பித்தப்பையை எடுத்த பிறகும் பேலியோ டயட்டை தொடரலாமா?
கல்லீரலுக்கு கீழே பை போல இருக்கும் பித்தப்பையில் தான் அடர்த்தியான நிலையில் பித்தநீர் சேமிக்கப்பட்டிருக்கும். கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்ட பிறகோ அல்லது அதிகமான உணவை உட்கொண்ட பிறகோ சேமிக்கப்பட்டிருக்கும் இந்த பித்தநீர், பித்தநீர் குழாய் வழியே வயிற்றுக்குள் அனுப்பப்படுகின்றன. நமது உணவில் அதிகமான கொழுப்பு இருக்கும் பட்சத்தில் பித்தப்பை அதிகமாக வேலை செய்கிறது. பேலியோ உணவுமுறை அதிகப்படியான கொழுப்பு மற்றும் புரதத்தால் ஆன ஒரு டயட் ஆகும். இந்த உணவு முறையில் மிகக் குறைந்த அளவே மாவுச்சத்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. கொழுப்பை செரிக்க பித்த நீர் அவசியம் என்பதால் பித்தப்பை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் இந்த பேலியோ உணவு முறையை பின்பற்றலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கான விடையை இங்கே காண்போம்.
பித்தப்பையை அகற்றிய பின்னர்
பித்தப்பையை அகற்றி விட்டால் பித்த நீரை சேமிக்க எந்த உறுப்பும் இல்லை. இதனால் கல்லீரலில் சுரக்கப்படும் பித்தநீர் எங்கும் சேமிக்கப் படாமல் அப்படியே வயிற்றுக்குள் இறங்குகிறது. இது சில சமயங்களில் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தலாம். இதற்கென்றே சில மருந்துகளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள்.
பேலியோ பற்றிய அறுவை சிகிச்சை நிபுணரின் கருத்து என்ன?
பொதுவாகவே மருத்துவர்கள் அதிக கொழுப்பு எடுக்க வேண்டாம் என்றே பரிந்துரைப்பார்கள். அதேநேரம் அதிக நார்ச்சத்துள்ள உணவு முறைகளை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைப்பார்கள். பித்தப்பை அகற்றப்பட்டு இருந்தால் விருந்துகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதாவது ஒரே வேளையில் அதிகமாக சாப்பிடக்கூடாது. ஆனால் பேலியோ உணவுமுறை என்பதே அதிக கொழுப்பு சத்துடைய உணவு முறைதான் இல்லையா. அப்படி என்றால் என்ன செய்ய வேண்டும்? பித்தப்பையை அகற்றிய பின்னரும் பேலியோ உணவு முறையை தொடரலாமா? இதற்கான விடை ஆமாம் என்று தான் சொல்ல வேண்டும்.
பேலியோ உணவு முறையில் அதிகமான கொழுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இல்லை. உணவில் அதிகமான நார்ச்சத்துடைய சில காய்கறிகளை கூட பேலியோ உணவுமுறை பரிந்துரைக்கிறது. உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புகளை உடைய உணவுகளை மட்டும் சிறுசிறு அளவுகளில் எடுத்துக்கொள்ள பேலியோ உணவுமுறை அனுமதிக்கிறது.
பேலியோ உணவுமுறை என்பது ஒருவித ஒழுங்கு. அதாவது குப்பை உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு புரதம், கொழுப்பு, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வதே பேலியோ ஆகும்.
ஒரே வேளையில் அனைத்து உணவுகளையும் எடுத்துக் கொள்ளாமல் அதனை சிறிய சிறிய அளவில் நாள்முழுக்க இடைவெளிவிட்டு எடுத்துக்கொள்வதே சிறந்த உணவு முறையாகும். பித்தப்பை எடுக்கப்பட்டதால் பித்த நீர் சுரந்து கொண்டே இருக்கும் வயிற்றுக்கு சிறிய இடைவெளிகளில் உணவு கிடைப்பது நல்லதே. அவ்வாறாக எடுத்துக் கொள்ளப்படும் உணவிலுள்ள நல்ல கொழுப்பு சிறப்பாக செரிக்கப்படுகிறது.
சரியான விகிதத்தில் உணவைப் பகிர்ந்து வைத்துக்கொண்டாலும் அதனை ஒரே வேளையில் உட்கொண்டு விடாதீர்கள். உணவைச் செரிக்க பித்தநீர் மொத்தமாக இல்லாத காரணத்தால் நீங்கள் சிறுகச் சிறுக சாப்பிடுவதே சிறந்தது. உணவில் உள்ள சிறிய அளவிலான கொழுப்புச் சத்தை கரைத்து செரிக்க துளித்துளியாய் வந்துசேரும் பித்த நீரேபோதுமானதாகும்.
மிக முக்கியமாக எல்லாவிதமான நல்ல கொழுப்புள்ள உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். பித்தப்பை அகற்றப்பட்டால் சில சமயங்களில் சில உணவுகள் உங்கள் உடலுக்கு சேராது. அத்தகைய உணவுகளை இனம்கண்டு அவைகளை முற்றிலும் ஒதுக்கி விடுங்கள். இப்படி மெல்லமாக உங்கள் உடலை பேலியோ உணவுமுறைக்கு தயார் செய்து கொள்ளுங்கள்.
பேலியோ உணவு முறையில் உள்ள வாரியர் டயட் எடுத்துக்கொள்ளலாமா?
கண்டிப்பாக வேண்டாம். வாரியர் டயட் முறை என்பது அதிகமான நேரம் உணவு எதுவும் உட்கொள்ளாமல் நோன்பு நிலையில் உடலை வைத்து, பின்னர் சிறிய இடைவெளியில் கொழுப்பும் புரதமும் நிறைந்த உணவை உட்கொள்ளும் ஒரு முறையாகும். வாரியர் டயட் முறையில் ஏறக்குறைய 16 மணி நேரம் நோன்பு இருப்பார்கள். அதற்குப் பின்னர் நிறைய உணவை எடுத்துக்கொள்ளும்போது அது அனேகமாக விருந்து போலவே இருக்கும். பித்தப்பை அகற்றப்பட்ட உங்கள் உடலுக்கு இந்த உணவு முறை கண்டிப்பாக பிரச்சினையை உண்டாக்கும். சுருங்கச் சொல்வதென்றால் உங்களுடைய பித்தப்பை அகற்றப்பட்டு இருந்தால் வாரியர் டயட் முறையை கண்டிப்பாக மேற்கொள்ளாதீர்கள்.