மன அழுத்தம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்குமா?
அனேகமாக நாம் அனைவருக்கும் இதற்கான பதில் தெரிந்திருக்கும். மன அழுத்தம் நம் உடலில் செயல்படும் செரிமான உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கிறது. மூளைக்கும் செரிமான மண்டலத்திற்கும் இடையில் இருக்கும் இணைப்பு மிகவும் சிக்கலானது ஆகும். மன அழுத்தம் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை பாதிப்பதால் உடலிலுள்ள அனைத்து இயக்கங்களும் அதனால் பாதிப்படைகின்றன.
செரிமான செயல்பாடுகளை நரம்புகளே கட்டுப்படுத்துகின்றன
குடல் நரம்பு மண்டலம் (Enteric Nervous System) தான் நம் உடலில் உள்ள செரிமான செயல்பாடுகளை மொத்தமாக கட்டுப்படுத்துகிறது. இந்த நரம்பு மண்டலத்தில் பல மில்லியன் நரம்புகள் உள்ளன. அவை அனைத்தும் நம் மூளையில் உள்ள மத்திய நரம்பு அமைப்பு (Central Nervous System) மொத்தமாக கட்டுப்படுத்துகிறது. ஒருவிதத்தில் ஒன்றோடொன்று இணைந்து இருக்கும் கணிப்பொறி அமைப்பை (LAN connection) இது ஒத்துள்ளது.
உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்குமான ரத்த ஓட்டத்தை நரம்புகளே கட்டுப்படுத்துகின்றன
செரிமான மண்டலத்திற்கு உள்ள ரத்த ஓட்டத்தையும் இந்த நரம்புகளே கட்டுப்படுத்துகின்றன. செரிமான உறுப்புகள் இயங்கு தசைகள் என்று கூறப்படும் Involuntary Muscles-இனால் ஆனவை. இந்த தசைகளின் இயக்கம் செரிமானம் நடக்க உறுதுணையாக இருக்கிறது. இந்த தசைகள் சுருங்கி விரிவடைய நரம்புகள் உதவி புரிகிறது. உதாரணத்திற்கு நம் வயிறு மிக்சி போல நகர்ந்து அரைக்கக்கூடிய ஒரு உறுப்பு ஆகும். வயிற்றில் உள்ள பல நரம்புகள் இந்த நகர்தலை சாத்தியமாகின்றன. இதுவே வயிற்றிலுள்ள உணவு கூழ் பதத்திற்கு செரிமானம் அடைய உதவுகிறது. இதனை ஆங்கிலத்தில் “Chyme” என்று கூறுவார்கள். இதில் அரைகுறையாய் செரிமானம் அடைந்த உணவு, நொதிகள் (Enzymes) மற்றும் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் கலந்திருக்கும்.
மன அழுத்தத்தினால் ஏற்படும் ஹார்மோன் மற்றும் நொதிகளின் ஏற்றத்தாழ்வுகள்
நம் ரத்தத்தில் கார்டிசால் என்ற ஹார்மோன் அளவை மன அழுத்தம் கூட்டுகிறது. இந்த கார்டிசால் ஏற்றம் உடலுக்கு குளுக்கோஸ் சத்தினை வழங்குகிறது. இது இரண்டு வழிகளில் நடைபெறுகிறது. முதல் வழியில் உடலுக்கு இன்னும் சர்க்கரை சத்து அதிகமான உணவை வழங்கச் சொல்லி மூளைக்கு கட்டளையிடுகிறது. இதனால் தான் மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் அதிகப்படியான உணவை உட்கொள்வார்கள். இரண்டாவது வழியில், உடலில் உள்ள சேமிக்கப்பட்ட புரதச்சத்தில் இருந்து குளுக்கோஸை ஈரலின் துணைகொண்டு உற்பத்தி செய்கிறது. இவ்வாறாக ரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸ் இருப்பதால் உடலை மென்மேலும் இன்சுலின் சுரக்கும்படி கட்டளை இடுகிறது. இது திரும்பத் திரும்ப நடைபெறும்போது உடல் இன்சுலின்-எதிர்ப்பு (Insulin Resistance) என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகப்படியான மன அழுத்தம் உள்ளவர்களாக இருக்கும் போது அவர்களது சர்க்கரைநோய் மோசமடைகிறது. ஆக ஹார்மோன் மற்றும் நொதிகளின் (Enzymes) ஏற்றத்தாழ்வு மன அழுத்தத்தினால் அதிகமாகி அவர்களது ஒட்டுமொத்த உடல் நலம் பாதிப்படைகிறது.
மன அழுத்தம் எப்படி செரிமானத்தை பாதிக்கிறது?
- குடல் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மன அழுத்தம், செரிமான மண்டலத்தில் காணப்படும் உறுப்புகளில் உள்ள நரம்புகளுக்கு போதுமான ரத்தத்தை வழங்க வேண்டாம் என்று கட்டளையிடுகிறது. இதனால் செரிமான உறுப்புகளின் நகர்வு பாதிக்கப்பட்டு செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன.
- மலச்சிக்கலுக்கான முதன்மை காரணம் மன அழுத்தம் ஆகும். நாள்பட்ட மலச்சிக்கல் மூலம், பிளவு என்று கூறப்படும் ஆசனவாய் வெடிப்பு போன்ற சிக்கல்களை உண்டு பண்ணலாம்.
- வயிற்றில் உணவு நிறைந்து, செரிமான செயல்பாடுகள் மந்தம் அடையும்போது ஒருவித குமட்டல் ஏற்படலாம்.
- அதே நேரத்தில் வயிற்றில் உணவு நிறைந்து மன அழுத்தமும் சேரும் பட்சத்தில் நரம்புகள் சரியாக செயல்படாமல் உணவுக்குழாய் சுழற்சி (Lower Esophageal Sphincter) திறந்த நிலை அடைந்து அதனால் நெஞ்செரிச்சல் என்று கூறப்படும் Acid Reflux ஏற்படலாம்.
- வயிற்றுப்புண் போன்ற மருத்துவ பிரச்சனைகளுக்கு மன அழுத்தம் நேரிடையான காரணம் இல்லை என்றாலும்கூட அவை முன்பே இருக்குமானால் அதனை மோசமான நிலைக்கு கொண்டு போக மன அழுத்தம் காரணமாக இருக்கும்.