வயிற்றுப் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையின் நன்மைகள்
வயிற்றுப் புற்றுநோய் என்று பொதுவாக அழைக்கப்படும் இரைப்பைப் புற்றுநோய், ஒரு கடினமான நோயறிதல் கொண்டது ஆகும். இதனால் தான் அனைத்தையும் உள்ளடக்கிய சிகிச்சை முறையை இது அவசியமாக்குகிறது. வயிற்றுப் புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருக்குமேயானால் அறுவை சிகிச்சை ஒரு சிறந்த சிகிச்சை முறையாக இருக்கும் . வீரியம் மிக்க திசுக்களை நீக்குவதற்கும், வெளிப்படும் அறிகுறிகளைக் குறைப்பதற்கும், இரத்த இழப்பை குறைப்பதற்கும், உடலுக்கு தேவையான ஊட்டத்தை எடுப்பதற்கும், புற்றுநோயிலிருந்து உயிர்வாழும் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் இந்த அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. வயிற்றுப் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையின் நன்மைகளையும், பல்வேறு வகையான அறுவை சிகிச்சை முறைகளையும் இந்த கட்டுரை விவாதிக்கிறது. வயிற்றுப் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு அறுவை சிகிச்சை ஏன் ஒரு முக்கியத் தேவையாகக் கருதப்படுகிறது என்பதையும் இது விவாதிக்கிறது.
வயிற்றுப் புற்றுநோய்க்கான சிகிச்சையாக அறுவை சிகிச்சை தேர்வு
வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில், கட்டி செல்கள் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டு, மற்ற உறுப்புகளுக்கு முன்னேறாமல் இருக்கும். இந்த நிலை மெட்டாஸ்டாசிசுக்கு முந்தைய நிலை ஆகும். இதுபோன்ற ஆரம்ப கட்டங்களில், அறுவை சிகிச்சை முக்கிய சிகிச்சை நெறிமுறையாக கருதப்படுகிறது. புற்றுநோய் செல்கள் பரவுவதை நிறுத்துவதையும், வீரியம் மிக்க திசுக்களை அகற்றுவதையும் நோக்கமாக அறுவை சிகிச்சை கொண்டுள்ளது. சில சூழ்நிலைகளில், நோய் பரவலைத் தடுக்க அருகிலுள்ள நிணநீர் முனையங்களும் (lymph nodes) அகற்றப்படுகின்றன. கட்டியின் இருப்பிடம் மற்றும் கட்டத்தைப் பொறுத்து அறுவை சிகிச்சை உத்தி மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
வயிற்றுப் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை வகைகள்
-
எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை (Endoscopic Resection)
எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை என்பது ஆரம்ப கட்டத்திலேயே இருக்கும் வயிற்றுப் புற்றுநோய்களுக்கு ஆரம்பத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறையாகும். இந்த செயல்முறை, பெரிய கீறல்கள் இல்லாமல் வீரியம் மிக்க திசுக்களை அகற்ற எண்டோஸ்கோப்பைப் பயன்படுத்தும் ஒரு குறைந்தபட்ச ஊடுருவும் நுட்பமாகும். வயிற்றுப் உட்புறச்சுவரில் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே இந்த செயல்முறை உதவும்.
-
பகுதி இரைப்பை அகற்றும் அறுவை சிகிச்சை (Partial Gastrectomy)
பகுதி இரைப்பை அறுவை சிகிச்சை என்பது புற்றுநோயானது வயிற்றின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே பரவும் போது செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். இந்த நடைமுறையில் வயிற்றின் சேதமடைந்த பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது. இது முடிந்தவரை வயிற்றைப் பாதுகாக்க செய்யப்படுகிறது.
-
மொத்த இரைப்பை அகற்றும் அறுவை சிகிச்சை (Total Gastrectomy)
புற்றுநோய் முழுமையாக முன்னேறி முழு வயிற்று முழுவதையும் பாதித்திருந்தால், முழுமையான இரைப்பை அறுவை சிகிச்சை எனப்படும் வயிற்றை அகற்றும் அறுவை சிகிச்சை அவசியம் ஆகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வயிறு இல்லாமல் செரிமான செயல்பாட்டைப் பாதுகாக்க வேண்டும். இது உணவுக்குழாயை நேராக சிறுகுடலுடன் இணைப்பதன் மூலம் செய்யப்படுகிறது.
