ஆரோக்கியமான கல்லீரலுக்கு 10 அத்தியாவசிய வாழ்க்கை முறை பழக்கங்கள்
நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சேமித்தல், மாசுக்களை வடிகட்டுதல், செரிமானத்திற்கு உதவுதல் போன்ற பல அத்தியாவசிய பணிகளை கல்லீரல் செய்கிறது. எனவே ஆரோக்கியமான கல்லீரலை பராமரிப்பது நமது நல்வாழ்வுக்கு அவசியம் ஆகும். குறிப்பிட்ட சில வாழ்க்கை முறை நடைமுறைகளை தவறாமல் பின்பற்றுவது உங்கள் கல்லீரலின் ஆரோக்கியத்துக்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். பின்வரும் பத்து நடைமுறைகள் ஆரோக்கியமான கல்லீரலை பராமரிக்க உதவும்.
சமச்சீர் உணவு
ஆரோக்கியமான கொழுப்புகள், நல்ல புரதங்கள், பலவகையான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், இவை அனைத்தும் நன்கு சமச்சீரான உணவில் சேர்க்கப்பட வேண்டும். அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகள், கோலா போன்ற பானங்கள், தீய கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மது அருந்த வேண்டாம்
அதிகமாக மது அருந்துவது உங்கள் கல்லீரலை கடுமையாக பாதிக்கலாம். உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, மதுப்பழக்கத்தை கைவிடுங்கள்.
தினமும் உடற்பயிற்சி செய்தல்
கல்லீரல் ஆரோக்கியத்தை உள்ளடக்கிய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேண, தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி கொழுப்பு கல்லீரல் நோய் எனப்படும் Fatty Liver Disease அபாயத்தை குறைக்கிறது. மேலும் அது கல்லீரல் செயல்பாட்டை அதிகரித்து, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது.
ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள்
கொழுப்பு கல்லீரல் நோயை உடல் பருமனும், விரைவான உடல் எடை அதிகரிப்பும் ஏற்படுத்தலாம். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க சீரான உணவு, சீரான உடற்பயிற்சி, இவை இரண்டும் பயன் அளிக்கும்.
புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
புகைபிடித்தல் கல்லீரலை சேதப்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல் கல்லீரல் நோய்களை உருவாக்கும் அபாயத்தையும் அது அதிகரிக்கிறது. புகைபிடிப்பதை நிறுத்துவது ஆபத்தை குறைப்பது மட்டுமில்லாமல், கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளுங்கள் – ஊசிகளைப் பகிர்வதைத் தவிர்க்கவும்
ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற வைரஸ் தொற்றுகள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க, பாதுகாப்பான உடலுறவு மேற்கொள்ளுங்கள். ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதையும் தவிருங்கள்.
தடுப்பூசிகள்
ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி தடுப்பூசிகள் ஹெபடைடிஸ் வகை வைரஸ் நோய்களுக்கு எதிராக உங்கள் கல்லீரலைப் பாதுகாக்கும். ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி தடுப்பூசிகளைப் பெறுவதன் மூலம், இந்த வைரஸ் நோய்களிலிருந்து உங்கள் கல்லீரலை முன்கூட்டியே பாதுகாக்கலாம். இது குறித்து உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள்.
மருந்துப் பயன்பாட்டைக் குறைக்கவும்
சில மருந்துகளின் நீண்ட கால அல்லது அதிகப்படியான பயன்பாடு கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். இதுவே கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம். வைட்டமின்கள் அல்லது மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன், டோஸ் வழிமுறைகளை கவனமாக படியுங்கள். அது குறித்து உங்கள் மருத்துவரிடமும் பேசுங்கள்.
மன அழுத்த மேலாண்மை
நீடித்த மன அழுத்தம் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பதற்றத்தைக் குறைக்க, யோகா, தியானம் அல்லது ஏதேனும் ஒரு பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள். இது போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் நடைமுறைகளைப் பயன்படுத்துவது கல்லீரல் ஆரோக்கியத்துக்கும் நல்லதே.
உங்கள் வளர்சிதை மாற்ற நோய்களை நல்ல கவனிப்பில் வைத்திருங்கள்
நீரிழிவு, கொலஸ்ட்ரால், தைராய்டு, உயர் இரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்ற நோய்களுக்கு முதலில் சரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவற்றை நோயளவுக்கு கீழே வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
இந்த பத்து வாழ்க்கை முறைகளை உங்கள் அன்றாட பழக்க வழக்கத்தில் இணைத்துக்கொள்வது ஆரோக்கியமான கல்லீரலை ஆதரிக்கும் ஒரு செயலாகும். உங்கள் கல்லீரலின் நிலையைக் கண்காணிக்க வழக்கமான உடல் பரிசோதனைகளுடன் உங்கள் மருத்துவரிடம் பேசி, அவரது வழிகாட்டுதல் படி நடக்க நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கல்லீரலைக் கவனித்துக்கொள்வதன் மூலம் உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் பாதுகாப்பதில் நீங்கள் வாழ்வாங்கு வாழ்வீர்கள்.