பெண்களுக்கே அதிகமாக பித்தப்பை கற்கள் ஏற்படுகின்றதே! அது ஏன்?
பித்தப்பையில் கற்கள் ஏற்படும் வாய்ப்பு பொதுவாகவே பெண்களுக்கு ஐந்து மடங்கு அதிகம் என்று கூறுவார்கள். பெண்களுக்கே உரிய பால் உறுப்புகள் வளர்வதற்கும், பெண்களுக்குரிய குணநலன்கள் அமைவதற்கும் ஈஸ்ட்ரோஜன் என்று சொல்லக்கூடிய பெண் ஹார்மோன்கள் உதவி புரிகின்றன. மாதவிடாயை ஒழுங்கு படுத்துதல், கருப்பையின் உள்சுவர் தடிமனாக மாற்றுதல் போன்ற வேலைகளை இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செய்கிறது. இந்த ஹார்மோன் தான் பெண்களுக்கு அதிகமாக பித்தப்பை கற்கள் வரவழைக்கத் தூண்டுகிறதா?
பருமனான உடல்வாகு, மாதவிடாய் பருவம், மலச்சிக்கல், 40 சொச்சம் வயதுகளில் உள்ள பெண்கள், இவர்களுக்கே அதிகமாக பித்தப்பை கற்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்வதால், பெண்களுக்கு இந்த சிக்கல் அதிகம். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுடன், கொலஸ்ட்ராலும் ஒன்று சேர்ந்து கொண்டு, பித்தப்பை கற்கள் உருவாவதை ஊக்குவிக்கிறது.
பித்த நீரோட்டத்தின் மேல் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஏற்படுத்தும் தாக்கம்
பித்தநீர் குழாய் சிறு குடலில் சேரும் இடத்தில் சுருக்குத் தசை போன்ற ஓர் அமைப்பு இருக்கும். அதனை ஆங்கிலத்தில் sphincter of oddi என்று கூறுவார்கள். பித்தநீரை சிறுகுடலில் சேர்ப்பதற்கு, இந்த சுருக்குதசை விரிவதும், சுருங்குவதுமாக இருக்கும். அதிகமாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும் போது, இந்த சுருக்குத் தசை சுருங்கி விடுவது உண்டு. அதாவது பித்தநீரை சிறுகுடலில் அவ்வளவு எளிதாக ஒழுக விடுவது இல்லை.
பித்த நீரோட்டத்தின் மேல் கொலஸ்ட்ரால் என்ற கெட்ட கொழுப்பு ஏற்படுத்தும் தாக்கம்
அதிகமான நார்ச்சத்து உட்கொள்ளவில்லை என்றால், கொழுப்புச் சத்துகள் திரும்ப உடலால் உறிஞ்சப்படுகின்றது. பித்தநீர் பிரதானமாக கொழுப்பினால் ஆனதே. பித்தநீரின் இந்த தன்மையால், உணவில் உள்ள கொழுப்பை உறிஞ்ச உதவுகிறது. பித்த நீரை திரும்ப உடல் கிரகித்துக்கொள்ளும். உணவில் உள்ள கொழுப்பை அதிகப்படியாக பித்தநீர் உறிஞ்சிக் கொள்ளும் போது சிக்கல் ஏற்படுகிறது. இந்த அதிகப்படியான கொழுப்பும் பித்தநீரும் சேர்ந்த கலவையை, biliary sludge என்று கூறுகிறார்கள்.
பித்தப்பை கற்கள் உருவாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் பங்கு
உடலில் biliary sludge உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் போது, அதனோடு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் அதிகப்படியாக சுரந்தால், பித்தப்பை கற்கள் உருவாவதற்கு அதிகப்படியான வாய்ப்பு நிலவுகிறது. இந்த biliary sludge சிறுகுடலில் சேராமல், பித்தப்பைக்குள் திரும்ப வருகிறது. கெட்டியான கூழ் போன்ற தன்மையை உடைய இந்த biliary sludge பித்தப்பை கற்களாக மாறுகின்றன. சில சமயங்களில் இந்த கெட்டியான கூழ் கணையத்தில் இருந்து வரும் குழாயில் பின்னே வழிந்து, கணைய அழற்சியை (pancreatitis) ஏற்படுத்தலாம்.
குழந்தைப் பேறு மருத்துவம் ஏற்படுத்தும் தாக்கம்
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் எடுத்துக்கொள்ளும் மருத்துவமும் சில சமயங்களில் பித்தப்பை கற்கள் உருவாவதை ஊக்குவிக்கலாம். குழந்தைப்பேறு சிகிச்சைகள் பெரும்பாலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகப்படுத்துகின்றன. இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பித்தப்பை கற்கள் உருவாவது அதிகமாக நிகழலாம்.
பித்தப்பையில் கற்கள் உருவாவதை பெண்கள் எப்படி தடுக்க முடியும்?
பித்தப்பையில் கற்கள் உருவாவதை பெண்களால் தடுக்க முடியுமா? இந்தக் கேள்விக்கு சரியான பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் ஒன்று நாம் உட்கொள்ளும் உணவு. இந்த உணவு விஷயத்தில் மட்டுமே பெண்கள் சில கட்டுப்பாடுகளுடன் இருக்க முடியும். நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை பெண்கள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி உண்பதால், உணவில் அதிகமாக உள்ள கொழுப்பை திரும்ப உறிஞ்சிக் கொள்ளும் தன்மையை உடல் மட்டுப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து பொதுவாகவே உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கிறது. இதனால் பித்தப்பை கற்கள். உருவாவதற்கான வாய்ப்பு சற்றே குறைகிறது என்று வேண்டுமானால் கூறலாம். மற்றபடி பித்தப்பை கற்கள் ஏற்பட உறுதுணையாய் இருக்கும் மற்ற எந்த காரணிகளும் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.