-
நோய்த்தடுப்பு அறுவை சிகிச்சை (Palliative Surgery)
வயிற்றுப் புற்றுநோய் முற்றிய நிலைக்கு முன்னேறும்போது, நோய்த்தடுப்பு அறுவை சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறை தீவிர அசௌகரியம், இரத்தப்போக்கு அல்லது அடைப்பு போன்ற அறிகுறிகளைப் போக்க மட்டுமே செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. இந்த அறுவை சிகிச்சை புற்றுநோயை குணப்படுத்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வயிற்றுப் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையின் நன்மைகள்
-
புற்றுநோய் நீக்கம்
வயிற்றுப் புற்றுநோயை உடலில் இருந்து அகற்றுவதற்கான சிறந்த முறை சந்தேகத்திற்கு இடமின்றி அறுவை சிகிச்சையே ஆகும். ஆரம்பத்திலேயே அறுவை சிகிச்சை செய்தால், புற்றுநோய் செல்களை இது முற்றிலுமாக நீக்குவதால் நீண்டகாலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பை இது அதிகரிக்கிறது.
-
புற்றுநோய் பரவுவதைத் தடுத்தல்
அறுவை சிகிச்சையானது உடலின் பிற பகுதிகளுக்கு புற்றுநோய் பரவும் வாய்ப்பைக் குறைக்கிறது. கட்டியால் பாதிக்கப்பட்ட நிணநீர் முனைகள் (lymph nodes) மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களை அகற்றுவதன் மூலம் இது சாத்தியமாகிறது.
-
செரிமான செயல்பாட்டை மேம்படுத்துதல்
சில நேரங்களில் வளர்ந்து வரும் புற்றுநோய்க்கட்டி செல்கள் தடைகளையோ, விழுங்குவதில் சிக்கல்களையோ ஏற்படுத்தியிருக்கலாம். எனவே இந்த புற்றுநோய் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது சில நேரங்களில் நோயாளிகள் உணவை திறமையாக உட்கொள்ளவும், அதனை ஜீரணிக்கவும் உதவும்.
-
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
புற்றுநோய் ஒரு நிலைக்கு முன்னேறி, இறுதிக்கட்டம் என்று குறிப்பிடப்பட்டால், நோய்த்தடுப்பு அறுவை சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும். இந்த அறுவை சிகிச்சை நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த கட்டத்தில், புற்றுநோயை குணப்படுத்த முடியாது. எனவே நோயாளி அனுபவிக்கும் வலியையும், துன்பத்தையும் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
அறுவை சிகிச்சைக்கு முன் கருத்தில் கொள்ள வேண்டியவை
வயிற்றுப் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் அனைத்து நோயாளிகளும் அறுவை சிகிச்சைக்கு ஏற்றவர்கள் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை சிறந்த நடவடிக்கையாக இருக்கலாம் அல்லது சில உடல்நிலை சந்தர்ப்பங்களில் இல்லாமலும் இருக்கலாம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இது கட்டியின் இருப்பிடம், பொது ஆரோக்கியம், புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது போன்ற பல காரணிகளைப் பொறுத்தது ஆகும். பெரும்பாலும், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களை உள்ளடக்கிய பலதரப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழு ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனியாக மதிப்பீடு செய்து சிகிச்சையின் போக்கை தீர்மானிக்கிறது.
வயிற்றுப் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக அறுவை சிகிச்சை இன்னும் கருதப்படுகிறது. இது வாழ்க்கைத் தரத்தை அதிகரித்தல், புற்றுநோய் அறிகுறிகளைக் குறைத்தல், உயிர்வாழும் விகிதத்தை அதிகரித்தல் போன்ற முக்கிய நன்மைகளை வழங்குகிறது. புற்றுநோய் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போது அறுவை சிகிச்சை உதவியாக இருந்தாலும், சவாலான சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை முறைகளில் ஏற்படும் பிற முன்னேற்றங்களும் சிலசமயங்களி உதவுகின்றன. அறுவை சிகிச்சை விருப்பங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு திறமையான புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரை அணுகவும். உங்களுக்கோ, உங்கள் அன்புக்குரியவருக்கோ வயிற்றுப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், புற்றுநோய் நிபுணர்களே சரியான சிகிச்சை முறையை பரிந்துரைப்பார்கள்.