உடல் பருமன் நோயா அல்லது வாழ்க்கைமுறை மாற்ற நிகழ்வா?
2013ம் ஆண்டு, அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (American Medical Association) உடல் பருமனை நோய் என்று வகைப்படுத்தத் தொடங்கியது. மருத்துவ உலகின் தெளிவான ஒரு நடவடிக்கை என்றே இதனை கூற வேண்டும். உலகின் முன்னோடி மருத்துவ கூட்டமைப்பு எதற்காக உடல் பருமனை ஒரு நோய் என்று வகைப்படுத்தியது?
நோய் என்று வகைப்படுத்திய காரணங்கள்
- சாப்பிட்டது போதும் என்ற சமிஞையை (signal) “லெப்டின்” என்ற ஹார்மோன் (hormone) நமது மூளைக்கு வழங்குகிறது. எதையாவது தின்றுக்கொண்டே இருக்கும் பருமனானவர்களுக்கு இந்த லெப்டின் ஹார்மோன்கள் அதிகப்படியாகவே சுரப்பதால், மூளை இந்த சமிஞையை சட்டைப்படுத்துவதை நாளடைவில் நிறுத்திக்கொண்டுவிடுகிறது. ஆக இந்த ஹார்மோன் தின்பதை நிறுத்துவதற்கு பயனில்லாமல், வலுவிழந்த நிலைக்கு போய்விடுவது ஒரு காரணம்.
- உடல் பயிற்சி செய்துக்கொண்டோ, செய்யாமலோ, டையட் (diet) எடுக்க நேரிட்டால், நமது உடல் பட்டினி கிடக்கிறது என்று மூளை நினைக்க தொடங்குகிறது. அதனால் உடலானது, தேவைக்கு அதிகமாக உணவு வேண்டும் என்ற சமிஞையை கொடுக்கிறது. அதுமட்டுமில்லாமல், உடல் கலோரிகளை தாராளமாக எரித்த நிலை போய், அதனை சிக்கனப்படுத்தும் நிலைக்கு இறங்கிவிடும். இந்த நிலையில் மேலும் உணவு வேண்டும் என்ற சமிஞையை உடல் மூளைக்கு தரும். பசியை மேலும் மேலும் இது தூண்டுவதால், பருமனை நோய் என்றே வகைப்படுத்த வேண்டியுள்ளது.
- இந்த ஒரு பிரச்னை சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், போன்ற மற்ற நோய்களை உங்களுக்கு தந்துவிடுவதால், உடல் பருமனை ஒரு நோய் என்றே அழுத்தமாக சொல்லலாம்.
உடல் பருமன் வாழ்க்கைமுறையினால் வருவதாஅல்லது சமூக பண்பாட்டு மாற்றத்தால் வருவதா?
இந்த கூற்றில் ஓரளவு உண்மை உள்ளது. உடல் பருமனை நோய் என்று மட்டுமில்லாது, ஒரு கொள்ளை நோய் (epidemic) என்றே பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் தொடர்ந்து சொல்லிவருகின்றன. அறை நூற்றாண்டுகளுக்கு முன்னர், இப்போது இருந்ததைவிட குறைவான விகிதத்திலேயே பருமனானவர்கள் இருந்தார்கள். காரணம்…
- விரைவு உணவு என்று சொல்லப்படும் பாஸ்ட் பூட் (fast food) கலாச்சாரம் வேகமாக பரவியது இந்த காலக்கட்டத்தில் தான்.
- இரவு நேர கேளிக்கைகள் (late night culture) தவறான நேரத்தில் உணவு உண்ணும் பழக்கத்தை நம்மில் பலருக்கு உண்டு பண்ணியதும் இந்த காலக்கட்டத்தில் தான். அகால இரவு நேரத்தில் குப்பை உணவுகளை (Junk foods) உண்ணும் பழக்கமும் சேர்ந்தே தொற்றிக்கொண்டதும் ஒரு காரணம்.
- இரவு நேர பணிகள் (Night Shift Jobs) மன அழுத்தத்தை அதிகப்படுத்துவதால், அந்த மன அழுத்தமே நிறைய உணவை உட்கொள்ளத் தூண்டுகிறது. இது உடல் பருமன் ஆவதை ஊக்கப்படுத்துகிறது.
- இப்படி நேரம் தவறிய பழக்கவழக்கங்கள், உங்கள் உடலில் ஹார்மோன் சுரக்கும் முறைமையை குழப்பி மாற்றிவிடுவதால், எல்லா உபாதகைளும் வந்து சேருகின்றன.
ஆக எங்கள் கருத்துப்படி, உடல் பருமன் ஒரு நோய் மட்டுமில்லை, அது வாழ்கைமுறை மாற்றத்தினாலும், சமூக கலாச்சார மாற்றத்தினாலும் ஏற்பட்ட ஒரு நிலை ஆகும்.