ஹெர்னியா அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
குடலிறக்கம் கண்டறியப்பட்ட பின்னர், பலர் ஆரம்ப கட்டங்களில் அறுவை சிகிச்சை செய்ய தயங்குகிறார்கள். ஆனால் பின்னர் வாழும்போதே அதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள், உயிருக்கு ஆபத்தான சூழல் ஆகியவை தெரியவரும்போது, அவர்கள் அறுவை சிகிச்சையை தேர்வு செய்கிறார்கள். குடலிறக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு தங்கள் வழக்கமான அன்றாட செயல்களை மீண்டும் தொடங்குவது குறித்து பலருக்கு கேள்விகள் உள்ளன. குடலிறக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு செய்ய வேண்டியவைகளும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இங்கே பார்ப்போம்.
ஹெர்னியா அறுவை சிகிச்சை – லாபரோஸ்கோபி அல்லது திறந்த அறுவை சிகிச்சை முறை
பெரும்பான்மையான நோயாளிகள் தங்கள் குடலிறக்கத்திற்கு சிகிச்சையளிக்க லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். சிலர் மட்டுமே திறந்த அறுவை சிகிச்சை முறைக்கு உட்படுகிறார்கள். ஹெர்னியாவில் உள்ள சிக்கலின் அடிப்படையில் குடலிறக்க அறுவை சிகிச்சை நிபுணர் இதனை முடிவு செயகிறார். பொதுவாக, திறந்த அறுவை சிகிச்சை முறைகள் கீறல் குடலிறக்கம் (Incisional Hernia) ஏற்பட்ட நோயாளிகளுக்கே அதிகம் தேவைப்படுகின்றன. அறுவைசிகிச்சை முறை எதுவாக இருந்தாலும், குடலிறக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒருவர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே வித்தியாசம் என்னவென்றால், திறந்த அறுவை சிகிச்சை முறைக்கு உட்பட்டவர்கள் அவர்கள் குணமடையும் போது கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் குணமாகும் காலம் பொதுவாக அவர்களுக்கு அதிகமாக இருக்கும். எனவே அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.
குடலிறக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
– குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்ததும் மயக்க மருந்தின் விளைவு முழுமையாக விட்டுப்போக சிறிது நேரம் ஆகும். லோக்கல் அனெஸ்தீஸியா மயக்க மருந்து சில மணிநேரம் ஆகலாம். பொது என்று சொல்லப்படும் ஜெனரல் அனெஸ்தீஸியா மயக்க மருந்தின் விளைவு ஒரு நாள் முழுதும் கூட நீடிக்கக்கூடும். அதனால்தான் நோயாளி ஒரு சிக்கலான திறந்த அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால் குறைந்தது 3-5 நாட்களுக்குப் பிறகே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
– முதல் சில நாட்களில், உங்கள் குடலிறக்க அறுவை சிகிச்சை நிபுணர் திரவ உணவை பரிந்துரைக்கிறார். அறுவைசிகிச்சை நிபுணர் ஒப்புதல் அளித்த பிறகே திட உணவினை எடுத்துக் கொள்வது மீண்டும் தொடங்கப்படலாம். நீங்கள் லேபராஸ்கோபிக் குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு உட்பட்டிருந்தால், ஒரு நாளுக்குள் திட உணவை மீண்டும் தொடங்கலாம் என்று அறுவைசிகிச்சை நிபுணர் ஒப்புதல் அளிப்பார்.
– ஆரம்ப நாட்களில் வலி உணரப்படும். ஆனால் இந்த ஆரம்ப நாட்களில் கொடுக்கப்படும் வலி நிவாரணி மருந்துகள் உங்கள் வலியை ஆற்ற பெரிதும் உதவும். லேசான, தாங்கக்கூடிய வலி ஓரிரு நாட்கள் நீடிக்கும், இது சாதாரணமானது தான்.
– திறந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக குளிக்கக்கூடாது. அறுவைசிகிச்சை காயம் குணமடையும் போது மட்டுமே நீங்கள் அறுவை சிகிச்சை நிபுணரால் குளிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு மேல் ஈரமான துணையைக் கொண்டு உங்களைத் துடைத்துக்கொள்ளலாம். அறுவை சிகிச்சை காயப் பகுதியைத் தொடாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம்.
