை முறை அவர்களுக்கு சாத்தியமில்லை என்றால், அவர்களுக்கு bioabsorbable hernia mesh என்ற உடலினால் படிப்படியாக உறிஞ்சப்படும் ஹெர்னியா மெஷ் வகையை அறுவை சிகிச்சை நிபுணர் பயன்படுத்த்துவார்.
உடலானது குடலிறக்க மெஷ்களை நிராகரிக்கக்கூடாது. அதைச் சுற்றியுள்ள உறுப்புகளுடன் ஒட்டிக்கொள்ளக்கூடாது. அதுவும் இல்லாமல் உள்உறுப்புகள் அதன் இயக்கத்தால் குடலிறக்க மெஷ்களை தொடர்ந்து இழுப்பதும், அதனால் தொடர்ந்து வலி ஏற்படுவதும், அல்லது உள்உறுப்புகளின் செயல்பாடுகளைத் தடுக்காமல் இருப்பதும் மிக முக்கியமாக கருதப்பட வேண்டிய சில காரணிகள் ஆகும். இதை எல்லாம் மனதில் வைத்தே எந்த வகை ஹெர்னியா மெஷ் வைக்கலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது.
ஹெர்னியா மெஷ்ஷில் ஏற்பட்டிருக்கும் மருத்துவ முன்னேற்றங்கள்
சமீபத்திய நோயை கண்டறியும் நுட்பங்கள் (diagnostic methods) முன்னேற்றம் அடைந்ததன் காரணமாகவும், மருத்துவ தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாகவும், குடலிறக்கம் (குடலிறக்கத்தின் நோய்க்குறியியல்) பற்றிய சிறந்த புரிதல் ஆகியவற்றின் காரணமாகவும், கடந்த 20 ஆண்டுகளில் ஹெர்னியா மெஷ்களில் புதுமைகளுக்கு வழிவகுத்துள்ளன.
ஹெர்னியா மெஷ் வகைகளை தீர்மானிக்கும் காரணிகள்
– நோயாளிக்கு இருக்கும் குடலிறக்க வகை
– குடலிறக்க பகுதியில் கிருமித்தொற்று இருப்பது
– நிலைமை அவசரநிலையா இல்லையா என்பது
– மெஷ்ஷை தோலுக்கு அடியில் வைக்கப்பட வேண்டுமா அல்லது அடிவயிற்றின் உள்ளே வைக்கப்பட வேண்டுமா என்பது
சுருக்கமாக, ஒவ்வொரு சூழ்நிலைக்கும் எந்த குடலிறக்க மெஷ் வகை பொருத்தமானது என்பதை அறுவை சிகிச்சை நிபுணர் தீர்மானிக்கிறார். நோயாளிக்கு ஏற்ற ஹெர்னியா மெஷ் வகையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், இந்த காரணிகள் அனைத்தும் அறுவை சிகிச்சை நிபுணரால் கவனமாக பரிசீலிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால் தான் நிறைய வகை ஹெர்னியா மெஷ்கள் உள்ளன.