18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

செரிமான ஆரோக்கியத்தின் மேல் வயிற்றுப் புண்கள் ஏற்படுத்தும் தாக்கம்

அல்சர் என்பது ஒரு பொதுவான செரிமானப் பிரச்சினையாகும். இது ஆரம்பத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. அதிகப்படியான அமில உற்பத்தி அல்லது பாக்டீரியா தொற்று காரணமாக வயிறு அல்லது சிறுகுடலில் உள்ள பாதுகாப்பு மண்டலமான உட்சுவறில் கீறல்கள் ஏற்படும்போது பெப்டிக் அல்சர் அல்லது வயிற்றுப் புண்கள் ஏற்படுகின்றன. அல்சரை ஏற்படுத்துவதற்கு காரணமான பாக்டீரியா ஹெலிகோபாக்டர் பைலோரி (எச். பைலோரி). இந்தப் புண்கள் ஒட்டுமொத்த செரிமான நல்வாழ்வைப் பாதிக்கலாம். அது மட்டுமில்லாமல் அசௌகரியம், ஊட்டச்சத்து குறைபாடுகள், செரிமானப் பிரச்சினைகள் போன்றவற்றை ஏற்படுத்தலாம். அதனால்தான் அல்சரால் ஏற்படும் விளைவைப் புரிந்துகொண்டு, அதற்கு எதிராக தடுப்பு நடவடிக்கை எடுத்து நமது செரிமான ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வலியுறுத்தப்படுகிறது.

அல்சர் செரிமான அமைப்பை எப்படி எல்லாம் பாதிக்கிறது

1. வயிற்றுப் புறணி சீர்குலைவு – இயற்கை பாதுகாப்பு

வயிற்றைப் பாதுகாக்க இயற்கையில் சளி போன்ற ஒரு படலம் நமது வயிற்றுப் புறணியில் உள்ளது. இந்த படலம் வயிற்று திசுக்களுக்கு அமிலம் தீங்கு விளைவிப்பதைத் தடுக்கிறது. தொற்று, நாள்பட்ட NSAID பயன்பாடு (ஸ்டீராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்), அதிக மது அருந்துதல் போன்ற காரணங்களால் இந்த புறணி மோசமடையும் போது, ​​புண்கள் உருவாகலாம். இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால் எரிச்சல், எரியும் வலி, இரத்தப்போக்கு போன்ற கூடுதல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

2. நாள்பட்ட அழற்சியும், அசௌகரியமும்

புண்கள் செரிமான மண்டலத்தில் தொடர்ந்து அழற்சியை ஏற்படுத்துகின்றன. இது வலி, வீக்கம் மற்றும் குமட்டல் உணர்வுகளை ஏற்படுத்துகிறது. உணவுக்குப் பிறகு அல்லது நீண்ட இடைவெளியில் உணவு இல்லாமல் இருக்கும்போது ஏற்படும் எரிச்சல் தீவிரமடையக்கூடும். புண்களால் ஏற்படும் எரிச்சலின் விளைவாக நமது அன்றாட நடவடிக்கைகளின் மேல் ஒரு வித சுணக்கமும், எரிச்சலும் ஏற்படக்கூடும்.

3. ஊட்டச்சத்து உறிஞ்சுதல் குறைபாடு

நாள்பட்ட புண்களால் இரும்புச்சத்து மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் உடலின் திறன் பாதிக்கப்படலாம். இதன் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன. புண்களால் உட்புற இரத்தப்போக்கு ஏற்படும்போது, ​​இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்த இரத்த இழப்பு இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது.

4. இரைப்பை குடல் இரத்தப்போக்கு அதிகரிக்கும் அபாயம்

கடுமையான புண்கள் உட்புற இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும். இதனால் மலம் கருமையாகத் தோன்றும். வாந்தியில் இரத்தம், தீவிர சோர்வு போன்ற பிற அறிகுறிகள் இரைப்பை குடல் இரத்தப்போக்கு இருக்கும்போது பொதுவாக ஏற்படும். உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இந்த நிலை உயிருக்கு ஆபத்தானதாக மாறலாம்.