– இறுக்கமான அல்லது தடிமனான ஆடைகளை அணிய வேண்டாம். அவை தற்செயலாக அறுவை சிகிச்சை காயம் பகுதியை தேய்க்கும்போது, அது குணமாகும் நிலையை தள்ளிப்போடலாம்.
– அறுவைசிகிச்சை காயத்திலிருந்து ஏதேனும் திரவம் வெளியேறுவதைக் கண்டால், பீதி அடைய வேண்டாம். உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது பராமரிப்பாளரிடம் தெரிவிக்கவும். அவர்கள் காயத்தை சரியாக சுத்தம் செய்து உரிய ட்ரெஸ்ஸிங் செய்வார்கள்.
ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்த பிறகு – நீண்டகால முன்னெச்சரிக்கை (ஆறு மாதங்களுக்குப் பிறகு) நடவடிக்கைகள்
– நீங்கள் சாதாரண திட உணவை மீண்டும் தொடங்கலாம். இருப்பினும், ஒரு முன்னெச்சரிக்கையாக உங்கள் உணவை சத்தானதாகவும், நார்ச்சத்து நிறைந்ததாகவும் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். உடல் பருமனாக இருந்தால், உங்கள் எடையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவும். ஏனென்றால், உடல் பருமனாக இருந்தால், குடலிறக்கம் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது உணருங்கள்.
– மலச்சிக்கலைத் எப்போதும் தவிர்க்கவும். மலச்சிக்கலின் வாய்ப்பை அதிகரிக்கும் எந்த உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் உணவில் அதிக நார்ச்சத்தை சேர்க்கவும்.
– இருமல் மற்றும் தும்மல் கூடுமானவரை ஏற்படுவதை தவிருங்கள். பலமான தும்மலும், இருமலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை பலவீனமாக்கும்.
– தரையில் உட்கார்ந்துகொள்வது, அதிகமாக உடலை வளைப்பது போன்றவை ஆபரேஷன் செய்யப்பட்ட இடத்தை மேலும் பலவீனமாக்கும்.
– நீங்கள் ஜிம்மில் சேர்ந்தால் ஒருபோதும் அதிக எடையை தூக்க வேண்டாம். ஜிம்மில் மிதமான எடையை மட்டும் தூக்குங்கள். மிதமான பளு தூக்குதல் கூட உங்கள் தசைகளை அதிகரிக்கும். உங்களை அதுவே ஆரோக்கியமாக வைத்திருக்கும். அறுவைசிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சியை எப்போது தொடங்கலாம் என்று உங்கள் குடலிறக்க அறுவை சிகிச்சை நிபுணரிடம் கேளுங்கள். நீங்கள் திறந்த நிலை அறுவை சிகிச்சைக்கு உட்பட்டிருந்தால் 6 மாதங்களுக்குப் பிறகே ஜிம்மில் சேருமாறு உங்கள் மருத்துவர் ஆலோசனை வழங்கக்கூடும். ஆனால் நீங்கள் லேபராஸ்கோபிக் குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு உட்பட்டிருந்தால் குறைந்த மாதங்களிலேயே சேரலாம் என்று சொல்லுவார்.
– எல்பிஜி சிலிண்டர், தண்ணீர் கேன், தண்ணீர் அல்லது துவைத்த ஈரமான துணிகளைக் கொண்ட வாளி, கனமான பெட்டிகள் அல்லது சூட்கேஸ்கள் போன்றவற்றை ஒருபோதும் தூக்க வேண்டாம். அவற்றில் பெரும்பாலானவை சீரற்ற எடைகள் கொண்டிருக்கும். அதனால் இவை குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதிக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
– உங்கள் குடலிறக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குப் பிறகு உங்கள் பாலியல் செயல்பாட்டை (Sex life) மீண்டும் தொடங்கலாம். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் சிலர் அசௌகரியத்தை உணரக்கூடும். பாலியல் செயலில் ஈடுபடும்போது வலி ஏற்பட்டால் மெதுவாக செய்யுங்கள்.
– அடிவயிற்று தசைகள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயலையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும்.