மாதவிடாய் நின்றுவிட்டால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை எப்படி எதிர்கொள்வது
வயது ஆக ஆக நமக்கெல்லாம் உடல் எடை அதிகரிக்கும் என்பது உண்மைதான். பெண்களுக்கு பூப்பெய்திய பிறகும், கருத்தரித்த பிறகும், மாதவிடாய் நின்ற பிறகும், ஆண்களுக்கு வயதான பிறகும் உடல் எடை கூடுவது இயல்பு. ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் மாற்றம், தசை அளவு குறைதல், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்கள் உடல் எடையை கூட்டுகின்றன.
வயதான பெண்களுக்கு, குறிப்பாக அவர்களது மாதவிடாய் நின்றபிறகு, அவர்களது வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு படிந்து இருக்கும். இந்த கொழுப்பு உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, அதிக கொலஸ்ட்ரால் அளவு போன்ற பிரச்சினைகளை தரக்கூடியது ஆகும். மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை நிறுத்த முடியாது என்றாலும் கூட, நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களையும், நம் உணவு முறையில் சில மாற்றங்களையும் கொண்டு வந்தால் அதிகமாக உடல் எடை போடுவதைத் தவிர்க்கலாம்.
மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் உடல் எடை அதிகரிப்பைக் குறைக்க 3 வழிகள்
உடலில் தசையை அதிகப்படுத்துவது
வயது ஏற ஏற நம் உடலில் உள்ள தசை அளவு குறைகிறது. அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றத்தினாலும் அதிக உடற்பயிற்சி இல்லாததாலும் இந்த தசை குறைதல் ஏற்படுகிறது. உடலில் அதிகப்படியான தசை அதிகப்படியாக கலோரிகளை எரிக்க பயன்படுகிறது. தசைகள் குறையும் பட்சத்தில் கலோரிகள் அதிகம் எரிக்கப்படுவது இல்லை. உடற்பயிற்சி செய்வதால் எடை அதிகரிப்பு குறைந்தாலும், ஒருவரின் மனநிலையை நேர்மறையாக மாற்றி அவரின் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு வழிவகுக்கிறது. Resistance training என்ற வழிமுறையை பின்பற்றினால் உடலில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகள் மாதவிடாய் முடிந்த பெண்களுக்கு உதவியாய் இருக்கின்றது. இருக்கின்ற தசைகளை தக்கவைத்து வயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பை குறைக்க வகை செய்கிறது.
உங்கள் எடையை அடிக்கடி சரி பாருங்கள்
உங்களுடைய உடல் எடையை அடிக்கடி சரிபார்க்கும் பட்சத்தில் உங்களுக்கு எந்த அளவிற்கு உடல் எடை கூடுகிறது என்று தெரியவரும். இப்படி அடிக்கடி சரிபார்க்கும் போது உங்களது உடற்பயிற்சியையும் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதிலும் இன்னும் அதிகப்படியான கவனம் செலுத்த உங்களால் முடிகிறது. குறைந்தது வாரத்திற்கு ஒரு முறை உங்கள் எடையை குறித்து வைத்துக் கொண்டால் நல்லது. உடல் எடையை சரி பார்க்கும் போது குறைந்தபட்ச உடையை அணிந்து கொண்டு உடல் எடைக் கருவியின் மேல் நிற்கவும்.
உணவுமுறை மாறுதல்கள்
குறைவாக சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற கூற்றில் உண்மையில்லை. எடையை குறைக்க வேண்டும் என்றால் ஊட்டத்தை குறைக்காமல் அதிகப்படியான கலோரிகளை குறைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன குடிக்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள் சிறுதானியங்கள் காய்கறிகள் ஆகியவை பதப்படுத்தப்பட்ட உணவுகளை விட சிறந்தவை ஆகும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். பயிறு வகைகள், கடலைகள், சிக்கன், முட்டை, மீன் போன்ற உணவுகள் அதிக புரதம் கொண்டது. சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை கூடுமானவரை தவிருங்கள். இவைகளில் தான் அதிகப்படியான கலோரிகள் உள்ளன. மதுபானங்கள் அருந்துவதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் மதுபானத்தால் அதிகப்படியான கலோரிகள் உங்கள் உணவின் மூலம் கிரகித்துக் கொள்ளும் வாய்ப்பு மிக அதிகம்.
உங்கள் உடலுக்கு சூரிய ஒளி கிடைக்கச் செய்யுங்கள்
தேவைக்கேற்ற சூரிய ஒளி நம் மீது படுவது உடல் எடையை சரியான விகிதத்தில் வைத்திருக்க உதவுகிறது. சூரியஒளி நமக்கு தேவையான வைட்டமின்-D சத்து நம் உடலுக்கு சேர வகை செயகிறது. வைட்டமின்-D குறைபாட்டால் மன உளைச்சல், எலும்புகள் பலவீனம் அடைதல், போன்றவை நிகழ்கின்றன. நம்மை உற்சாகமாக வைத்திருப்பது மட்டுமின்றி, நம்மை நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் வைட்டமின்-D உதவுகிறது. இந்த வைட்டமின் தான் நம் உடலில் உள்ள எலும்புகளில் கால்ஷியம் தாது சேர்ந்து வலிமையாக்க உதவுகிறது. உறுதியான எலும்புகள் நம் உடல் எடையை சரியான விகிதத்தில் வைக்கிறது.