வயிற்றுப் புண்களின் அறிகுறிகள்

வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு பின்வரும் அறிகுறிகள் ஏற்படலாம்:

  • எரிவது போன்ற வயிற்று வலி. இந்த வலி உணவுக்கு இடையில் அல்லது இரவில் அதிகரிக்கிறது
  • வாயில் ஒரு வித புளிப்பு சுவை
  • வாய் துர்நாற்றம் அல்லது ஹாலிடோசிஸ்
  • அஜீரணம் மற்றும் வீக்கம்
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • பசியின்மை மற்றும் விவரிக்க முடியாத எடை இழப்பு
  • அடர்ந்த, தார் நிற மலம் – இது உட்புற இரத்தப்போக்கின் அறிகுறியாகும்

இந்த அறிகுறிகளை நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிக்கல்களைத் தடுக்க தகுந்த மருத்துவ உதவியை நாட வேண்டும்.

வயிற்றுப் புண்களை நிர்வகித்தலும், தடுத்தலும்

1. சமச்சீர் உணவைப் பின்பற்றுங்கள்

சில உணவுகள் வயிற்றுப் புண்ணை அமைதிப்படுத்தும். மற்றவை புண் அறிகுறிகளை அதிகரிக்கக்கூடும். புண்ணை குணப்படுத்தும் உணவு என்பது ஏராளமான நார்ச்சத்து, நல்ல புரத மூலங்கள், தயிர், இட்லி போன்ற புரோபயாடிக்குகளைக் கொண்ட ஒன்றாகும். வயிற்றுப் புண் மோசமடைவதைத் தவிர்க்க காரமான உணவுகள், எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் பழங்கள், காஃபின் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

2. மன அழுத்தத்தைக் குறைக்கவும்

நாள்பட்ட மன அழுத்தத்தால் அல்சர் அறிகுறிகள் அதிகரிக்கக்கூடும். மன அழுத்தம் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கிறது. தியானம், ஆழ்ந்த சுவாசம், யோகா போன்ற செயல் முறைகள் மன அழுத்தத்துடன் நேரடியாக தொடர்புடைய செரிமான பிரச்சனைகளைக் குறைக்க பெரிதும் உதவும்.

3. NSAID பயன்பாட்டை அளவோடு வைத்திருக்கவும்

ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன் போன்ற NSAID மருந்துகளை மருந்துச் சீட்டு எதுவும் இல்லாமலோ அல்லது அடிக்கடி பயன்படுத்துவதோ வயிற்றுப் உட்சுவர் திசுக்களை சேதப்படுத்தும். நீங்கள் வலியால் அவதிப்பட்டு விரைவான நிவாரணம் விரும்பினால், மருத்துவரிடம் கலந்து பேசுங்கள். உங்கள் மருத்துவர் வயிற்றுப் புறணிக்கு குறைவான கடுமையை ஏற்படுத்தும் மாற்று மருந்துகளை பரிந்துரைக்கலாம்.

4. நோயறிதல்

எண்டோஸ்கோபி செயல்முறை மூலம் புண்களை நிர்வகிப்பதற்கும் தடுப்பதற்கும் நோயறிதல் செய்வது ஒரு சிறந்த வழி ஆகும். இது புண் இருக்கும் அளவை மதிப்பிட உதவுகிறது. வயிற்றுப்புண்களுக்கு ஒரு பொதுவான காரணம் எச். பைலோரி தொற்று ஆகும். இந்த பாக்டீரியாவின் இருப்பைக் கண்டறிய புண் திசுக்களின் பயாப்ஸி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை கொண்டு பொருத்தமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

5. மருத்துவ சிகிச்சை பெறவும்

உங்கள் வயிற்றுப்புண் அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்கவும். வயிற்று அமிலத்தைக் குறைக்க உங்கள் மருத்துவர் புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்களை (PPIs) பரிந்துரைக்கலாம். H. பைலோரியின் தொற்று காரணமாக வயிற்றுப்புண் ஏற்பட்டு இருந்தால், தொற்றைக் குறைக்க உங்கள் மருத்துவர் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பரிந்துரைப்பார்.

புண்கள் செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மேலும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அசௌகரியம், ஊட்டச்சத்து குறைபாடுகள், இரைப்பை குடல் இரத்தப்போக்கு போன்ற பிற கடுமையான நிலைமைகளுக்கு அது வழிவகுக்கலாம். உணவுமுறை, வாழ்க்கை முறை மாற்றங்கள், மருத்துவ சிகிச்சை போன்ற காரணிகளை நிர்வகிப்பதன் மூலம் புண்களை மிகச் சிறப்பாகத் தடுத்து நிர்வகிக்கலாம். குடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை நீண்ட காலத்திற்கு ஆதரிக்க முடியும். சீரான உணவைப் பின்பற்றுவதன் மூலமும் வயிற்றுப்புண்களைத் தூண்டும் உணவைத் தவிர்ப்பதன் மூலமும் இதை அடைய முடியும்.

Call Now