ஹெர்னியா என்றால் என்ன? ஹெர்னியா எப்படி நிகழ்கிறது?
ஹெர்னியா என்றால் என்னவென்று விளக்கம் கூறுவதற்கு முன், நம் மக்கள் இந்த குறைப்பாட்டை “ஹிரண்யா” என்று தவறாக சொல்லுவதை அதிகமாகவே காணலாம். முதலில் இந்த குறைப்பாட்டை “ஹிரண்யா” என்றில்லாமல், “ஹெர்னியா” என்றே கூறவேண்டும் என்பதிலிருந்து தொடங்குவோம்.
சரி, ஹெர்னியா என்றால் என்ன?
நம் உடம்பில் உள்ள உள்ளுறுப்புகள் இயற்கையாகவே ஒரு பை போன்ற அமைப்புக்குள்ளோ, அல்லது மெல்லிய தசை படலத்துக்கு உள்ளோ பாதுகாப்பாக அமைந்திருக்கும். இந்த மெல்லிய தசை படலம் கிழிந்தோ அல்லது தளர்வாகவோ ஆகும்போது, உள்ளுறுப்புகள் அதன் இடத்தை விட்டு வெளியே துருத்தத் தொடங்கும். இந்த நிலையே ஹெர்னியா என்று கூறப்படுகிறது.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், நம் சட்டையில் சிறிய ஓட்டை விழுந்தால், உள்ளே உடுத்தியிருக்கும் பனியன் வெளியே தெரிவது போல. ஆக ஹெர்னியா என்பது நோய் இல்லை என்பது இதிலிருந்து திட்டவட்டமாகத் தெரிந்துக்கொள்ளலாம்.
இந்த குறைபாடு வயிற்றுப்பகுதி (உதரம்), மூளை, முதுகுத்தண்டு, ஆகிய எந்த உள்ளுருப்புகளுக்கும் நிகழலாம்.
ஹெர்னியா நம் உடலில் அதிகமாக எந்தப் பகுதியில் ஏற்படுகிறது?
நமது உடலில் ஹெர்னியா குறைபாடு அதிகமாக நிகழும் இடம் வயிற்றுப்பகுதி / உதரம் (abdomen) ஆகும். உண்மையில் வயிற்றுப்பகுதி என்று கூறும்போது நமது உடலின் உள்ளே உள்ள பைபோன்ற, உண்ணும் உணவை செரிமானத்துக்கு வாங்கிக்கொள்ளும் வயிறை மட்டுமே நாம் குறிக்கவில்லை. உள்ளே இருக்கும் நம் வயிறு, சிறுகுடல், பெருகுடல், கணையம், ஈரல், போன்ற உறுப்புகளை கொண்ட பகுதியையே ஆங்கிலத்தில் “அப்டோமென்” என்கிறார்கள். இதற்கு நேர் தமிழ் சொல் “உதரம்” ஆகும். இந்த அனைத்து உதர உறுப்புகளையும் தாங்கிப்பிடித்திருக்கும் மெல்லிய தசை படலம் “உதரச்சுவர்” (abdominal wall) என்று அழைக்கப்படும். இந்த உதரச்சுவரில் ஓட்டை ஏற்படும்போதோ, அல்லது தளர்வு ஏற்பட்டாலோ, நமது குடல் பகுதி துருத்தும். உதரச்சுவரில் நிகழும் ஹெர்னியாவையே தமிழில் “குடலிறக்கம்” என்று கூறுகிறோம்.
ஆண்களுக்கு பொதுவாக விரையில் இந்த துருத்தம் நிகழும். ஆண்களுக்கு ஏற்படும் விரைவீக்கம் (Hydrocele) வேறு, இதனை குடலிறக்கத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது பெண்களுக்கு பெரும்பாலும் முன்னர் செய்துக்கொண்ட ஏதாவது அறுவை சிகிச்சையினாலேயே ஹெர்னியா நிகழ்கிறது.
உதரச்சுவரில் தளர்வு எதனால் நிகழ்கிறது?
உதரச்சுவரில் தளர்வு, பெரும்பாலும் பிறப்பிலேயே மரபு காரணமாக நிகழ்ந்திருக்கும். இந்த தளர்வு நாளடைவில் வயதாக ஆக ஓட்டை விழும் அளவிற்கு மாறலாம்.
அதிகமான உள் அழுத்தம் காரணமாகவே இந்த தளர்வு மேலும் தளர்வது அல்லது ஓட்டை விழுவது என்ற நிலைக்கு போகும். தம் பிடித்து செய்யும் அனேக வேலையினாலே ஹெர்னியா ஏற்படுகிறது. அதிகமான பாரம் சுமப்பது,விடாத தும்மல், தொடர்ந்த இருமல், பேதி, மலச்சிக்கல் போன்ற காரணங்கள் வயிற்றுப்பகுதியில் அழுத்தத்தை அதிகமாக்குவதால் நாளடைவில் ஹெர்னியா ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாகும்.